Published : 10 Nov 2014 09:25 AM
Last Updated : 10 Nov 2014 09:25 AM
உணவு மானியத்துக்கு தீர்வு காணாமல் சர்வதே வர்த்தக அமைப்பைச் சேர்ந்த சில நாடுகள் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா சர்வதேச மாநாட்டில் பேசுகையில் இக்கருத்தைத் தெரிவித்தார்.
வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (டிஎப்ஏ) நிறைவேற்ற வேண்டும் என்று சில நாடுகள் விரும்புவதாக சமீபத்தில் டபிள்யூ.டி.ஓ. அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராபர்டோ அஸவெடோ கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர், எந்த ஒரு தீர்மானமும் ஒருமித்த அடிப்படையில் கொண்டு வரப்பட வேண்டும். எந்த ஒரு நாட்டையும் தவிர்த்துவிட்டோ அல்லது நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் பரவாயில்லை, நீங்கள் உங்கள் நிலையில் இருந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அதைத் தொடர முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச வர்த்தக அமைப்பில் ஒப்புக் கொள்ளப்படாத எந்த ஒரு விஷயமும் சட்டமாக கொண்டு வர முடியாது. அப்படியிருக்கும்போது முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எப்படி கொண்டு வர முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார். டபிள்யூ.டி.ஓ. தீர்மானங்களுக்கு இந்தியா முட்டுக் கட்டை போடுவதாகக் கூற முடியாது. ஒப்புக்கொள்ள முடியாத விஷயம் என்று எதுவுமேயில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
உணவு மானியத்துக்கு உரிய தீர்வு கண்டபிறகே வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா உறுதியாகக் கருதுகிறது என்றார்.
உருகுவே மாநாட்டில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா தனது விவசாயி களுக்கு அளிக்கும் மானியம் குறித்த பேச்சு ஒருபோதும் விவாதிக்கப் படவேயில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். சில மானியங்கள் அளிக்கப்பட்டபோதிலும் அதை அந்நாடுகள் மானியம் என்று குறிப்பிடவேயில்லை. பாலி மாநாட்டு தீர்மானம் சரியாக இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் நாட்டு மக்களை காக்க வேண்டிய கடமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT