Published : 27 Jan 2015 10:49 AM
Last Updated : 27 Jan 2015 10:49 AM
முன்குறிப்பு:
இது அரசியல் கட்டுரை யல்ல. மோடி பாரதப் பிரதமரான பாதையை மேனேஜ்மென்ட் கண்ணோட் டத்தில் பார்க்கும் ஒரு ஆராய்ச்சி.
டேவிட் ஆக்கெர் (David Aaker) என்பவர் அமெரிக்காவின் பிரபல ஹாஸ் பிசினஸ் ஸ்கூலில் (Haas Business School) பேராசிரியர். பொசிஷனிங், பிராண்டிங் ஆகிய துறைகளில் மேதை. தயாரிப்புப் பொருட்களுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டுமல்ல, தனி மனிதர்களுக்கும் பொசிஷனிங் மிக முக்கியம் என்று ஆக்கெர் சொல்கிறார்.
ஆக்கெர் கருத்துப்படி, தனிமனிதப் பொசிஷனிங்கில் 3 படிநிலைகள் உண்டு:
# தன் இன்றைய இமேஜை எடை போடுதல்.
# மக்கள் என்ன இமேஜை எதிர்பார்க்கிறார்கள் என்று கணித்தல்.
# தன் பலங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தி, இந்த இமேஜ் மாற்றத்தை நிறைவேற்றுதல்.
இந்தக் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது, வெற்றியை நிச்சயம் பெற்றுத் தருவது, என்பது நம் நாட்டில், 2014 இல் நடந்த பொதுத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இமாலய வெற்றி
2014 நாடாளுமன்றத் தேர்தல். பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் ஜெயித்து தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றி, கட்சியின் வெற்றியைவிட, நரேந்திர மோடி என்னும் தனிமனிதரின் வெற்றி என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இந்தியா எதிர்கொண்ட பிரச்சினைகள்
2014 பொதுத்தேர்தலில், பொருளாதார மந்தநிலை, வேலையில்லாத் திண்டாட்டம், கட்டுமானப் பணிகளில் தேக்கம், விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவை மக்கள் மனங் களை ஆக்கிரமித்த முக்கிய பிரச்சினைகள்.
பொருளாதாரச் சரிவு
2003 முதல் இந்தியப் பொருளாதாரம் ஆறிலிருந்து ஒன்பது சதவிகித அளவில் வளர்ந்துகொண்டிருந்தது. 2013 ல், வளர்ச்சி 4.4 சதவிகிதமாகச் சரிந்தது. இதனால், வேலை வாய்ப்புகள் குறைந்தன, விலைவாசிகள் எகிறின. 2007 வரை சுமார் ஆறு சதவிகித அளவில் இருந்த விலைவாசி ஏற்றம் அக்டோபர் 2013 இல் 11 சதவிகிதத்தைத் தாண்டியது.
ஊழல்கள்
2 ஜி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகியவற்றில் பல லட்சக்கணக்கான கோடிகளுக்கு ஊழல் நடந்திருப்பதாக அரசுத் தணிக்கை அதிகாரிகள் பட்டியலிட்டார்கள். அண்ணா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டங்கள் ஊழலின் பரிமாணங்களைச் சாதாரண மனிதர்களும் அறிய வைத்தன. கறைபடாத கரங்களே ஆட்சியில் இல்லையோ என்று மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள்.
நாடு தேடிய நம்பிக்கை நாயகர்
2014 இல் மக்கள் பொருளாதார வளர்ச்சி, ஊழல் இல்லா ஆட்சி, முடிவெடுக்கும் நிர்வாகம் ஆகியவற்றுக்காக ஏங்கினார்கள். மதச் சார்பின்மை போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாயின. எந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. இந்த வெற்றிடத்தில், நாட்டின் மீட்பராக, நம்பிக்கை நட்சத்திரமாகத் தன்னைப் பொசிஷனிங் செய்துகொள்ள மோடி முடிவு செய்தார்.
ஆலோசனைக் குழு
பொசிஷனிங் என்பது ஒருவகை விளம்பரம். ஆகவே, விளம்பர உலகின் வித்தகர்களைத் தனக்குத் துணையாக வைத்துக்கொள்ள மோடி முடிவு செய்தார். ஓகில்வி மாத்தர் (Ogilvy Mather), மெக் ஆன் (McCann) , மாடிஸன் வேர்ல்ட் (Madison World) ஆகியவை இந்தியாவின் முன்னணி விளம்பர நிறுவனங்கள். முறையே, இவற்றின் தலைவர்களான பியுஷ் பாண்டே, ப்ரஸூன் ஜோஷி, ஸாம் பல்ஸாரா ஆகிய மூவரும் அடங்கிய ஆலோசனைக் குழுவை உருவாக்கினார்.
மோடியின் பலங்களும், பலவீனங்களும்
மோடியின் முக்கிய பலங்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அப்பாவின் டீக்கடையில் வேலை பார்த்து உழைப்பால் உயர்ந்து, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகி, 13 வருடங்கள் ஊழலற்ற, பொருளாதார வளர்ச்சி நிறைந்த ஆட்சி தந்தது.
பலவீனங்கள்
ஒன்று - 2002 இல் கோத்ரா என்னும் ஊரில் நடந்த மதக் கலவரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்டதாக எழுந்த வலுவான குற்றச்சாட்டு. இரண்டு - இளமையைத் தாண்டிய 63 வயது. எதிரணியான காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்பட்ட ராகுல் காந்தி வயது 44 தான். மோடியின் பலங்களில் மட்டுமே மக்கள் கவனத்தைப் பதியச் செய்யவேண்டும் என்று ஆலோசனைக் குழு வியூகம் வகுத்தது.
மோடியின் வாழ்க்கை
மோடியின் வாழ்க்கையில் நடந்த பதினேழு சம்பவங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். சிறுவயதில் குளிக்கப் போகும்போது நண்பனை முதலையிடமிருந்து காப்பாற்றியது, வெள்ளப் பெருக்கின்போது ஓடியாடிச் செய்த சேவைகள், குடும்பத்தைக் காப்பாற்ற அப்பாவின் டீக்கடையில் வேலை பார்த்தது போன்ற நிகழ்ச்சிகளைப் படக்கதைகள் (கார்ட்டூன்கள்) கொண்ட புத்தகமாக வெளியிட்டு, லட்சக் கணக்கில் இலவச விநியோகம் செய்தார்கள்.
குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைவர் மனங்களிலும் மோடி தன்னலம் அற்றவர், தியாக மனப்பான்மை கொண்டவர், கடும் உழைப்பாளி என்னும் உயர்வான அபிப்பிராயத்தை இந்தப் புத்தகம் உருவாக்கியது.
``நம்பிக்கை நாயகர்” பொசிஷனிங்
மோடி தன் எல்லாப் பேச்சுக்களிலும், பொருளாதார வளர்ச்சியை மையப் படுத்தினார். குஜராத் மாநிலம் கண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சியைத் தன்னால் முழு இந்தியாவுக்கும் தரமுடியும் என்று உறுதியோடு சொன்னார். ஊழல் இல்லாத, வளமான “நல்ல நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன (Ache dhin aagaye hai)” என்பது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய முழக்கமானது.
காங்கிரஸும், பிற எதிர்க் கட்சிகளும், மோடியின் இந்துத்துவத்தையும், கோத்ரா மதக் கலவரத்தையும் அவருக்கு எதிராக எழுப்பினார்கள். ஆலோசகர்கள் இதைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டார்கள். பொருளாதார வளர்ச்சியும், ஊழல் ஒழிப்பும் மட்டுமே மக்கள் கவலைப்படவேண்டிய சமாச்சாரங்கள், கோத்ரா எதிர்க் கட்சிகளின் திசை திருப்பும் முயற்சி என்று மக்கள் முன் வலுவாக வாதாடினார்கள்.
மோடிதான் இந்தியாவின் நம்பிக்கை நாயகர் என்னும் பொசிஷனிங், கட்சி, மதம், மாநிலம், மொழி என்னும் வேலிகளைத் தாண்டி, மக்கள் மனங்களில் பதியத் தொடங்கியது.
இளைஞர்களே இலக்கு
இந்திய மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் 35 வயதுக்குக் குறைவானவர்கள். மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 124 தொகுதிகளில் வெற்றி தோல்வியை இளைஞர்களின் வாக்குகள்தாம் தீர்மானிக்கும் நிலை. இளைய தலைமுறையின் மனங்களில் சாதகமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியாகவேண்டிய கட்டாயம்.
ராகுல் காந்தியைவிட மோடி 19 ஆண்டுகள் மூத்தவர். ஆனால், சிந்தனையால், செயல்முறையால் இளமைத் துடிப்புக் கொண்டவர் என்று மக்கள் மனங்களில் பதியவைக்கவேண்டிய கட்டாயம். இதற்கு இரண்டு வழிகள் கையாளப் பட்டன. ராகுல் காந்தி தன் உடையில் அதிகக் கவனம் காட்டுவதில்லை.
மோடி எப்போதும் “பளிச்” என்று மக்கள் முன் தோன்றினார். எப்போதும், நவநாகரிகமாகத் தைக்கப்பட்ட, தனித்துவமான, ஆனால் இந்தியப் பாரம்பரியம் கொண்ட, வண்ண வண்ணமான குர்த்தாக்கள் அணிந்து வந்தார். ``மோடி குர்த்தாக்கள்” என்று இளைய தலைமுறையினரிடம் இந்த உடை பிரபலமானது.
மோடி அற்புதப் பேச்சாளர். நாடு முழுக்க 25 மாநிலங்களில் மின்னல்வேகச் சுற்றுப்பயணம் செய்தார். 437 பொதுக்கூட்டங்களில் பேசினார். முப்பரிமாண ஒளிப்படவியல் (Holography) என்பது ஒரு அறிவியல் தொழில்நுட்பம். இதன் மூலமாக, ஒரு பொருள் அல்லது மனிதரின் முப்பரிமாண ஒளிப்படத்தைச் சேமித்து இன்னொரு இடத்துக்குப் பரிமாறிக்கொள்ள முடியும்.
இதனால், அந்தப் பொருளை / மனிதரை நேரடியாகப் பார்ப்பதுபோல் தோன்றும். இத்தோற்றத்தோடு அவர் பேசும் ஆடியோவை ஒருங்கிணைத்தால், அவர் நம் கண்முன் நின்று பேசுவார். இப்படி, மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளில், 1350 கூட்டங்களில் தோன்றினார்.
மோடி பிரச்சாரத்தின் இன்னொரு பரிணாமம், டீக்கடை விவாதங்கள் என்னும் பொதுமக்கள் சந்திப்பு. டீக்கடைகளில் வீடியோ கான்ஃபரன்சிங் வசதிகளை ஏற்படுத்தி, மோடி பொதுமக்களோடு உரையாடினார். மொத்தம் 4040 டீக்கடை விவாதங்கள் நடந்தன. மோடி டீக்கடையில் வேலை பார்த்தவர் என்பதால், இந்தச் சந்திப்புகள் அவருக்கு மக்களோடு உணர்ச்சி பூர்வமான உறவை உண்டாக்கின.
இப்படி, ஆக மொத்தம், மோடி பொதுமக்களோடு நடத்திய சந்திப்புகள் 5827!
பேஸ்புக், ட்விட்டர் பயன்பாடு
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றைப் பயன்படுத்தாத இளைய தலைமுறையினரே இன்று இல்லை. மோடி இவற்றில் புகுந்து விளையாடினார். தினமும் பலமுறை அப்டேட்ஸ் தந்தார். ஃபேஸ்புக்கில் அவரைப் பின்பற்றுபவர்கள் (Followers) 140 லட்சம் பேர்: ட்விட்டரில் 66 லட்சம் பேர்.
``சமூக ஊடகங்களை மோடியைப்போல் இதுவரை யாருமே தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதில்லை” என்று இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் டெய்லி மெயில் புகழாரம் சூட்டுகிறது.
நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவராக, ஊழல் இல்லா ஆட்சி தருபவராக, இளைஞர்களின் இதயத் துடிப்பாக மோடி தன்னைப் பொசிஷனிங் செய்துகொண்டார். மாபெரும் வெற்றி கண்டிருக்கிறார். இந்த இமேஜ் நிலைக்கவேண்டுமானால், மக்களின் நம்பிக்கைகளை அவர் நிஜமாக்கவேண்டும்.
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT