Published : 20 Jan 2015 10:31 AM
Last Updated : 20 Jan 2015 10:31 AM
ஜப்பானியர்கள் நேரத்தைப் பொன்னாக நினைப்பவர்கள். அவர்களால் சும்மா இருக்கவே முடியாது. எப்போதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான். நாம் சலூனுக்கு முடிவெட்டிக் கொள்ளப் போனால், சாதாரணமாக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்? அரை மணி நேரம். ஆனால், நேரத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுக்கும் ஜப்பானியர்கள் சலூனில் முடிவெட்டிக்கொள்ளப் போனால், குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். ஏன் தெரியுமா?
முடிவெட்ட ரூ.1,600
ஜப்பானில் சலூனுக்குப் போய் முடிவெட்டுவது ஒரு சடங்குமாதிரி நடக்கும். முதலில் வெந்நீர் டவல்களால் பலமுறை உடலைத் துடைப்பார்கள்: தோள்களை மஸாஜ் செய்வார்கள்: கழுத்தில் டவல் கட்டுவார்கள்: குடிக்க க்ரீன் டீ தருவார்கள்: டீ குடித்து முடித்தபிறகுதான் முடி வெட்டலே ஆரம்பிக்கும். ஷேவிங் கட்டாயம் செய்துகொள்ளவேண்டும்.
முடிந்தவுடன் ஷாம்பூவால் தலையைக் கழுவுவார்கள், ஈரம் போகத் துடைப்பார்கள். மொத்தம் ஒரு மணி நேரம் எடுக்கும். இதற்கு 3000 யென் (சுமார் 1600 ரூபாய்) செலவாகும்.
1997 காலகட்டம். டோக்கியோவில் சராசரி மாத வருமானம் 4 லட்சம் யென் (அன்றைய நிலவரப்படி, 1,20,000 ரூபாய்.) டோக்கியோ ஜனநெருக்கடியான நகரம். வீட்டு வாடகை மிக அதிகம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில், ஒற்றை பெட்ரூம் மாத வாடகை 1,40,000 யென். இதுபோக, கையில் மிஞ்சும் தொகை 2,60,000 யென். வீட்டில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தால், மாதாமாதம் முடி வெட்டவே 12,000 யென் ஆகும். இது மிகப் பெரிய தொகை. ஆகவே, மாதாமாதம் முடிவெட்டிக்கொள்வதற்குப் பதில், மக்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை முடி வெட்டிக் கொண்டார்கள். இதனால், சலூன்களின் வருமானம் குறையத் தொடங்கியது.
வருமானம் குறைந்தது
கஸ்டமர்களை ஈர்க்க, சலூன்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு, தங்கள் கடைகளில் ஆடம்பர அலங்காரங்கள் செய்தார்கள், வாடிக்கையாளர்களிடம் அதிக நேரம் செலவிட்டார்கள். ஆனால், வருமானம் அதிகரிக்கவில்லை. எல்லோருக்கும் லாபம் குறைந்தது. டோக்கியோவில் வசித்த க்யூனிட்டோ கோனிஷி (Kunito Konishi) ஒரு மெடிக்கல் கருவிகள் தயாரிக்கும் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்த்தார்.
நடுத்தர வர்க்கம். குறைந்த செலவில், குறைவான நேரத்தில் முடிதிருத்தும் சலூன்களுக்கு ஆசைப்பட்டார். ஆனால், அவர் விருப்பம் நிறைவேறாத ஆசையாக இருந்தது. ஏனென்றால், ஜப்பானில் முடி வெட்டிக் கொள்வது என்றால், மேலே சொன்ன அத்தனையையும் சலூன்கள் செய்தேயாகவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. காலம் காலமாக அத்தனை சலூன்களும் இந்தச் சம்பிரதாயத்தைப் பின்பற்றினார்கள். ஜப்பானிய சமுதாயம் பாரம்பரியங்களைப் பின்பற்றும் சமுதாயம். ஆகவே, சலூன்களும், தங்கள் வழக்கங்களை மாற்றிக்கொள்ள முயற்சிகளே எடுக்கவில்லை.
குறைந்த செலவில்…
தானே அப்படிப்பட்ட சலூன் தொடங்கலாமா என்று கோனிஷி நினைத்தார். அவருக்கு அதிகம் பணவசதி கிடையாது. ஆனால், தன் ஐடியா மேல் அபார நம்பிக்கை இருந்த்து. எடுத்த காரியங்களைப் பக்காவாகத் திட்டமிட்டுக் கனகச்சிதமாகச் செய்வது ஜப்பானியரின் வழக்கம். கோனிஷியும் இதைத்தான் செய்தார். ஏராளமான பொதுமக்களைப் பேட்டி கண்டார். “1000 யென் செலவில், பத்தே நிமிடங்களில் முடிவெட்டிக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?” என்னும் ஒரே கேள்வியைக் கேட்டார். 30 சதவீதம் பேர் “ஆமாம்” என்று பதில் சொன்னார்கள்.
சிறிய அளவில்…
1997. கோனிஷி QB ஹவுஸ் (QB House - QB என்றால், Quick Barber அல்லது Quick Beauty என்பதன் சுருக்கமாக இருக்கலாம்) என்னும் தன் முதல் சலூனைத் திறந்தார். மற்ற சலூன்களைவிட QB ஹவுஸ் முழுக்க முழுக்க வித்தியாசமானதாக இருந்தது. சாதாரணமாக ஜப்பானில் சலூன்கள் முக்கிய வீதிகளில், ஆடம்பரமாக இருக்கும். இவற்றுக்கு வாடகை மிக அதிகம். தான் திட்டமிடும் பிசினஸுக்கு இது கட்டுப்படியாகாது என்று கோனிஷிக்குத் தெரியும். ஆகவே, QB ஹவுஸ் ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்தில், ஒரு குட்டி அறையில் அடிப்படை வசதிகளோடு வந்தது. 10 நிமிட ஹேர்கட் 1000 யென் என்று கொட்டை எழுத்துக்களில், எல்லோரையும் ஈர்க்கும்படி கடையின் கண்ணாடியில் எழுதப்பட்டிருந்தது.
கடையின் வெளியே ஒரு வென்டிங் மெஷின். அதில் 1000 யென் நோட்டைப் போடவேண்டும். 1000 யென் தவிர வேறு எந்த நோட்டும் போட முடியாது. சில்லறை கொடுக்க ஆகும் நேரத்தைக் கம்மியாக்கும் வழி இது. டோக்கன் வரும். கடைக்கு வெளியே, எந்த டோக்கன் எண் உள்ளே போகலாம் என்று அறிவிப்பு பளிச்சிடும். அதன்படி, கடைக்குள் நுழையவேண்டும், நாற்காலியில் உட்காரவேண்டும். நாற்காலியில் இருக்கும் ஒரு கருவி நேரத்தைக் கணக்குப் போடத் தொடங்கும். முடி திருத்தும் கலைஞர் தயாராக இருப்பார்.
டவலுக்குப் பதில், கழுத்தில், ஒரு பேப்பரைச் சுற்றுவார். இப்போது முடிவெட்டல் ஆரம்பம். மனிதர்களின் முடி மாதத்துக்குச் சராசரியாக 12 மில்லி மீட்டர் முதல் 14 மில்லி மீட்டர்வரை வளரும். QB ஹவுஸ் முடிவெட்டுக் கருவிகள் இந்த அளவு முடியை வெட்டியெடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஷாம்பூ கிடையாது
சாதாரணமாக சலூன்களில் முடிவெட்டி முடித்தவுடன், தலையை ஷாம்பூவால் கழுவுவார்கள். இதற்கு சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும். ஷாம்பூ செலவு வேறு. QB ஹவுஸில் ஷாம்பூ கிடையாது. ஒரு எந்திரத்தால், தலையில் காற்றை வேகமாக அடிப்பார்கள். உதிரி முடி பறந்துபோகும். தலை க்ளீன்! நாற்காலியில் இருக்கும் கருவி 9 அல்லது 10 நிமிடங்கள் காட்டும். 10 நிமிட ஹேர்கட் 1000 யென் என்று தாங்கள் சொன்னதைச் செய்பவர்கள் என்று QB ஹவுஸ் நிரூபிக்கும் செய்கை இது. பணியாளர் குனிந்து வணங்கி விடை கொடுப்பார்.
எதிர்ப்பு அதிகரிப்பு
ஆரம்ப நாட்களில், பிற சலூன்கள் QB ஹவுஸை ஒரு போட்டியாகவே நினைக்கவில்லை. ஆனால், QB ஹவுஸில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கோனிஷி டோக்கியோவில் மட்டுமே 20 கிளைகள் திறந்தார். சலூன்காரர்கள் பயந்தார்கள், அணி திரண்டார்கள். “QB ஹவுஸ் சலூன்களில் சுகாதாரம் இல்லை. மக்கள் உடல்நலத்தைப் பாதிக்கும்” என்று அரசாங்கத்துக்குக் குற்றப் பத்திரிகை அனுப்பினார்கள். அரசாங்கம் QB ஹவுஸின் பல கிளைகளில் சோதனைகள் நடத்தியது. குற்றச்சாட்டுக்கள் நிரூபணமற்றவை என்று தள்ளுபடி செய்யப்பட்டன.
வெற்றிப் பாதை
QB ஹவுஸ் புகழும், வளர்ச்சியும் இன்னும் வேகமாயின, பரவலாயின. இன்று ஜப்பானில் 480 கிளைகள்: சீனா (ஹாங்காங்), சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளில் 85 கிளைகள். மொத்தக் கஸ்டமர்கள் ஒரு கோடி எழுபது லட்சம் பேர். ஆண்டு வருமானம் சுமார் 1700 கோடி யென், அதாவது 901 கோடி ரூபாய்!
QB ஹவுஸ் ஜெயித்தது எதனால்? “முடிவெட்டுவது” என்றால் என்ன என்று காலம் காலமாக இருந்த இலக்கணத்தை உடைத்துத் தனிப் பாதை போட்டதுதான்!
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT