Published : 12 Dec 2014 09:44 AM
Last Updated : 12 Dec 2014 09:44 AM

வங்கிகள் இணைப்பு அவசியமானது: பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா

தற்போதைய நிலைமையில் வங்கிகள் இணைப்பு அவசியமானது என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார். இந்தியாவில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு பெரிய வங்கிகளாவது இருக்க வேண்டும்.

இது குறித்து வங்கிகள் அவர்களுக்குள் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். வங்கிகள் இணைப்பு வேண்டும் என்பதை கடந்த காலத்தில் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. வங்கிகள் தங்களுக்கு சரியான வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தரமான வங்கிகள் இன்னொரு தரமான வங்கியுடன் இணைய வேண்டும் என்று டெல்லி பொருளாதார மாநாட்டில் தெரிவித்தார். வங்கித்துறையில் மேலும் சீர்திருத் தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் பங்குகளை 52 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

மேலும் வங்கிகளுக்கு நிதி உதவி வேண்டும் என்றால் மத்திய அரசு தொடர்ந்து நிதி உதவி அளிக்க முடியாது. வங்கிகள் வளர வேண்டும் என்று நினைத்தால், தங்களுக்கு தேவையான நிதியை வேறு வழிகளில் அவர்களே தேடிக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது என்பதை பட்டாச்சார்யா சுட்டிக்காட்டினார்.

இதனால் பேசல் 3 விதிமுறைகளை எட்டுவதற்கு பலதரப்பட்ட வாக்குரிமை உள்ள பங்குகளை வெளியிடுவதைப் பற்றி யோசிக் கலாம் என்றார். எவ்வளவு தொகை, எந்த குறிப்பிட்ட காலத்தில் தேவை என்பதை கணக்கிட்டு இப்போதே அதற்கான வேலையை பொதுத்துறை வங்கிகள் ஆரம்பிக்கலாம் என்றார்.

அனைத்து பொதுத்துறை வங்கி களில் இருக்கும் அரசாங்கத்தின் பங்குகளை 52 சதவீதமாக குறைக்கும்போது 1.6 லட்சம் கோடி ரூபாய் வரை திரட்ட முடியும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. 27 பொதுத்துறை வங்கிகளில் 22 வங்கிகள் அரசாங்கத்தின் கட்டுப் பாட்டிலும் மீதம் ஐந்து வங்கிகள் எஸ்.பி.ஐ. கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.

பேசல் 3 விதிமுறைகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி நடைமுறைக்கு வருகின்றன. 2008-ம் ஆண்டு லேமேன் பிரதர்ஸ் பிரச்சினை காரணமாக வங்கிகளின் ரிஸ்கினை குறைப்பதற்காக பேசல் மூன்று விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.

வங்கியாளர்களின் சம்பளம் குறித்து பேசிய பட்டாச்சார்யா, சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் வங்கியாளர் களுக்கு சம்பளம் மிக குறைவு என்று குறிப்பிட்டார். இந்திய வங்கியாளர்களில் 70 சதவீதத் துக்கும் மேல் பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிகிறார்கள், ஆனால் சந்தையின் அளவை விட குறைவாகவே அவர்கள் ஊதியம் பெறுகிறார்கள் என்றார்.

எஸ்.பி.ஐ வங்கியின் இயக்குநர் குழு சிறப்பானதுதான். ஆனால் மற்ற வங்கியின் இயக்குநர் குழுவுடன் ஒப்பிடும்போது அப்படிச் சொல்ல முடியாது. இதற்கு இயக்குநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாக இருப்பது தான் காரணம். சிறப்பான நபர்கள் இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கான ஊதியம் வழங் கப்பட வேண்டும்.

1950, 1960களில் பல வங்கிச் சட்டங்கள் இருக்கின்றன. ஏடிஎம், மியூச்சுவல் பண்ட், இண்டர்நெட் பேங்கிங் இல்லாத காலத்தில் இவை இயற்றப்பட்டன. காலத்துக்கு ஏற்றதுபோல சட்டத்தை மாற்ற வேண்டும் என்றார். வங்கிகள் இணைப்பு குறித்து பேசும் போது, சிறிய வங்கிகள் புதுமைகள் மற்றும் தொழில்நுட்ப விஷயத்தில் மற்ற வங்கிகளுடன் போட்டிபோடுவது கடினமாக இருக்கும், அதே சமயத்தில் லாபம் ஈட்டுவதும் சிரமம்.

தரமான வங்கிகள் மற்ற தரமான வங்கிகளுடன் இணைய வேண்டும், அதேபோல தரமற்ற வங்கிகள் மற்ற தரமற்ற வங்கிகளுடன் இணைய வேண்டும். இவர்கள் இணையும் போது ஒவ்வொருவரின் பலங்களும் இணைந்து பலவீனங்கள் குறையும் என்றார். இந்த இணைப்புக்காக பேச்சு வார்த்தைகள் இப்போது ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் ஒரே கருத்துள்ள வங்கிகள் ஒன்றாக இணைய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ஏதாவது செய்ய முடியும் என்றார்.

சிறிய வங்கிகள் குறித்து பேசும் போது, ஏற்கெனவே இருக்கும் வங்கிகள் செய்யாத எதாவது ஒரு விஷயத்தை செய்யும் போதுதான் அவர்கள் சந்தையில் நீடிக்க முடியும், இல்லையெனில் சந்தையில் போட்டியிடுவது கடினம் என்று தெரிவித்தார் அருந்ததி பட்டாச்சார்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x