Last Updated : 16 Jan, 2015 12:05 PM

 

Published : 16 Jan 2015 12:05 PM
Last Updated : 16 Jan 2015 12:05 PM

கச்சா எண்ணெய் விலை சரிவு: கப்பலில் இருப்பு வைக்கும் வர்த்தகர்கள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து சில வர்த்தகர்கள் கப்பல்களில் கச்சா எண்ணெய்யை வாங்கி சேமிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 2.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இவ்விதம் சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடலில் கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கும் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. கப்பல்களில் எண்ணெய்யை சேமிப்பது 2009-ம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்படுகின்றன. அப்போது 10 கோடி பீப்பாய் எண்ணெய் பெரிய கப்பல்களில் சேமிக்கப்பட்டு கடலில் நிறுத்தப்பட்டிருந்தன.

விலை சரிவு சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி டேங்கர் கப்பல்களுக்கான வாடகைக் கட்டணத்தை கப்பல் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்நிறுவனங்களின் பங்குகளின் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த வாரத்தில் வர்த்தக நிறுவனங்களான டிராபிகுரா, விடோல், குன்வோர், கோச் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்கள் தங்களது சேமிப்பு அளவை டேங்கர்கள் மூலம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த ஓராண்டுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை இவை சேமித்து வைத்துள்ளன.

கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் மிகப் பெரிய கப்பல்கள் இதுபோல சேமிப்புப் பணிக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கப்பலும் 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் சேமிக்கும் திறன் கொண்டவையாகும்.

டிஐ ஒசியானியா கப்பல் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலாகும். இது 30 லட்சம் பீப்பாய் எண்ணெய் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இந்த கப்பலை விடோல் எனும் வர்த்தக நிறுவனம் வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்தபட்சம் 2.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேமிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சில எண்ணெய் கப்பல்கள் வழக்கமான எண்ணெய் ஏற்றிச் செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஷெல், டிராபிகுரா, விடோல், குன்வோர் ஆகிய நிறுவனங்கள் கப்பலில் எண்ணெய் சேமிக்கப்படுவது தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. கடந்த 7 மாதங்களில் எண்ணெய் விலை 60 சதவீதம் வரை சரிந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக விலை குறைவாக இருக்கும்போது வாங்கி சேமித்துவைக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இருப்பினும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 45 டாலருக்குச் சரியும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையான காலத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 110 டாலர் வரை விற்பனையானது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பீப்பாய் விலை 56 டாலராக சரிந்தது.

கப்பலில் எண்ணெய்யை சேமிப்பதற்கு ஆகும் செலவு, காப்பீடு, மாத வாடகை ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் ஒரு கப்பலுக்கு 15 லட்சம் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமீபகாலமாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல்களுக்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த கப்பல்களுக்கான முன் பதிவு இருந்து கொண்டே இருக்கிறது. பிரண்ட்லைன், சகோஸ் எனர்ஜி நேவிகேஷன் மற்றும் டிஹெச்டி ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்கு விலைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கப்பலின் தினசரி வருமானம் 63 ஆயிரம் டாலராக இருந்தது. இப்போது 84 ஆயிரம் டாலராக உயர்ந்துள்ளது. இது ஒரு லட்சம் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில கப்பல் நிறுவனங்கள் தங்களது தினசரி வாடகையை 40 ஆயிரம் டாலராக உயர்த்தியுள்ளன. கடந்த ஆண்டு இருந்ததைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். இப்போது உள்ளதைப் போல எண்ணெய் நிறுவனங்கள் முன் பதிவு செய்துவந்தால் இந்த வாடகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பெரும்பாலான கப்பல்கள் இப்போது எண்ணெய் சேமிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வர்த்தகர்களும் புதிய ரக கப்பல்களின் மூலமான பரிவர்த்தனையை பெரிதும் விரும்புகின்றனர். பழைய கப்பல்களில் நிர்வாக செலவு அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x