Published : 26 Nov 2014 10:09 AM
Last Updated : 26 Nov 2014 10:09 AM
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவீத அளவில் இருக்கும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முந்தைய காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. இதனால் வளர்ச்சியை அதிகரிக்க வட்டி விகிதத்தை குறைத்தாக வேண்டிய நெருக்கடியில் ரிசர்வ் வங்கி இருக்கிறது.
ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவுகள் எடுப்பதற்கு முன்பு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனை சந்தித்து வட்டி குறைப்பு பற்றி வலியுறுத்துவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜிடிபி தகவல் கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கின்றன.
இதுவரை வட்டி குறைப்பு வேண்டும் என்று பேசிய வந்த இந்திய நிதி அமைச்சர், இனி ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனை சந்திக்கும் போது, வட்டி குறைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வட்டி குறைப்பு மட்டும்தான் தொழில் துறையின் தேவையை அதிகரிக்கும் என்று நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
ரகுராம் ராஜன் நேற்று குஜராத் மாநிலத்தில் பேசும்போது வட்டி விகிதத்தை தற்போதைய நிலை யில் இருந்து குறைப்பது பற்றிய பதிலை தவிர்த்துவிட்டார். சில்லரை பணவீக்கம் 2016 ஜனவரிக்குள் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறார். மேலும் 70 கோடி இந்தியர்கள் தினமும் 2 டாலருக்கு கீழ் வருமானம் பெறுகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வட்டி விகிதங்களை குறைத்திருந்த நிலையில் ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை குறைப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை வட்டியை குறைக்க முடியாது என்பதற்கு வலுவான காரணத்தைக் கூறி நிதி அமைச்சரை சம்மதிக்க வைப்பது கடினமானதாக இருக்கும் என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களாக 5 சதவீதத்துக்கும் கீழான வளர்ச்சி யை இந்தியா அடைந்துவருகிறது. இதனால் 2 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்டு இந்திய பொருளாதாரம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 4.1 சதவீதத்துக்குள் குறைப்போம் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். ஆனால் வளர்ச்சி குறைவாக இருக்கும்போது, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கு செலவுகளைக் குறைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அப்படி செலவுகளைக் குறைக்கும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சி மேலும் குறையும் என்று நிதி அமைச்சக அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT