Published : 17 Jan 2015 11:41 AM
Last Updated : 17 Jan 2015 11:41 AM

வாய் வழி விளம்பரம் வெற்றி பெறும்!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது மக்கள் மொழி. வாய் வார்த்தையாக பரவும் பிராண்ட் தழைக்கும் என்பது மார்க்கெட்டிங் மொழி. வாய் வார்த்தையாக பிராண்ட் பற்றிய விழிப்புணர்வும் செய்தியும் பரவுவதற்கு ‘வர்ட் ஆஃப் மவுத் மார்க்கெட்டிங்’ என்று பெயர். வாய் வழிச் செய்தியாக பிராண்டை பரபரப்பாக விற்பது பற்றி வாய் கிழியப் பேசுவோம் வாருங்கள்!

‘ஆர்எம்கேவி ஐம்பதாயிரம் கலர்ல புடவை நெய்திருக்காங்களாம்’ என்று சில காலம் முன் பலர் கூறக் கேட்டிருப்பீர்கள். நீங்களே பலரிடம் கூறியிருப்பீர்கள். விளம்பரம் மூலம் இச்செய்தி பரவியதை விட வாய் வார்த்தையால் பரவியதே அதிகம். இன்றும் மக்கள் ஐம்பதாயிரம் கலர் புடவையையும் ஆர்எம்கேவியையும் மறக்கவில்லை! இதுவே வாய் வழிச் செய்தியின் மகத்துவம், மகாத்மியம், முக்கியத்துவம்!

ரீங்காரமாக பரவும் இவ்வகைச் செய்திகளை பஸ்ஸ் (Buzz) என்கிறார் ‘The Anatomy of Buzz’ என்ற புத்தகத்தில் ஆசிரியர் ‘இமானுவெல் ரோஸென்’. பஸ்ஸ் என்பது கம்பெனி, பிராண்ட், பொருள், சேவை பற்றி ஒருவரிடமிருந்து ஒருவருக்கு வேகமாக பரவி பலரைச் சென்றடையும் செய்தித் தொகுப்பு. பறக்கும் போது பஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சத்தமிடும் வண்டின் ரீங்காரத்திலிருந்து வந்தது இந்த பெயர். பஸ்ஸ் மார்க்கெட்டிங் முக்கியத்துவம் பெற்று வளர மூன்று காரணங்கள்.

அலறும் விளம்பரச் சத்தம்

பிராண்டுகள் போடும் காட்டுக் கத்தலில் காது ஜவ்வு கிழிந்து கண் கூசுகிறது. 2014ல் விளம்பரத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபாய். இச்சத்தத்தைக் கேட்க முடியாமல் தான் ரிமோட்டால் காதை மூடி, பார்க்கப் பிடிக்காமல் பேப்பரை மடித்து, போதுமடா சாமி என்று ரேடியோவை அணைக்கிறோம். ஆனால் நண்பர்கள், உறவினர்கள், மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்துக் கேட்கிறோமே. வாய் வழி செய்தி வளர இது போதுமே!

நம்பிக்கை இழக்கும் மனம்

‘குழந்தைகளுக்கு பிடித்த பானம்’, ‘இந்த கிரீமை தடவினால் குழந்தை சருமம் கிடைக்கும்’, ‘குழந்தை இல்லையா, எங்கள் கிளினிக்கிற்கு வாருங்கள்’ என்று ஒரே போடாய் போடுகின்றன விளம்பரங்கள். ‘இதை நம்ப நாங்கள் என்ன குழந்தையா, என்ன குழந்தைதனமா இருக்கு’ என்று மக்களுக்கு விளம்பரங்கள் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆனால் பிடித்தவர்கள் கூறினால் சமர்த்தாய் கேட்கிறோமே. அவர்கள் சொல்படி செய்கிறோமே!

பெருகும் மக்கள் இணைப்பு வசதி

மக்களை இணைக்கும் வசதிகள் பெருகி வருகிறது. நேரில் சந்தித்து ஒருவரிடம் சொன்ன செய்தியை இன்று செல்ஃபோன் மூலம் பலருக்கும் ஈமெயில் மூலம் ஊருக்கும் இணையதளம் மூலம் உலகத்திற்கே பரப்பிவிடலாம். சோசியல் மீடியாவில் ‘எந்த பிராண்ட் வாங்குவது’ என்று கேட்ட மாத்திரத்தில் ‘அதை வாங்கு’, ‘இந்த பிராண்ட் இப்படி’ என்று பறந்து வரும் பதில்களும் அறிவுரைகளும். ரிலீசான புதுப்படத்தின் ரிசல்ட் முதல் காட்சி முடியும் முன்னேயே தமிழர்களுக்கு தெரிகிறது. ‘அஞ்சான்’ படத்திற்கு ஏற்பட்ட அகால கதி அஞ்சு தலைமுறைக்கு பாடமாயிற்றே.

வாய் வழிச் செய்தியை பிராண்டுகள் உருவாக்கி பஸ்ஸை பரப்ப முடியுமா? அதன் ஆதார தன்மைகளை அறிந்து கொண்டால் பேஷாய் முடியும். ‘ஹாட்மெயில்’, ‘யாஹூ’ என்று பல பிராண்டு கள் இருக்க நுழைந்தது ‘ஜிமெயில்’. தன்னை பிரபலப்படுத்த இந்த பிராண்ட் நாடியது விளம்பரத்தை அல்ல, பஸ்ஸ்ஸை. ‘ஸ்பெஷல் அழைப்பின் பேரில் மட்டுமே ஜிமெயில் அளிக்கப்படும்’ என்று முதலில் சில ஆயிரக்கணக்கானவர்களுக்கு மட்டுமே வழங்கியது.

அவர்களுக்கு நூறு பேருக்கு ஜிமெயில் கிடைக்க அழைப்பு அனுப்பும் வசதியை அளித்தது. ஓசியில் சல்லிசாய் கிடைக்கும் வசதியை ஸ்பெஷல் சேவையாக்கி மக்களைப் பேச வைத்து ஜிமெயில் யாரிடம் இருக்கிறது என்று தேட வைத்து அவர்களிடம் ‘ஐயா தர்மப் பிரபு, ஜிமெயில் அழைப்பு அனுப்புப்பா’ என்று கேட்க வைத்து. ஊரையே பேச வைத்து வெகு விரைவில் ஈமெயில் பிரிவின் நம்பர் ஒன் பிராண்டாய் மாறியது!

பஸ்ஸ் எல்லா பிசினஸையும் ஒன்று போல் பாதிப்பதில்லை. நான்கு தன்மைகள் மூலம் அது தொழிலையும் பிராண்டையும் பாதிக்கும் முறையில் மாறுபடுகிறது.

பொருளின் தன்மையைக் கொண்டு

எல்லா பொருள் பிரிவுகளிலும் பஸ்ஸ் உருவாக்கி மக்களை பேசவைக்க முடியாது. குண்டூசி பற்றி மணிக்கணக்கில் இல்லை ஜஸ்ட் நொடிக்கணக்கிலாவது பேசுவோமா? ஏனெனில் அது சின்னதாய், சீப்பாய், சிம்பிளாய் இருப்பதால். முக்கியமாக பல காலமாய் இருப்பதால். வந்த புதிதில் வேண்டுமானால் அதைப் பற்றி சில காலம் பேசியிருப்போம். இப்பொழுது பல் குத்துவதற்கு தவிர அதை சீண்டுவதில்லை.

சில பொருள் பிரிவுகள் மட்டுமே பரவலாக பேசப்படும். திரைப்படங்கள், புத்தகங்கள், இசை தட்டுகள் போன்ற பொழுது போக்குப் பொருட்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவோம். ‘ஐபேட்’ போன்ற புதுமையான பொருட்களை சிலாகித்து அலசுவோம். ஹோட்டல், விமான சேவை, செல்ஃபோன் என்று நாமே அனுபவித்து உணரும் பொருட்களை நீண்ட நேரம் விவாதிப்போம். ஹோம் தியேட்டர், கார்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்களையும், சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் போன்ற காம்ப்ளெக்ஸ் பொருட்களைப் புரிந்துகொள்ள பலரிடம் கேட்போம். இது போன்ற பஸ்ஸ் நிறைந்த பொருட்களை ‘உரையாடல் பொருட்கள்’ (Converation Products) என்கிறார் ரோஸென்.

வாடிக்கையாளர் தன்மையைக் கொண்டு

எல்லாரும் லொடலொடவென்று பேசும் டைப்பில்லை. இளைஞர்கள் தூக்கத்தில் கூட பேசும் ஜாதி. அதனால் இளைஞர்களை கவரும் பொருட்களான ஃபேஷன் பொருட்கள், செல்ஃபோன், பைக், காஸ்மெடிக்ஸ் போன்ற பொருட்களுக்கு பஸ்ஸ் தன்மை அதிகம். பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதனாலேயே மிக்ஸி, கிரைண்டர், டீவி சீரியல்கள், ஜவுளி மற்றும் நகைக் கடைகள் போன்றவை பஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிரிவுகள்!

வாடிக்கையாளர்கள் இணைந்திருக்கும் முறை கொண்டு

வாடிக்கையாளர்கள் இணைந்திருக்கும் முறை கொண்டும் பஸ்ஸ் மற்றும் அது பிராண்டை பாதிக்கும் தன்மை மாறுபடுகிறது. சற்றே வயதில் மூத்தவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை இணைக்கும் வசதிகள் பெரியதாக ஏதும் இல்லை. காலை வாக்கிங் போகும் போதோ, பொது இடங்களில் சந்திக்கும் போதோ தான் அவர்களால் தங்கள் வயது நபர்களை சந்தித்து பேசமுடிகிறது. அவர்களை பாதிக்கும் பிராண்டுகளும் செய்திகளும் பெரிய அளவில் பஸ்ஸ்ஸாய் மாறி வேகமாக பரவுவதில்லை. ஆனால் இளைஞர்கள் பள்ளியிலும், கல்லூரியிலும், சினிமா தியேட்டர்களிலும், மால்களிலும், காபி ஷாப்புகளிலும் அதிகம் கூட்டம் கூட்டமாய் சந்திக்கிறார்கள். மேலும் இருக்கவே இருக்கிறது இண்டர்நெட்டும் சோசியல் மீடியாவும். அவர்கள் இருக்கும் இடங்கள் எல்லாமே பஸ்ஸ் நிலையங்கள்!

மார்க்கெட்டிங் உத்திகளைக் கொண்டு

சமயோஜிதமாக யோசித்து, ஸ்மார்ட்டாய் உத்தி அமைத்து பஸ்ஸ் உருவாக்கினால் காட்டுத்தீ போல் அது மக்களிடம் பரவும். ’புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா’ என்று மீடியாவில் கேள்வியாய் எழுப்பி, ஹோர்டிங், போஸ்டர், தட்டிகள் மூலம் ஊரெங்கும் பரப்பி ‘யாரய்யா அது புள்ளி ராஜா, அது என்னய்யா எய்ட்ஸ்’ என்று மக்களைப் பேச வைத்து, மற்றவரிடம் கேட்க வைத்து, மண்டையை பிய்த்துகொள்ள வைத்து எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை வளர்த்து வெற்றி பெற்றது ஸ்மார்ட்டான மார்க்கெட்டிங் உத்தியானல் தானே!

பஸ்ஸ் வளர்க்கும் விதம், வளர்க்க உதவும் குணம் போன்றவற்றை பற்றிப் பேச இன்னமும் விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த வாரம் தொடர்ந்து பஸ்ஸுவோம்.

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x