Published : 19 Aug 2017 10:49 AM
Last Updated : 19 Aug 2017 10:49 AM

‘பழையன போவதும் புதியன வருவதும் தவறில்லை கால ஓட்டத்தில்’

யப்படாதீர்கள். இது ‘தொழில் ரகசியம்’ பகுதி தான்; ‘தமிழ் வளர்போம்’ நிகழ்ச்சி அல்ல. அடியேன் சதீஷ் தான். ‘சாலமன் பாப்பையா’ அல்ல. புதிய பொருட்களுக்கு ஐடியாக்களை எங்கிருந்து எப்படி தேடுவது, அதை எப்படி, எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி கொஞ்சம் பேசுவோமே.

அது சரி, ஆரம்பத்தில் எதற்கு அந்த நன்னூல் நூற்பா என்று தானே யோசிக்கிறீர்கள்? அதை தெரிந்துகொள்ள ` Science’ பத்திரிகையில் ‘ப்ரையன் ஊஸ்ஸி’ மற்றும் ‘பென் ஜோன்ஸ்’ என்ற இரு ‘நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக’ பிசினஸ் பேராசிரியர்கள் எழுதிய கட்டுரையை பற்றி பேச வேண்டியிருக்கிறது.

படைப்பாற்றலை வளர்க்க, புதியவைகளை உருவாக்க வேறு இடங்களில் நிரூபிக்கப்பட்ட இரண்டு ஐடியாக்களை எடுத்து அதை புதிய முறையில் இணையுங்கள் என்கிறார்கள். பலர் இந்த வழியை பயன்படுத்தி புதியவைகளை படைத்திருப்பதை ஆய்வு மூலம் ஆராய்ந்து கூறினார்கள். ஏற்கெனவே இருக்கும் விஷயங்களின் புதிய கலவைதான் படைப்பாற்றல் கோட்பாட்டின் அடிப்படை. கலை, அறிவியல் முதல் வணிக கண்டுபிடிப்புகள் வரை இதே கதைதான் என்கிறார்கள்.

பல புதிய ஐடியாக்கள் பழைய கோட்பாடுகளிலிருந்துதான் பிறக்கின்றன. இருக்கும் அறிவிலிருந்து தான் புதியவைகள் தோன்றுகின்றன என்கிறார்கள். தலைமுடி ஆரோக்கியத்திற்கு எண்ணெய் தேய்த்து சீயக்காயோடு குளித்தோம். மற்ற நாட்களில் அவசர குளியல் சௌகரியத்திற்கு ஷாம்புவை பயன்படுத்தினோம். நமக்கு ஆரோக்கியமும் தேவைப்பட்டது, அதோடு சௌகரியமும் அவசியமாகப்பட்டது. இதை ஆழமாக அலசி, அழகாகப் புரிந்துகொண்டு, அமோகமாக இரண்டையும் கலந்தது ‘கெவின்கேர்’ கம்பெனி. ஆரோக்கிய சீயக்காயை சௌகரிய ஷாம்பு வடிவில் சேர்த்து தர, தமிழ்கூறும் நல்லுலகப் பெண்களின் வெள்ளிக்கிழமை தோழியானால் ‘மீரா’ ஹெர்பல் ஷாம்பு. அதாவது ஏற்கெனவே இருந்த இரண்டு பழைய விஷயங்களின் புதிய கலவைதான் மீரா!

பிகேவியரல் எகனாமிக்ஸ்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிறந்து வளர்ந்த பல சிறந்த அறிவார்ந்த புதுமைகளை (Intellectual innovations) ஆராய்ந்தால் ப்ரையன் மற்றும் பென் கூறும் உண்மை இன்னமும் விளங்கும். எழுபதுகளில் துவங்கி இன்று பலர் கவனத்தை கவர்ந்திருக்கும் பிகேவியரல் எகனாமிக்ஸ் ( Behavioural Economics) என்ற இயலை எடுத்துக்கொள்வோம். உளவியல் நுண்ணறிவு கொண்டு நாம் நடந்து கொள்ளும் விதத்தை அலசி நம் பொருளாதார முடிவுகள் எடுக்கும் முறைகளை ஆராயும் பொருளாதார ஆய்வு தான் பிகேவியரல் எகனாமிக்ஸ் . குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி கண்டிருக்கும் இந்த இயல் தான் இன்று பொருளாதார சிந்தனையில் ஹாட் டாபிக். பல நாடுகளின் அரசாங்கங்களின் பொது பாலிசி முடிவுகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த இயலை பற்றி விவரமாக வேறு ஒரு சமயம் பார்ப்போம். இந்த இயல் ஏதோ சுயம்புவாய் பூமியிலிருந்தோ ஆய்வு கூடத்திலிருந்தோ எழவில்லை. உளவியல் கோட்பாடுகளை பொருளாதார சிந்தனைகளில் கலந்ததால் விளைந்த இயல். அதாவது பழையதும் பழையதும் சேர்ந்த புதியது!

பழைய ஐடியாக்களை புதிய முறையில், புதிய வகையில் கலந்து புதுமைகள் படைப்பது என்னவோ சமீபத்திய சாதனை என்று நினைக்காதீர்கள் என்கிறார் ‘சார்ல்ஸ் டூஹிக்’ என்ற எழுத்தாளர். ‘தாமஸ் ஆல்வா எடிசனின்’ கண்டுபிடிப்புகளில் பல புழக்கத்தில் இருந்த பழைய அறிவியல் கோட்பாடுகள், ஐடியாக்களின் கலவையே என்ற வரலாற்று ஆசிரியர்களின் கூற்றை ஆதாரம் காட்டுகிறார். தந்தி தொழில்நுட்பத்தின் மின்காந்த சக்தி பற்றிய புரிதலின் அடிப்படையில் அந்த அறிவை எடிசனும் அவர் சகாக்களும் லைட்டிங், ஃபோனோக்ராஃப், ரயில், மைனிங் போன்ற துறைகளில் பயன்படுத்தி புதிய ஐடியாக்கள் கண்டுபிடித்தனர் என்கிறார்.

அறிவுசார் இடைத் தரகர்கள்

‘அமோக படைப்புத்திறன் உள்ளவர்கள் என்று நாம் நினைக்கும் பலர் அறிவுசார் இடைத்தரகர்கள்’ என்று வர்ணிக்கிறார் ப்ரையன் ஊஸ்ஸி. இருக்கும் ஒரு துறையில் பெற்ற அறிவை, புரிதலை இன்னொரு துறைக்கு மாற்றும் வித்தையை புரிந்தவர்கள் இவர்கள் என்கிறார். சமூகவியலில் இது போன்றவர்களை ஐடியா புரோக்கர்கள் என்கிறார்கள். இது போன்ற படைப்புத்திறன் மேதைகளின் மூளையில் சுயம்புவாய் எழுந்த ஒன்றில்லை. இது ஒரு ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் என்று கூறிய சமூகவியலாளர் ‘ரொனால்ட் பர்ட்’ கூற்றை மேற்கோள் காட்டுகிறார் டூஹிக்.

இது போன்ற ஐடியா புரோக்கராய் மாறுவது பெரிய கம்பசூத்திரமல்ல. நீங்களும் நானும் கூட இது போல் கலந்து புதுமைகள் படைக்க முடியும் என்று பல ஆய்வு கட்டுரைகள் கூறுகின்றன. ஆய்வை விடுங்கள். நம்மை சுற்றியிருக்கும் பல புதிய கோட்பாடுகளை, புதிய பொருட்களை பாருங்கள். யாரோ ஒருவர் இரண்டு பழைய ஐடியாக்களை எடுத்து அதை தூசி தட்டி, குளிப்பாட்டி, புது ட்ரெஸ் போட்டு பொட்டு வைத்து நம் தலையில் கட்டியிருப்பது உங்களுக்கே புரியும்.

குழந்தைகளுக்கு பிடித்த ஒன்றிலிருந்து ஆரம்பிப்போம். அவர்களுக்கு சாக்லெட் என்றால் கொள்ளை பிரியம் என்று நமக்குத் தெரியும். அதோடு பொம்மைகள் என்றால் அதிகமாக பிடிக்கும் என்பதும் தெரியும். ஆனால் இரண்டையும் கலந்து தந்தால் அவர்கள் பைத்தியமாய் அதை வாங்கித் தள்ளுவார்கள் என்பதை நாம் யோசிக்கவில்லை. அப்படி சிந்தித்து சாக்லெட்டையும் பொம்மையையும் கலந்து தந்தது ‘கிண்டர்ஜாய்’. இன்று உலகெங்கும் சக்கை போடுகிறது!

குழந்தைகளோடு நமக்கும் பிடிக்கும் ஒரு ஐட்டம் கோன் ஐஸ் க்ரீம். இது பிறந்த கதை தெரியுமா? 1904ல் அமெரிக்காவில் நடந்த உலக கண்காட்சியில் ‘ஏர்னஸ்ட் ஹம்வி’ என்பவர் பிஸ்கெட் போன்ற ஃவாஃபில் என்ற தின்பண்டத்தை விற்றார் . அடுத்த ஸ்டாலில் ஐஸ்க்ரீம் விற்றவருக்கு கப்புகள் தீர்ந்துவிட்டன. பார்த்தார் ஹம்வி. தன் ஃவாஃபிலை சுற்றினார், அதில் ஐஸ் க்ரீமை வைத்தார். விற்கத் துவங்கினார். பிறந்தது கோன் ஐஸ் க்ரீம்! அன்றிலிருந்து இன்று வரை நாம் ஒலிம்பிக் டார்ச்சை பிடித்துகொண்டு ஓடுவது போல் கோன் ஐஸை பிடித்துக்கொண்டு திரிகிறோம்!

உண்பதை விட்டு ஓட்டுவதை பார்ப்போம். மொபெட் ஓட்டுவது ஈசி, குறிப்பாக பெண்களுக்கு. ஆனால் பவர் கம்மி. ஸ்கூட்டருக்கு சக்தி அதிகம். ஆனால் ஓட்ட எளிதல்ல. இதை இரண்டையும் கலந்தால் என்ன என்று ‘டிவிஎஸ்’ கம்பெனிக்கு தோன்றியது. மொபெட்டின் எளிமையோடு ஸ்கூட்டரின் சக்தியை சேர்த்தது. பிறந்தது ‘ஸ்கூட்டி’. பெண்கள் அதைக்கொண்டு ரோட்டில் அடிக்கிறார்கள் லூட்டி!

தூக்கிச்செல்லும் சூட்கேஸ் ப்ளஸ் தள்ளிச்செல்லும் ட்ராலியின் கலவை தான் சூட்கேசின் கீழே சின்ன சக்கரங்கள் கொண்ட ஸ்ட்ராலி என்ற பொருள் வகை. டெலிஃபோன் என்ற கருவியில் காபியர் வசதியை சேர்த்ததால் பிறந்த வசதி தான் ஃபேக்ஸ் மெஷின். அதை விடுங்கள். பழைய கர்நாடக ராகங்களை எடுத்து அதோடு கிராமியத்தையும் மேற்கத்திய நோட்ஸ்களையும் கலந்து உணர்வுகளை தாலாட்டும் புதிய மெட்டுகளை, புதுமை மொட்டுக்களை நாற்பத்தி இரண்டு வருடங்களாக நமக்குத் தரவில்லையா பண்ணையபுர பிஸ்தா, தாலாட்டும் தாதா, நம் இசைஞானி இளையாராஜா!

பழையதை பழையதோடு சேர்த்தால் பாமரனால் கூட புதுமைகள் படைக்க முடியும் என்று எனக்கு செய்தே காட்டினார் சேலம் அருகே காகாபாளயம் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணி. இலையில் உணவு பரிமாறுவதற்கு முன் தண்ணீர் தெளிக்கிறேன் என்று பலர் குடம் நீரை கொட்டி வாழை இலையோடு அருகில் அமர்பவர்களுக்கும் சேர்த்து குளிப்பாட்டுவார்கள். இப்பெண்மணி சமயோஜிதமாக யோசித்து சின்ன மினரல் வாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்து அதன் மூடியில் திருமணங்களில் பன்னீர் தெளிக்கும் சொம்பில் உள்ளது போல் ஓட்டை போட்டு அதைக்கொண்டு தெளிக்க இலை மட்டும் நனைந்தது. அதாவது தண்ணீர் பாட்டில் + பன்னீர் சொம்பு = இலை சுத்தம். இந்த ஐடியாவை எந்த தொழிலதிபராவது புதிய பிராண்டாய் கொண்டு வந்தால் தேவலை!

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’. இது வீட்டில் படிக்கவேண்டிய நன்னூல். ‘பழையனதோடு பழையன சேர்ப்பின் புது பிராண்ட் புகுத்த வகையும் தானே’. இது ஆபீஸில் படிக்கவேண்டிய என்னூல் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x