Published : 15 Dec 2014 10:20 AM
Last Updated : 15 Dec 2014 10:20 AM
ஹெச்டிஎப்சி வங்கி தன்னுடைய தாய் நிறுவனமான ஹெச்டிஎப்சியுடன் நீண்ட கால அடிப்படையில் இணைவது நல்லதாக இருக்கலாம், ஆனால் இப்போதைக்கு அதற்கான எந்த திட்டமும் இல்லை என்று ஹெச்.டி.எப்.சி. வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி தெரிவித்தார். மேலும் இதற்கு ஒழுங்கு முறை ஆணையத்தில் சில விளங்களுக்கும் தேவைப்படும் என்றார்.
ஹெச்.டி.எப்.சி, மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கி இணைப்பு யோசனை குறித்து பல காலமாக பேசப்பட்டு வருகிறது. ஒரு வேளை இந்த இணைப்பு நிறைவேறி இருந்தால் பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.க்கு அடுத்த இடத்தில் இந்த நிறுவனம் இருந்திருக்கும்.
இப்போதைக்கு தனியார் வங்கிகளில் கடன் வழங்குதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹெச்.டிஎப்.சி. வங்கி, சந்தை மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது.
ஹெச்.டி.எப்.சி. மற்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கியை இணைப்பது நீண்ட காலத்தில் நல்லதுதான். ஆனால் தற்போது அதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று ஹெச்.டி.எப்.சி. வங்கியின் தலைவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கொடுத்திருக்கும் பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் கடந்த 20 வருடங்களாக இதையே சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஹெச்.டி.எப்.சி. வங்கியின் நிர்வாக இயக்குநராக ஆதித்யா பூரி இருக்கிறார். ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த இணைப்பு யோசனை குறித்த பேச்சுக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நீண்ட கால பண்ட்கள் வெளியிட்டு வங்கிகள் கடன் திரட்டிக்கொள்ளலாம் என்று கடந்த ஜூலையில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதிலிருந்து இணைப்பு குறித்த பேச்சுகள் வர ஆரம்பித்தன.
டைம்ஸ் பேங்க், சென்சூரியன் பேங்க் ஆப் பஞ்சாப் ஆகிய இரண்டு வங்கிகள் ஹெச்.டி.எப்.சியுடன் இணைந்தன. இந்த இணைப்பை நிகழ்த்தியவர் ஆதித்யா பூரி.
சமீபத்தில் ஹெச்.டி.எப்.சி.யின் தலைவர் தீபக் பரேக் இந்த இரண்டு நிறுவனங்கள் இணைப்பு குறித்து யோசிக்கவில்லை. இந்த இணைப்பினால் ஒரு நிறுவனங்களுக்கும் பயன் கிடைக்கும் என்றால் உரிய நேரத்தில் இதுகுறித்து பரிசீலனை செய்யலாம் என்றார்.
இந்த இணைப்பு சாத்தியமானதுதான், ஆனால் சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்று ஹெச்.டி.எப்.சி.யின் துணைத்தலைவர் கேகி மிஸ்ட்ரி தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT