Last Updated : 03 Jul, 2019 12:10 PM

 

Published : 03 Jul 2019 12:10 PM
Last Updated : 03 Jul 2019 12:10 PM

காலி மனைகளுக்கு வரி: பட்ஜெட்டில் வருகிறது அறிவிப்பு?

பயன்பாடு இல்லாமல் காலியாக வைத்திருக்கும் மனைகளுக்கு வரி விதிப்பதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இதன்மூலம் மனைகளின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஜனரஞ்சக திட்டங்களில் எல்லோருக்கும் வீடு என்ற இலக்குடன் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமும்' ஒன்று. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கும் மிகாமல்), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சம்-6 லட்சம் வரை) இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.

அதே நேரத்தில்,நடுத்தர வருமான பிரிவினர் - 1 (ஆண்டு வருமானம் 6 லட்சம் - 12 லட்சம் வரை), நடுத்தர வருமான பிரிவினர் - 2 (12 லட்சம் - 18 லட்சம் வரை) ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

சிஎல்எஸ்எஸ் (Credit Linked Subsidy Scheme) எனப்படும் கடனோடு இணைந்த வட்டி மானியம் என்கிற வட்டிச் சலுகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி 2022 -ம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 20 லட்சம் வீடுகள் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

எனினும் எதிர்பார்த்த அளவு அனைவருக்கும் வீடு கிடைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இதில் வீட்டு மனைகளின் மதிப்பு கடுமையாக உயர்ந்து இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. நிலத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால் அதற்காக செலவிடும் நிலையில் சாதாரண மக்கள் இல்லை.

விவசாய பூமி, காலி மனைகள் இந்தியாவில் கருப்புப் பணத்தை முதலீடு செய்ய ஏதுவாக இருப்பதால் அதன் மதிப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. பல இடங்களில் மார்க்கெட் மதிப்பை விட வழிகாட்டுதல் மதிப்பு குறைந்த அளவில் உள்ளதால் காலி மனைகளில் கருப்புப் பணம் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனைகள் வாங்குவது சாதாரண மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது. காலியாக உள்ள இடத்தின் மீது வரி விதிக்கப்படும் பட்சத்தில்  தேவை இல்லாத இடங்களை மக்கள் முன்வந்து விற்பார்கள் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது.

இதனால் காலி மனைகளுக்கு 5% முதல் 9%  வரை வரி விதிக்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. இதன்மூலம் ரியல் எஸ்டேட் மதிப்பு வரும் ஆண்டுகளில் குறையவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில் ‘‘வீடுகள் அதிகமாக கட்டப்பட்டால் அனைவருக்கும் வீடு கிடைப்பது மட்டுமின்றி ஒரு விதத்தில் ரியல் எஸ்டேட் தொழிலும் வளரவே செய்யும். அதேசமயம் வெறும் முதலீடு அடிப்படையில் மனைகள் வாங்கும் போக்கு மக்களிடம் குறையும். காலியாக இருக்கும் இடங்கள் பயன்பாட்டுக்கு வரும்.

விவசாயம் அல்லது வீடு கட்டுவது என எதாவது ஒன்று நடைபெறும். அதேசமயம் ரியல் எஸ்டேட் துறை தற்போது சந்தித்து வரும் மிக முக்கியமான பிரச்சினை ஜிஎஸ்டி வரி. கட்டப்பட்டுள்ள பல வீடுகள் விற்பனையாவதில் சிக்கல்கள் உள்ளன. இதற்கு ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் அவசியம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x