Published : 29 Apr 2014 10:35 AM
Last Updated : 29 Apr 2014 10:35 AM
இந்தியாவிலிருந்து அல்போன்ஸா மாம்பழம் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இது தவிர பாகற்காய், புடலங்காய், நீல கத்தரிக்காய், சேப்பங்கிழங்கு உள்ளிட்ட நான்கு காய்கறிகள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் 28 நாடுகள் உள்ளன. இதனால் இந்த கூட்டமைப்பில் உள்ள 28 நாடுகளுக்கும் அல்போன்ஸா மாம்பழம் மற்றும் 4 காய்கறிகளை இந்தியா ஏற்றுமதி செய்ய முடியாது.
2013-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 207 பழங்கள் மற்றும் காய்கறிகள் பெட்டியிலிருந்து பழ ஈக்கள் இருந்ததும் பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த நாடுகளைச் சேர்ந்த நிலைக்குழு அல்போன்ஸா மாம்பழம் மற்றும் நான்கு காய்கறிகள் இறக்குமதிக்கு தாற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி யாகும் பழங்கள் மற்றும் காய்கறி களில் தடை விதிக்கப்பட்ட அல்போன்ஸா மற்றும் நான்கு காய்கறிகளின் பங்கு 5 சதவீதமாகும்.
பிரிட்டனின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான துறை இத்தகைய தடையை நியாயப் படுத்தியுள்ளது. இத்தகைய பழங்கள் மற்றும் காய்கறிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மிகுந்த கேடு விளைவிப்பவை. இவற்றை அனுமதித்தால் தங்கள் நாட்டில் சாகுபடியாகும் 32 கோடி பவுண்ட் காய்கறி விவசாயம் குறிப்பாக தக்காளி மற்றும் வெள்ளரி சாகுபடி பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் 1.6 கோடி மாம்பழங்களை பிரிட்டன் இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் பவுண்ட் வருமானம் கிடைக்கிறது.
இந்த தடையை விலக்குவது குறித்து டிசம்பர் 31, 2015-க்கு முன்பாக மறு பரிசீலனை செய்யப்படும். இந்தியாவில் இப்போதுதான் மாம்பழ சீசன் ஆரம்பமாகியுள்ளது. ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையால் பல கோடி ரூபாய் ஏற்றுமதி வருமானம் இழப்பு ஏற்படும் என்று ஏற்றுமதியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனின் முட்டாள்தனமான நடவடிக்கை இது என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் எம்.பி கெய்த் வாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தியா விலிருந்து பல நூறாண்டுகளாக மாம்பழங்கள் இறக்குமதி செய்யப் படுகின்றன. உரிய வகையில் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் கமிஷனின் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியுடன் கடைப்பிடிக்குமாறும், இந்த விஷயத்தில் இந்தியாவையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT