Published : 15 Dec 2014 10:31 AM
Last Updated : 15 Dec 2014 10:31 AM
ஆசியாவில் இருக்கும் முக்கியமான நாணயங்களின் மதிப்பு ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், அடுத்த ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் என்று ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்திருக்கிறது.
உள்நாடு மற்றும் சர்வதேச சூழ்நிலைகளில் மாற்றம் இருந்தாலும் கூட அடுத்த வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.5 முதல் 63 வரை இருக்கும் என்றும், ஆசியாவில் இருக்கும் முக்கிய நாட்டு கரன்ஸிகளுடன் ஒப்பிடும்போது ரூபாயின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று ஹெச்.எஸ்.பி.சி. தெரிவித்திருக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாகும். இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையும். பணவீக்கமும் குறையும். இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்கப்படும் என்று ஹெச்.எஸ்.பி.சி. ஆசிய பிரிவு தலைவர் (பாரெக்ஸ்) பால் மேக்ல் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஆசிய பிராந்தியத்தில் முக்கிய கரன்ஸியாக ரூபாய் இருக்கும். இந்தியாவுக்கு அடுத்து இந்தோனேஷியாவின் ரூபியாவும், பிலிப்பைன்ஸ் நாட்டின் பேசோவும் இருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் 68.80 ரூபாய் வரை சரிந்தது. அதன் பிறகு ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.
ரூபாய் ஸ்திரமாக இருக்கும் அதே நேரத்தில் மற்ற ஆசிய நாடுகளின் கரன்ஸியில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. வரும் காலத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும். இதன் காரணமாக டாலருக்கு நிகராக மற்ற ஆசிய நாணயங்கள் மதிப்பு சரிவடைய ஆரம்பிக்கும். மேலும் ஜப்பானின் மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்வதால் இந்த கரன்ஸியின் மதிப்பு சரியக்கூடும் என்று ஹெச்.எஸ்.பி.சி. தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் பணவீக்கம் குறைவது, வளர்ச்சி ஆரம்பிக்க இருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அடுத்த வருடத்தில் ஆசியாவில் ரூபாய் மதிப்பு ஸ்திரமாக இருக்கும். இதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் என்று ஹெச்.எஸ்.பி.சி. தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT