Published : 10 Nov 2014 09:17 AM
Last Updated : 10 Nov 2014 09:17 AM
பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 52 சதவீத அளவுக்குக் குறைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 3 லட்சம் கோடி மூலதன தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நம்புவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
வங்கிகளின் மூலதன ஆதாரத்தை அதிகரிக்க ரூ. 3 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இத்தொகையைத் திரட்ட பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு உள்ள பங்கு அளவை 52 சதவீத அளவுக்குக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் செய்வதன் மூலம் மேலும் அதிக எண்ணிக்கையிலானோருக்கு வங்கிச் சேவையை அளிக்க முடியும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.
பொதுத்துறை வங்கிககளாகத் திகழ வேண்டும் என்பதால் அரசின் பங்களிப்பை 51 சதவீதத்துக்குக் கீழாகக் குறைக்கும் திட்டம் ஏதும் கிடையாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். தற்போது பொதுத்துறை வங்கி களில் அரசின் பங்கு 56.26 சதவீதம் முதல் 88.63 சதவீத அளவுக்கு உள்ளது. பாங்க் ஆப் பரோடாவில் குறைந்தபட்சமாக 56.26 சதவீதமும் அதிகபட்ச அளவான 88.63 சதவீதம் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலும் உள்ளது.
பேசல்-3 என்ற நிலையை 2018-ம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு வங்கிகளுக்கு ரூ. 2.4 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் வங்கிகளுக்கு அரசு ரூ. 11,200 கோடியை மூலதன தேவைக்காக ஒதுக்கியுள்ளது.
2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வங்கிகளுக்கு அரசு அளித்துள்ள தொகை ரூ. 58,600 கோடியாகும். தனது பட்ஜெட் உரையில் வங்கிகள் பேசல்-3 விதிமுறைப் படியான நிலையை எட்டுவதற்கு ரூ. 2,40,000 கோடி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
நிலம் கையகப்படுத்தல் சட்டம்
நிலம் கையகப்படுத்தும் சட்டத் தைக் கடுமையாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டாலும் இது உறுதியாகக் கொண்டு வரப்படும். இதன் மூலம்தான் பொருளாதாரத்தை மீட்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று ஜேட்லி கூறினார்.
நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இதற்கு ஆதரவு அளித்தது. இருப்பினும் இச்சட்டம் கடுமை யாக இருந்ததால் திட்டப் பணிகள் முடங்கின. இந்த சட்டம் கடுமையாக இரு்பபதால் திட்டப் பணிகள் முடங்குவதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டின. இந்த சட்டத்தில் உள்ள முட்டுக் கட்டைகள் நீக்கப்படும் என்று ஜேட்லி உறுதியளித்தார்.
வரி சீர்திருத்தம்
நமது பொருளாதார வளர்ச்சிக்கு வரி விதிப்பு முறை பெரிதும் தடைக்கல்லாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரிவிதிப்பில் தளர்வு கொண்டுவரப்படும். வரி செலுத்துவோரை கசக்கிப் பிழியும் வகையில் வரி விதிப்பு முறைகள் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
சரக்கு சேவை வரி
எதிர்வரும் குளிர்கால கூட்டத் தொடரில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்படும். ஒரு மாதம் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடர் இம்மாதம் 24-ம் தேதி தொடங்குகிறது. நீண்ட காலமாக கிடப்பில் உள்ள காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT