Published : 04 Jul 2019 03:03 PM
Last Updated : 04 Jul 2019 03:03 PM
பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் நிலையில் அதனை விரைவுபடுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாளை (ஜூலை 5-ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் தொடர்ச்சியாகவே இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது என்பதால் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறியதாவது
நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாளை (ஜூலை 5-ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதால் இடைக்கால பட்ஜெட்டிலேயே பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் இடம்பெற்று விட்டன. இது, மாற்ற முடியாத கைவிலங்காக தற்போது மத்திய அரசுக்கு உள்ளது.
எனவே நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதனை உள்ளடக்கியதாக மட்டுமே இருக்கும். இருப்பினும் முடிந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வேலையின்மை அதிகரித்து வருகிறது.
பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதி சுணக்கம், வேலையின்மை அதிகரிப்பு, பருவமழை உரிய அளவு பெய்யாதது ஆகியவை தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக மத்திய அரசின் முன்பு உள்ளது.
இந்த காரணங்களால் பிப்ரவரி மாதத்தை விடவும் தற்போது சலுகைகள் அறிவிப்பதற்கான தேவை உள்ளது. எனவே அதனை மனதிற் கொண்டு மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரித்து விற்பனையை பெருக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட் இருக்க வேண்டும்.
செலவை பொருட்படுத்தாமல், வேலைவாய்ப்ப்பை பெருக்கும் வகையில் கடன் பெற்றவாது சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் தான் பொருளாதாரம் சீரடையும். இதற்கே கூட 6 மாதங்கள் வரை ஆகலாம். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை அமைய வேண்டும்.
மறைமுக வரியான ஜிஎஸ்டியை ஜிஎஸ்டி கவுன்சில் மட்டுமே முடிவு செய்யும். பட்ஜெட்டுக்கு தொடர்பு இல்லை. எனவே நேரடி வரியான வருமான வரி போன்றவற்றில் சலுகைகளை வழங்கலாம். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வருமானம் ஈட்டுவோருக்கு வழங்கப்படும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அனைவருக்கும் வழங்கலாம்.
சில குறிப்பிட்ட பிரிவுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு வழங்கப்படும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்கலாம். வீட்டுக்கடன் வட்டியில் சலுகை வழங்கலாம். இதன் மூலம் கட்டுமானத்துறை சார்ந்த 159 தொழில்கள் புத்துயிர் பெறும்.
உள்கட்டமைப்பு, சிறு- குறு தொழிலகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு தனியார் முதலீடுகளை ஈர்க்கலாம். கடன் பத்திரங்கள் போன்றவற்றை வெளியிட்டு நிதி திரட்டலாம். இதில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரிச் சலுகையும் வழங்கலாம்.
உரிய அளவில் கடன் கிடைக்காததும் தொழில் நிறுவனங்கள் தற்போது சந்தித்து வரும் மிக முக்கிய சிக்கல்களில் ஒன்று என கூறப்படுகிறது. இதற்கு வங்கிகளிடம் மூலதனம் இல்லாத நிலையே காரணமாகும். பல வங்கிகிகள் கொடுத்த கடனை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு காணும் அதேநேரம் பொதுத்துறை வங்கிகள் புதிய கடன்கள் கொடுத்தால் மட்டுமே தொழில்துறை தேக்கம் தீரும்.
எனவே பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதன ஒதுக்கீட்டை செய்யலாம். விவசாய கடன் அளவை அதிகரித்தல், அதற்கான வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் அத்தொழில் மீண்டெழும்.
பணப்புழக்கத்தை அதிகரிக்க பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு, வரி விதிப்பது போன்ற நடவடிக்கைளை நிறுத்தி வைக்கலாம். காலி மனைகளுக்கு வரி விதிப்பது, பரமபரை வரி போன்ற புதிய வரி விதிப்பு திட்டங்கள் பொருளாதாரம் மீண்டெழச் செய்ய மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இடையூறாகவே அமையும்.
எனவே பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதே மத்திய அரசின் முன்பு இருக்கும் முதல் பணியாகும். இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ள கூடாது. பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்வதற்கான தருணம் இதுவல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT