Published : 30 Jan 2015 11:56 AM
Last Updated : 30 Jan 2015 11:56 AM
இந்தியாவின் முக்கிய கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், மின்சாரத்தால் இயங்கக்கூடிய புதிய வகை வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனம் பற்றி தெரியாத இந்தியர்களே இருக்க முடியாது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த விரும்பிய அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க, ரகுநந்தன் சரண் என்பவர் அசோக் மோட்டார்ஸ் என்னும் வாகன நிறுவனத்தை தொடங்கினார்.
முதலில் ஆஸ்டின் கார்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரித்து வந்த அசோக் மோட்டார்ஸ் பிரிட்டிஷ் லேலண்ட் நிறுவனத்தின் முதலீடுகளை பெற்றதும் அசோக் லேலண்ட் ஆனது.
தற்போது ஹிந்துஜா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் அசோக் லேலண்ட் ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இது தவிர தொழிற்சாலைகள், கப்பல்கள் போன்றவற்றுக்கான உதிரி பாகங்களையும் தயாரித்து வருகிறது.
இதன் உற்பத்தி மையம் சென்னை எண்ணூரை அடுத்துள்ள வெள்ளைவாயல் சாவடியில் உள்ளது. கிட்டத்தட்ட 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தயாரிப்பு மையத்தில், என்ஜின், கியர் உள்ளிட்ட பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை சோதிப்பதற் கான வசதிகள் இங்கு உள்ளதால், அசோக் லேலண்டின் 40 % உற்பத்தி சென்னையில்தான் நடக்கிறது.
இந்தியாவில் சென்னை, ஓசூர் உட்பட 5 இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண் டுள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் துபாய், செக் குடியரசு, இங்கிலாந்து நாடுகளிலும் ஆய்வு மற்றும் உற்பத்தி மையங்களை வைத்துள்ளது.
அசோக் லேலண்ட் சார்பில் ஆண்டு தோறும் ‘தொழில்நுட்ப நாள்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த 27 மற்றும் 28 என இரண்டு நாட்கள் நடந்த இந்த தொழில்நுட்ப மாநாட்டில், கன ரக வாகன உலகின் சவால்கள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில் மிக முக்கியமான விஷயம் Zero Emission Vehicle எனப்படும் குறைந்த புகையை வெளியேற்றக்கூடிய வாகனங்களை உருவாக்கு வதற்கான சாத்தியங்கள் குறித்து நிறைய ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குந ரான டாக்டர். எம்.ஒய்.எஸ்.பிரசாத் இம்மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பொறியாளர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் பங்கேற்றனர்.
அசோக் லேலண்டுடன் இணைந்து உதிரிபாகங்களை தயாரித்து வரும் ப்ரேக்ஸ் இந்தியா, பிஏஎஸ்எஃப், பெடரல் மொகல், ரொமேக்ஸ் டெக்னா லஜீஸ் உள்பட 36 நிறுவனங் கள், தாங்கள் தயாரிக்கும் உதிரிபாகங்களின் எதிர்காலம் மற்றும் அவற்றை மேம்படுத்து வதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து கட்டுரைகளை சமர்ப் பித்து விளக்கின. இதே போல் தனிப்பட்ட முறையில் 40-க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளை பரிந்துரை முறையில் பொறியாளர்கள் சமர்ப்பித்தனர்.
இந்த தொழில்நுட்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக அசோக் லேலண்ட் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குனரான என்.சரவணன் பகிர்ந்து கொண்டதாவது:
அசோக் லேலண்ட் நடத்துகிற இந்த தொழில்நுட்ப நாள் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த நிகழ்வுகளின் போது ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பரிந்துரைகள் அளிக்கப்படும். இதில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று நுட்பங்களுக்கு பரிசளிக்கப்படுவது வழக்கம்.
இனி வருங்காலங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் அதற்கேற்ற வகையில் அதிக புகையை வெளியிடாத வகையிலான வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதனடிப்படையில் 3 வாகனங்கள் (முற்றிலும் புகையை வெளியிடாதவை) தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்றின் கீழ் ஒரு மிதமான கனரக வாகனம், ஒரு 10 டன் எலக்ட்ரிக் டிரக் மற்றும் ஒரு சொகுசுப் பேருந்தை உருவாக்கியுள்ளோம். இதேபோல் எத்தனாலை கொண்டு இயங்கக்கூடிய வாகனத்தையும் உருவாக்கி யுள்ளோம். தற்போது அவை சோதனை கட்டத்தில் உள்ளது. சோதனை மற்றும் மதிப்பீடு சரிபார்த்தலை நிறைவு செய்த பின்னர் அதை சந்தைப்படுத்தவுள்ளோம்.
இதேபோல பேருந்துகளை பொறுத்தளவில் பிளக் முறையில் சார்ஜ் செய்யக்கூடிய பேருந்துகளை உருவாக்குவது தொடர்பாகவும் திட்டங்கள் வைத்துள்ளோம். இதற்காக எங்களின் கூட்டு நிறுவனமான லண்டனின் ஆப்டேருடனான தொழில்நுட்ப உதவிகளின்படி எலக்ட்ரிக் பேருந்துகள் உருவாக்கப்படும்.
இதற்கான பேட்டரிகளை தயாரிப்பது தொடர்பான திட்டமிடுதலில் உள்ளோம். இந்த பேட்டரிகள் அனைத்துமே முழுக்க முழுக்க எங்களின் சொந்த தயாரிப்பாக இருக்கும்.
மின் தொழில்நுட்பத்தின்படி வாகனங்களை தயாரித்தாலும். இதுபோன்ற புதிய மாற்று எரிசக்தி தொழில்நுட்பத்தை செயல்படுத்த முழு மூச்சாக செயல்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். இந்திய அரசின் தேசிய மின் வாகன உருவாக்க திட்டத்துக்கும் பங்களிக்கவுள்ளோம். இந்த திட்டத்திற்காக ரூ. 14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில். பொதுத்துறைகளுக்கான அரசு வாகனங்களை இந்த திட்டத்தின் தயாரிப்போம்.
அசோக் லேலண்டின் மொத்த வருவாயில் 2 சதவீதம் வரை ஆய்வு மற்றும் அது சார்ந்த மேம்பாட்டுப்பணிகளுக்கு ஒதுக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
இப்போதைக்கு அதிக திறன் கொண்ட என்ஜின், சுற்றுப்புறச்சூழலை பாதிக்காத எரிபொருள், முக்கியமாக பாதுகாப்பு அம்சங்கள், வசதியான போக்குவரத்து முறைகள் என இந்த மூன்றை மனதில் வைத்துதான் வாகனங்களை உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.
manikandan.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT