Published : 20 Jan 2015 10:24 AM
Last Updated : 20 Jan 2015 10:24 AM
சன் நெட்வொர்க் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) எஸ்.எல் நாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது சற்று நிம்மதியுடன் காணப்பட்டார். இக்குழுமம் வசமிருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திலிருந்து சன்குழுமம் வெளியேறியதே அவரது நிம்மதிக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 2010-ம் ஆண்டு இக்குழுமம் வாங்கி நான்கு ஆண்டுகள் நிர்வகித்த பிறகு அதில் ரூ. 2,600 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் இந்நிறுவனத்தின் அதன் முந்தைய நிறுவனர் அஜய் சிங்கிற்கு விற்பனை செய்யும் பரிந்துரையை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இந்த பேரத்தில் சன்குழும நிர்வாகி கலாநிதி மாறனுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டது அவருடன் பேசியதிலிருந்து தெரியவந்தது. அவருடனான பேட்டியிலிருந்து…
சில மாதங்களாக நீடித்த யூகங்களுக்குப் பிறகு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திலிருந்து வெளியேறி விட்டீர்கள்? இப்போது மேற்கொள்ளப் பட்ட பேரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நிச்சயமாக இது சிறந்த பேரம் அல்ல. நாங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தினோம். அது சாத்தியமாகியிருந்தால் நிறுவன பங்குகள் எங்கள் வசமே இருந்திருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பேச்சு பல்வேறு காரணங்களால் தடைபட்டது. கடைசியில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சியே. இப்போதைய சூழலில் நிறுவனத்திலிருந்து வெளி யேறாதிருந்தால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருந்திருக்கும்.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் நிறுவனத்தை நடத்துவதற்கேற்ற சூழல் பிரகாசமடைந்துள்ளது. பயணிகள் எண்ணிக்கையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்துள்ளதே….
உண்மைதான், மிகவும் இக்கட்டான சூழலில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வளர்த்து விட்டு இப்போது வெளியேறுவது உண்மையிலேயே வருத்தமான விஷயம்தான். நிறுவனத்தை நடத்துவதற்கான சாத்தியங்கள் சாதகமாக இருந்தபோதிலும் தொடர்ந்து முதலீடுகளை செய்ய வேண்டியிருந்தது. இதனால் பங்குகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
போதுமான அளவுக்கு உள்வள நிதி ஆதாரம் இல்லாமல் போனதே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதற்கு முக்கியக் காரணமாகும். தொடர்ந்து நஷ்டத்தை சந்திப்பதற்கு முதலீடு செய்ய முடியாது. மேலும் எங்களது பிற துறைகளான எப்எம் ரேடியோ, டிடிஹெச் துறைகளில் முதலீடுகள் தேவைப்பட்டன. அவற்றின் வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளும்போது இதில் முதலீடு செய்வதை நிறுத்தித்தான் ஆக வேண்டியிருந்தது.
நீங்கள் நிறுவனத்தை வாங்கும்போது ஒரு பங்கு ரூ. 48 என்ற விலையில் வாங்கினீர்கள். இப்போது பங்கு விலை குறைந்துள்ளது. ஒரு பங்கு விலை ரூ. 30 முதல் ரூ. 35 என்ற விலைக்கு விற்றிருந்தால் ஓரளவு நஷ்டம் குறைந்திருக்கும். ஆனால் இப்போதைய சந்தை மதிப்பில் ஒரு பங்கு விலை ரூ. 20 ஆக உள்ளது. எந்த விலைக்கு பங்குகளை விற்க ஒப்புக் கொண்டீர்கள்?
இந்த விவரத்தை என்னால் வெளியிட முடியாது. இந்த பரிமாற்றம் முழுவதுமே நிறுவனத்தை மீண்டும் சீரமைப்பதற்கான நடவடிக்கைதான். இந்த சீரமைப்பு பணியை விமான அமைச்சகம் (எம்ஓசிஏ) ஏற்று புதியவர் வசம் பங்குகளை ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும்.
நஷ்டம் ஏற்பட்டுள்ளதா?
ஆமாம், ஏற்கெனவே உள்ள முதலீட்டாளர்கள் பங்குகளை மாற்றுவதால் நஷ்டத்தை சந்திக்கத்தான் வேண்டும். இருப்பினும் குழுமம் வசம் 18 கோடி பங்குகள் இருக்கும். இந்த பங்குகள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 16.30 என்ற நிலையில் வாரண்டாக இருக்கும்.
அப்படியெனில், ஏர்லைன் துறையில் மாறனின் முதலீடு தொடர்கிறது என்றுதானே அர்த்தம்?
ஆமாம், ஏற்கெனவே உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை ஏப்ரல் 2015 மற்றும் ஏப்ரல் 2016-ல் மாற்றிக் கொள்ளலாம்.
விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அளித்துள்ள மறு சீரமைப்பு பரிந்துரையில் இப்போதைய முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டாளர்களுக்கு முன்பாக ரூ. 80 கோடி முதலீடு செய்வார்கள் என்றும் எனவே பங்கு வாரன்டுகள் முழு அளவில் திருப்பி அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 18 கோடி பங்குகள் எங்களிடம் இருக்கும்.
நீண்ட கால அடிப்படையில் சன்குழுமம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கலாமா?
இப்போதைய நிலையில் எந்த பதிலுமே சரியானதாக இருக்காது. நிறுவன சொத்து மதிப்பு அனைத்துமே எதிர்காலத்தில் நிறுவனத்தில் நிலவும் பணப்புழக்கத்தின் அடிப்படையில்தான் அமையும். இந்திய விமான போக்குவரத்து மிகவும் லாபகரமானதாக மாறும்பட்சத்தில், முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்திலேயே தொடரலாம்.
இயக்குநர் குழுவில் அமர விருப்பமா?
இல்லை, நாங்கள் அதை விரும்பவில்லை.
நிறுவனத்தில் ஆள்குறைப்பு இருக்குமா?
நிச்சயமாக. ஆள்குறைப்பு என்பது கட்டாயமாக இருக்கும். ஒரு விமானத்துக்கு எத்தனை பணியாளர்கள் தேவை என்பதை கணக்கிட்டு செயல்படுத்தினால்தான் லாபகரமானதாக செயல்படுத்த முடியும்
நிதி பற்றாக்குறை தவிர, நிறுவனத்திலிருந்து வெளியேற வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?
கடன் கேட்டு வங்கிகளை அணுகிய போது அவர்கள் தர முன்வராதது துரதிருஷ்டவசமானது. அரசும் சாதக மான பதிலை அளிக்கவில்லை. இத்தகைய சூழலில் இது ஒன்றுதான் வழியாக இருக்க முடியும்.
சன் டி.வி. பங்குகளை அடகு வைத்து அதன் மூலம் பணம் திரட்டும் நடவடிக்கையில் மாறன் இறங்காதது ஏன்?
இது ஏற்க முடியாத வாதம். சன் டி.வி-யின் குறைந்தபட்ச பங்குளை வைத்திருப்போர் இதை ஏற்கவில்லை. இத்தகைய முடிவை எடுத்திருந்தால் முதலீட்டாளர்கள் ஒருபோதும் எங்களை மன்னிக்க மாட்டார்கள்.
விமான கட்டண உத்தி தவறானதாக நீங்கள் கருதவில்லையா?
ஒரு போதும் கிடையாது. மற்ற விமான நிறுவனங்களைப் போல ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும், இன்னமும் சொல்லப்போனால் சில முன்னணி நிறுவனங்கள் இதுபோல சலுகைகளை அளிக்கின்றன.
பயண தேதி நெருங்கும்போது கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால் விளம்பரங்களை பார்த்தால் நாங்கள் மிகக் குறைந்த விலையில் பயண கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாகத் தோன்றும். முழுமையான சேவை அளிக்கும் விமான நிறுவனத்தின் பயண கட்டணத்தை விட எங்களது விமான பயண கட்டணம் அதிகம்தான்.
டிஜிசிஏ பயண கட்டணத்துக்கு வரம்பு நிர்ணயித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது நடைமுறை சாத்தியமானதாகக் கருதவில்லை. இது ஒருபோதும் ஒத்து வராது. குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டண நிர்ணயம் என்பது விமான நிறுவனங்களிடையே மாறுபடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT