Published : 17 Dec 2014 10:17 AM
Last Updated : 17 Dec 2014 10:17 AM
வெளிநாட்டிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் சர்க்கரை ஆலைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பிரேசிலிலிருந்து 40 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 200 கோடி டாலர் மதிப்பிலான சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அதே மதிப்புக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவிடம் கூடுதலாக சர்க்கரை உள்ளதாக இந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஓ.பி. தனுகா தெரிவித்துள்ளார்.
சர்க்கரை உற்பத்தி உள்நாட்டில் அதிகரித்த போதிலும் அதை பத்திரப்படுத்தி வைக்க போதிய இடவசதி இல்லை. இதனால் இந்தியாவிலிருந்து சர்க்கரை மறு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் 600-க்கும் அதிகமான சர்க்கரை ஆலைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நடப்பு பருவத்தில் 225 லட்சம் டன் சர்க்கரை தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி அதிகமாக இருந்த போதிலும் 2013-14-ம் நிதி ஆண்டில் மட்டும் இந்தியா 8 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்துள்ளது.
சர்வதேச அளவில் உற்பத்தி அதிகரித்து வருவதால் விலையும் குறைந்துள்ளது. இருப்பினும் நுகர்வு அதிகமாக இருப்பதால் பெருமளவில் விலை சரியவில்லை. நடப்பு நிதி ஆண்டில் சர்வதேச அளவிலான சர்க்கரை உற்பத்தி 1,755 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சர்க்கரை சந்தை 6 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்கினாலும், ஏற்றுமதியில் ஆறாவது இடத்தில் உள்ளது. ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 5.2 சதவீத அளவுக்கே உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட 40 லட்சம் டன் சர்க்கரையில் 18 லட்சம் டன் சர்க்கரை மறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 22 லட்சம் டன் சர்க்கரை உள்நாட்டு நுகர்வுக்காக சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சர்க்கரை கூடுதலாக கையிருப்பில் இருந்தபோதிலும் விலை அதிகம் சரியாமலிருக்க பகுதியளவில் கட்டுப்பாடு கடந்த நான்கு ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. கடந்த சீசனில் ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 35 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது சர்க்கரை ஆலை அதிபர்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT