Published : 16 Dec 2014 12:32 PM
Last Updated : 16 Dec 2014 12:32 PM
1992 காலகட்டம். உலகமெங்கும் செல்போன்கள் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியது. செல்போன் என்றாலே நோக்கியாதான் என்னும் பொசிஷனிங் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சாமானியர் வாங்கும் மாடல்கள் முதல், ஆடம்பரமான விலை உயர்ந்த மாடல்வரை, வகை வகையான போன்களை வித விதமான விலைகளில் நோக்கியா களத்தில் இறக்கியது. மலிவு விலை நோக்கியா 1100, இருபத்தைந்து கோடி விற்பனையாகி வரலாறு படைத்தது: 3310, 638, 2160 ஆகிய மாடல்களும் வெற்றிப் படைப்புகள். மோட்டரோலா, ஸோனி, எரிக்ஸன், பானஸோனிக், சீமென்ஸ் ஆகிய அத்தனை முன்னணி நிறுவனங்களையும் நோக்கியா புறம் தள்ளி, செல்போன் உலகத்தின் நம்பர் 1 ஆனது.
இந்த காலகட்டத்தில், கம்ப்யூட்டர் உலகிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துகொண்டிருந்தன. 1980 வரை, கம்ப்யூட்டர்கள் அலுவகங்களில் மட்டுமே பயன்பட்டன. ஐ.பி.எம், ஆப்பிள் போன்ற கம்பெனிகள் தனியார் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்தார்கள், 19-ம் நூற்றாண்டின் கடைசி காலத்தில் இந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அமெரிக்காவில் சாமானியரும் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளாகிவிட்டன. ஹோம் கம்ப்யூட்டர்கள் என்னும் பெயரும் பெற்றன.
பிராட்பேண்ட், இணையதளம் அமெரிக்க ராணுவத்தின் கண்டுபிடிப்பு: அவர்களால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன. 1991 – இல் அமெரிக்க அரசாங்கம், இவை இரண்டையும் பொதுமக்கள் உபயோகிக்க அனுமதித்தது. இதனால், கம்ப்யூட்டர், மனிதகுலத்தின் அதிமுக்கிய தகவல் கருவியானது.
இதுவரை, மக்களின் பொழுது போக்குக் கருவிகள் ரேடியோவும், டெலிவிஷனும் மட்டுமே. கம்ப்யூட்டரில் பாட்டுக் கேட்கும், படம் பார்க்கும் வசதிகள் வந்தன. அதாவது, கம்ப்யூட்டர், தகவல் (Information), பொழுதுபோக்கு (Entertainment) ஆகிய இரண்டும் சங்கமிக்கும் கருவியானது. மனிதனின் இன்னொரு முக்கியத் தேவை கருத்துப் பரிமாற்றம் (Communication). இதற்குப் பயன்பட்ட ஒரே கருவி செல்போன். தகவல், பொழுதுபோக்கு, கருத்துப் பரிமாற்றம் ஆகிய மூன்று தேவைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரே கருவி அப்போது இல்லை. இந்த மூன்றின் சங்கமத்தை, ICE Age (தகவல்+ பொழுதுபோக்கு + கருத்துப் பரிமாற்றக் காலம்) என்று தொழில்நுட்ப மேதைகள் அழைக்கிறார்கள்.
இயங்குதளம்
ICE Age வருகையை எதிர்பார்த்த நோக்கியா, 2002 - ம் ஆண்டில், ஸ்மார்ட் போன்கள் எனப்படும், கம்ப்யூட்டர் அம்சங்கள் கொண்ட புதுயுக போன்களை அறிமுகம் செய்தது. செல்போன், கம்ப்யூட்டர் போன்ற கருவிகளை ஹார்ட்வேர் (Hardware) என்று சொல்லுவோம். இந்த ஹார்ட்வேரை இயக்க சாஃப்ட்வேர் என்னும் மொழி தேவை. இதன் பெயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System). நோக்கியா, சிம்பியன் (Symbian) என்னும் கம்பெனியின் ஆப்பரேடிங் சிஸ்டத்தைத் தனக்காகத் தேர்ந்தெடுத்தது.
நோக்கியா 7650 என்னும் மாடல் அறிமுகமானது. அடுத்து அரங்கேறிய நோக்கியா 7600, நோக்கியா 7610 போன்ற ஸ்மார்ட் போன்கள் பெருவெற்றி கண்டன. போட்டியாளர்களே இல்லாத ஒரே காரணத்தால்தான் ஜெயிக்கிறோம் என்று நோக்கியா உணரவில்லை.
வெவ்வேறு உலகம்
செல்போன்களும், ஸ்மார்ட் போன்களும் வெவ்வேறு உலகங்கள், இவற்றின் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அடியோடு மாறுபட் டவை. செல்போன் உபயோகிப்பவர்கள், தங்கள் செல்போனைப் பெரும்பாலும், பேசிக்கொள்ள உபயோகித்தார்கள். வெளிச்சம் காட்டும் டார்ச் லைட், நேரம் சொல்லும் கடிகாரம் போன்றவை கொசுறு உபயோகங்கள். அவர்கள் செல்போனில் எதிர்பார்த்தவை இரண்டே இரண்டு அம்சங்கள்தாம் – பேசும் வசதி, நீண்ட ஆயுட்காலம்.
இருவேறு வாடிக்கையாளர்கள்
ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் இவர்களிலிருந்து அடியோடு மாறுபட் டிருந்தார்கள். பேசுவதைத் தாண்டி, ஈ மெயில் அனுப்ப, இணையதளங்கள் பிரெளசிங் பண்ண, மெஸெஜ் அனுப்ப, தங்களுக்குப் பிடித்த பாடல்களை டவுன்லோட் செய்ய, செல்போன்களைப் பயன்படுத்த விரும்பினார்கள்.
செல்போன் வாடிக்கையாளர்களும், ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களும் அடியோடு வேறுபட்டவர்கள் என்பதை நோக்கியா அறிந்துகொள்ளவில்லை. அதனால், அதிக ஆயுள் தரும் ஹார்ட்வேரில் கவனம் காட்டியது. சாப்ட்வேர் இரண்டாம் பட்சமாக இருந்தது.
ஈ மெயில் அனுப்புதல், மெசேஜ் அனுப்புதல், இணைய தள பிரெளசிங், புத்தகம் படித்தல், குறிப்புகள் எடுத்தல் போன்ற, செல்போனில் செய்யும் பணிகளுக்கு ஆப்ஸ் (Apps – Applications என்பதன் சுருக்கு வார்த்தை.) என்று பெயர். செல்போன்களில் இருக்கும் ஆப்ஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி, அதனைப் பயன்படுத்தும் வழிகள் அதிகமாகும். நோக்கியா ஸ்மார்ட் போன்களில், கைவிரல்விட்டு எண்ணக்கூடிய ஆப்ஸ்களே இருந்தன.
2007 – இல் ஆப்பிள் கம்பெனி, தன் ஐ போன்களை அறிமுகம் செய்தது. இவற்றின் ஆப்பரேடிங் சிஸ்டம் iOS என்று அழைக்கப்பட்டது. ஐ போனிலும், ஒரு சில ஆப்ஸ்களே இருந்தன. ஆனால், பார்க்கும் அழகிலும், பயன்படுத்தும் எளிமையிலும், ஐ போன்கள் தலை சிறந்து இருந்தன. தங்கள் மனங்களில் கொடுத்திருந்த நம்பர் 1 இடத்திலிருந்து நோக்கியாவை மக்கள் கீழே இறக்கினார்கள். அங்கே ஐ போன்களை அமரவைத்தார்கள். ஆப்ஸ்கள்தாம் ஸ்மார்ட் போன்களில் வெற்றி காணும் மந்திரச் சாவி என்று ஐ போன் உணர்ந்தது. 2008 – இல் 500 ஆப்ஸ்கள் வந்தன: இதுவே, 2012 – இல் 11 லட்சமானது.
கூகுள் கம்பெனி ஆன்ட்ராய்ட் (Android) என்னும் ஆப்பரேடிங் சிஸ்டம் கண்டுபிடித்தது. இதைப் பயன்படுத்தும் உரிமையை ராயல்டி முறையில் பிறருக்கு வழங்கியது. சாம்ஸங், HTC ஆகிய கம்பெனிகள் ஆன்ட்ராய்ட் முறையில் ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்தார்கள். இந்த போன்களிலும், நோக்கியாவை விட அதிக அளவில் ஆப்ஸ்கள் இருந்தன. .
சிக்கலில் நோக்கியா
நோக்கியா இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்ட்து. அதிக ஆப்ஸ் இருந்தால்தான், அதிக ஸ்மார்ட் போன்கள் விற்கமுடியும்: அதிக விற்பனை இருந்தால்தான், சாஃப்ட்வேர் நிபுணர்கள் ஆப்ஸ் உருவாக்குவார்கள். இந்த இரண்டும் கெட்டான் நிலையால், சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அகால மரணம் அடைந்தது. .
2011 – ம் ஆண்டு. சிம்பியனிலிருந்து இன்னொரு ஆப்பரேடிங் சிஸ்டத்துக்கு மாறி, மக்கள் மனங்களில் இழந்த இடத்தைப் பிடிக்க நோக்கியா முடிவெடுத்தது. மிகச் சரியான முடிவு. ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்த தீர்வு, மிகத் தவறானதாக இருந்தது. அப்போது, 47 சதவிகித செல்போன்களில் iOS – ம், 45 சதவிகித செல்போன்களில் ஆன்ட்ராய்டும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களாக இருந்தன. iOS ஆப்பிள் கம்பெனியின் தனிச்சொத்து. அதற்கு வேறு யாரும் உரிமை பெற முடியாது. நோக்கியா, கூகுளிடமிருந்து ஆன்ட்ராய்ட் பயன்படுத்தும் உரிமையை வாங்கியிருக்கவேண்டும்.
இமாலயத் தவறு செய்தார்கள். சுமார் 3 சதவிகித போன்களே பயன்படுத்திய வின்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் கம்பெனியிடம் வாங்கினார்கள். ஆப்பிள், சாம்ஸங் ஆட்சி செய்த ஸ்மார்ட் போன் உலகத்தில், நோக்கியா காணாமல் போனது. செல்போன்கள் உலகிலும், நோக்கியாவுக்கு வாழ்வா, சாவா பிரச்சனை வந்தது. தனிக்காட்டு ராஜாவாக இருந்த நோக்கியாவின் சாம்ராஜ்ஜியம் சிதறியது. கொரியா, சீன, தைவான் நாடுகளின் செல்போன்கள், இந்தியாவின் மைக்ரோமாக்ஸ் ஆகியவை குறைந்த விலையில் அறிமுகமாயின. உலகச் சந்தைகளில் கணிசமான இடம் பிடித்தன.
எடுபடாத உத்தி
இந்தப் போட்டியை எதிர்கொள்ள, நோக்கியாவும் ஆஷா என்னும் பெயரில், குறைந்த விலை போன்களை அறிமுகம் செய்தார்கள். இவை வாடிக்கையாளர்களிடம் எடுபட வில்லை, படுதோல்வி அடைந்தன. உயர்மட்ட விலையில் ஆப்பிள், சாம்ஸங் இருவரிடமும் தோல்வி: மலிவு விலை போன்களில் HTC, மைக்ரோமாக்ஸ் போன்றவர்களிடம் தோல்வி. ஆமாம், எல்லாக் களங்களிலும் நோக்கியாவுக்குப் படுதோல்வி.
இப்போது விழுந்தது இன்னொரு இடி. ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தொழிற்சாலைதான் நோக்கியாவின் உலகிலேயே மிகப் பெரிய உற்பத்தி மையம். 17,658 கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்ததாக இந்திய, தமிழக அரசுகள் வழக்குத் தொடுத்தார்கள். ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை நோக்கியா மூடவேண்டிய கட்டாயம். பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வாழ்க்கை இருண்டது.
தன்னால், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாது என்று முடிவெடுத்த நோக்கியா, மைக்ரோசாஃப்ட் கம்பெனிக்கு விலைபோயிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் கைதூக்கி விட்டாலும், நோக்கியா மறுபடி எழுந்துவருவது சந்தேகமே என்று மேனேஜ்மென்ட் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
நோக்கியாவின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், முக்கிய காரணம் – செல்போன்களும், ஸ்மார்ட் போன்களும் வெவ்வேறு உலகங்கள் என்று புரிந்துகொள்ளாமல், நோக்கியா செய்த பொசிஷனிங் தவறு.
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT