Published : 03 Jul 2019 10:37 AM
Last Updated : 03 Jul 2019 10:37 AM
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு முற்றிலும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுவோருக்கும் ரூ. 5 லட்சம் வருமான வரி விலக்கு உச்ச வரம்பாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
நடப்பு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றன. இதில் விவசாயிகள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துகளைக் கேட்டறிந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் தொடர்ச்சியாகவே இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது என்பதால் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வருமான வரித்துறை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் முழுமையாக இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத வருவாய்ப் பிரிவினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது வருமானவரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது தான்.
இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை தொடர்பான பெரிய அளவிலான அறிவிப்புகள் இடம் பெற்றன. வருமான வரி உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், வரி விதிப்புக்குரிய தொகை ரூ. 5 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.
இந்த வரிச் சலுகையின் மூலம் மொத்த வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கையான 6.84 கோடியில் 3 கோடி பேருக்கு வரி இல்லாமல் போனது. இவர்கள் இதுவரை செலுத்தி வந்த வரியில் அதிகபட்சமாக ரூ. 12,500 வரை மிச்சமாகியுள்ளது.
எனினும் ரூ. 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் கூட இந்தச் சலுகையில் வரியிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால், அதற்கு இன்ஷூரன்ஸ், பங்குச் சந்தை முதலீடு, வீட்டுக்கடன் போன்றவற்றைக் கணக்கில் காட்ட வேண்டும். இதுமட்டுமின்றி வீட்டுக்கடன், வீட்டு வாடகை போன்றவற்றிக்கு இரு வீடுகளுக்கு சலுகை பெறவும் கடந்த பட்ஜெட்டில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த ஆண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட்டில் வருமான வரியை பொறுத்தவரையில் வரி விலக்கு உச்ச வரம்பு 5 லட்சம் என்பது அனைவருக்கும் பொதுவான சலுகையாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுவாக ஓங்கி ஒலிக்கிறது.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்முறையாக பதவியேற்ற போது வருமான வரி விலக்குக்கான ஆண்டு வருவாய் உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அதன்பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்பவில்லை. வருமான கணக்கீடு இன்றி வருமான வரி விலக்கு வரம்பு குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வருமானவரி விகிதம் தற்போது 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை 5% வரி வசூலிக்கப்படுகிறது.
ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டால், அதன்பின் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இத்துடன் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் வருமான வரிக் கழிவுகளும், தற்போது ஏற்படும் செலவுகளுக்கு நிகராக மதிப்பிட்டு கழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. எடுத்துக்காட்டாக, போக்குவரத்து, கல்வி, மருத்துவச் செலவுக்காக செலவிடப்படும் தொகை என்பது மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் இதற்காக வழங்கப்படும் வருமான வரி கழிவுத் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT