Last Updated : 20 Nov, 2014 09:48 AM

 

Published : 20 Nov 2014 09:48 AM
Last Updated : 20 Nov 2014 09:48 AM

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதில் வங்கிகள் அலட்சியம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் அலட்சியம் காட்டுவதாக மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா புகார் கூறினார். இத்துறைக்கு வங்கிகள் அளிக்கும் கடனுதவி போதுமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டெல்லியில் அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் அவர் மேலும் கூறியது: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் அளிக்கும் கடன் போதுமான அளவுக்கு இல்லை. இத்துறை நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன.

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் எவ்வித ஈட்டுறுதி அளிக்கத் தேவையில்லை என்ற விதிமுறை உள்ள போதிலும் வங்கிகள் கடன் வழங்குவதில் அலட்சியம் காட்டுகின்றன. இந்த விஷயத்தில் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை புறக்கணிக்கின்றன என்றார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும், நிதி அமைச்சகத்தின் பதிலுக்குக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதற்கு ஈடாக எந்த சொத்து அல்லது தனி நபர் உறுதியையும் வங்கிகள் கேட்கக் கூடாது. இதற்கான முழு பொறுப்பையும் தமது அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக கடன் ஒப்புகை நிதிய அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளாகவும் அவர் கூறினார். இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டதே சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்குத்தான் என்று சுட்டிக் காட்டினார் மிஸ்ரா.

சிறு, குறு மற்றும் மத்திய ரக தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்குவதற்கு ஈட்டுறுதி தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி விதிமுறை உள்ளதாகக் கூறினார். சிறப்பாக செயல்படும் சிறு, குறு மற்றும் மத்திய ரக தொழில் நிறுவனங்களின் கடந்த கால செயல்பாடுகளைக் கவனித்து அவற்றுக்கு அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை வங்கிகள் எவ்வித ஈட்டுறுதியும் இல்லாமல் அளிக்கலாம் என்றார்.

அரசின் புதிய தொழில் உற்பத்திக் கொள்கையின்படி நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பை 25 சதவீத அளவுக்கு உயர்த்துவதே நோக்கம். இந்த இலக்கை 10 ஆண்டுகளில் எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் உருவாக்குவதன் மூலம் இந்த இலக்குகளை எட்ட முடியும். இவை அனைத்துமே தனித்து இயங்கும் அமைப்புகளால் நிர்வகிக்கப்படும். தொழில் நகரங்கள் உருவாக்குவது மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரும் இத்தகைய தொழில் நகரில் இடம்பெறச் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.

இவ்விழாவில் இத்துறையில் சிறப்பாக செயல்படும் நிறுவனத் தலைவர்களை பாராட்டி விருதுகளையும் அமைச்சர் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x