Published : 13 Aug 2017 12:39 PM
Last Updated : 13 Aug 2017 12:39 PM
ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்து 50 நாட்களை தொட உள்ள நிலையில், தொழில் முனைவோர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இருந்த தயக்கங்கள் இன்னமும் களையப்படாமலேயே உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான குறு சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவர்கள் இப்போதுவரை ஜிஎஸ்டி எண் பதிவு செய்யாமலேயே உள்ளனர் என்கின்றனர் சிறு குறு தொழில் அமைப்பினர்.
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பின்னர் பல வித வரி விகிதங்கள் குறித்த ஆட்சேபம், வரி எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்தன என்றாலும் நடைமுறையில் சந்திக்கும் குழப்பங்களும் ஏராளமாக உள்ளன.
ஜிஎஸ்டியை கொண்டுவர பதினைந்து ஆண்டுகளாக பல அரசியல் கட்சிகளை அரசாங்கம் சமாளித்தது. ஆனால் தொழில் நிறுவனங்களை மட்டும் ஒரு சில மாதங்களிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. நாட்டின் மிகப் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு மனமாற்றம் ஏற்பட வேண்டாமா என்கின்றனர் சிறு வர்த்தகர்கள். ஜிஎஸ்டி எண் பதிவு செய்யவில்லை என்றால் தொழில் செய்ய முடியாது என்கிற நிலைநோக்கி தள்ளப் படுகின்றனர்.
பல கோடி சிறு தொழில் நிறுவனங்களை, வர்த்தகர்களை இந்த வரி முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த அரசு, தொழில் அமைப்புகள், தொழில்பேட்டைகளுடன் இணைந்து இதற்கான சிறப்பு கவுண்டர்களை அந்தந்த தொழில்பேட்டைகளில் திறந்திருக்க வேண்டும். தொழில்முனைவோர்களுக்கு பயிற்றுவித்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கமும் அதிகாரிகளும் வரிச் சீர்திருத்தம் குறித்தும், அதை அமல்படுத்துவது குறித்தும் அரங்கங்களில் பேசினார்களே தவிர களத்தில் இறங்கவில்லை. இப்போது தொழில்முனைவோர்களை உடனடியாக குற்றவாளியாக்கும் முனைப்புதான் இருந்து வருகிறது.
20 லட்சத்துக்குள் தொழில் செய்பவர்கள் ஜிஎஸ்டி பதிவு செய்ய தேவையில்லை என்கிறது அரசு. இவர்கள் சப்ளையர்களிடம் வரி செலுத்தி வாங்கி, அதை வரியில்லாமல் விற்பனை செய்ய வேண்டும். உள்ளீட்டு வரி வசதியை பயன்படுத்த வேண்டும் என்றால் ஜிஎஸ்டி எண் வேண்டும். தவிர ஜிஎஸ்டி எண் இல்லையென்றால் ஜாப் ஒர்க் பணிகளை பெரு நிறுவனங்கள் தர தயக்கம் காட்டுகின்றன. நிலைமை இப்படி இருக்க சிறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் பதிவு செய்ய தேவையில்லை என்று சொல்கின்றனர். ஜிஎஸ்டி பதிவு செய்யவில்லை என்றால் தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் உண்மை நிலை.
ஏனென்றால் சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் நேரடியாக நுகர்வோருக்கு செல்வது குறைவு. குறிப்பாக சொந்தமாக வீடு கட்டுபவர்கள் கிரில் கேட், ஜன்னல்களை தயாரித்து விற்கும் சிறு தொழில்முனைவோரிடம் வாங்குவார்கள். இப்படி வாங்குபவர் பொருட்களுக்கான விலையை கணக்கிடும் போது, ஜிஎஸ்டி வரி சேர்க்கப்பட்டிருந்தால் வரி விலக்கு இல்லாத நிறுவனங்களிடம் வாங்க தொடங்கி விடுவர். இதனால் ஜிஎஸ்டி பதிவு செய்யாதவர்களுக்கு சாதகம் என என நினைக்கலாம், ஆனால் இப்படி வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்கும் தொழில்முனைவோர்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான்.
பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உப தொழில்களை செய்பவர்கள். இப்போது சம்பந்தப்பட்ட இந்த இரண்டு தொழில் நிறுவனங்களும் தங்களது விற்பனைக்கு ஏற்ற வகையில் வரி விதிப்பு முறையினை கையாள வேண்டும்.
முதலில் கூறிய ஜன்னல் உற்பத்தி தொழில் செய்பவர் ஜன்னல் கிலோ ரூ.100 என்கிற விலையில் ஆண்டுக்கு 16,000 கிலோ விற்பனை செய்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.16 லட்சம் கிடைக்கும். இதற்கு தேவையான மூலப்பொருளை ரூ.10 லட்சத்துக்கு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி ரூ.1,80,000 செலுத்துவார். அதாவது அவரது மொத்த உற்பத்தி செலவு ரூ.11,80,000 ஆகும். அவரது மொத்த விற்பனை 16 லட்சத்தில் மொத்த செலவுகளை கழித்தால் அவருக்கு ரூ.4.20 லட்சம் லாபம். இதில் வாடகை, மின்சார செலவு, தொழிலாளர் கூலி உள்ளிட்டவையும் அடங்கும்.
இதுவே அவர் விற்பனை செய்யும் ஜன்னல் கிலோ ரூ.100க்கு ஜிஎஸ்டி விதித்தால் மக்கள் வாங்க மாட்டார்கள். இவர் 20 லட்ச ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் காம்போசிஷன் வரி 2 சதவீதம் செலுத்த வேண்டும். அதிலும் ஒரு முறை ஆண்டு பரிவர்த்தனை ரூ.20 லட்சத்தை தாண்டினால் அடுத்த ஆண்டு ரூ.20 லட்சத்துக்குள் இருந்தாலும் சலுகை கிடைக்காது. இதனால் இவர்கள் ரூ.20 லட்சத்துக்கு தங்களது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.
இரண்டாவது வகை தொழில் நிறுவனங்களாக உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான நெருக்கடியோ வேறு மாதிரி உள்ளது. இவர்கள் ஜிஎஸ்டி எண் பதிவு செய்யவில்லை என்றால் பெரு நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் வாங்க முடியாது.
இவர்களது வரி முறையைப் பார்க்கலாம்:
ஒரு பேனல் போர்டு தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒரு குறுந்தொழில் நிறுவனம் இரும்பு தகட்டினாலான பெட்டிகளை தயார் செய்து தருகிறது என்பதாக வைத்துக்கொள்வோம். அதன் விலை ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு 1,600 பெட்டிகளை ரூ.16 லட்சத்துக்கு தயார் செய்து தருகிறார். இவரது பரிவர்த்தனை ரூ.20 லட்சத்துக்குள் இருப்பதால் பதிவு செய்யாமல் இருக்கிறார் என்றால் இவர் ஒரு பெட்டியை விற்பனை விலை ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.1,000த்துக்கு அளிப்பார். ஆனால் வேறு ஒரு புதிய நிறுவனம் இந்த பெட்டிகளை ரூ.950 விலையில் 18 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து ரூ.1121க்கு கொடுத்தால் பெரு நிறுவனங்கள் புதிய நிறுவனத்துக்கு ஆர்டர்களை கொடுக்க தொடங்கிவிடுவார்கள். ஏனென்றால் ஜிஎஸ்டியை உள்ளீட்டு வரி வரவாக எடுத்தால் பொருளின் அடக்க விலை ரூ.950 ஆகத்தான் இருக்கும்.
இந்த இரண்டு கணக்கின்படியும் ஒருவர் ஜிஎஸ்டி எண் பதிவு செய்திருந்தால் மூலப்பொருள் விலை ரூ.10 லட்சமாகத்தான் இருக்கும். ஜிஎஸ்டி 18 சதவீதத்தை உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக் கொள்ளலாம். ஆண்டு விற்பனை ரூ.16 லட்சத்துக்கு 18 சதவீத வரி ரூ.2,88,000 ல் உள்ளீட்டு வரி ரூ.1.80 லட்சத்தை கழித்துவிட்டு மீதம் ரூ. 1.08 லட்சத்தை வரியாக செலுத்தினால் போதும். இப்போது இவருக்கான நிகர லாபம் 4.92 லட்சமாக இருக்கும்.( விற்பனை ரூ.16 லட்சம்- கொள்முதல் ரூ.10 லட்சம் - ஜிஎஸ்டி ரூ.1.08 லட்சம்)
ஆனால் இவர் ஜிஎஸ்டிஎண் பதிவு செய்யாத நபர் என்றால் நிறுவனங்கள் ரிவர்ஸ் டாக்ஸ் எடுக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இதை விரும்புவதில்லை. கூடுதல் பணிச்சுமை என்று கருதுகின்றன. தற்போது ஜிஎஸ்டி வந்த பிறகு தொழில் முனைவோர்கள் வேலையை விட்டு வெளியேறுவதாகவும் அல்லது சப்ளை செய்தவற்றுக்கு பிறரிடத்தில் பில்கள் வாங்கித் தருவதும் தொடங்கியுள்ளது. உடனடியாக இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வு உருவாக்கவில்லை என்றால் சிறு தொழில் நிறுவனங்கள் தொழில்களில் நீடிக்க முடியாது என்கின்றனர்.
ஒரு ஓட்டலில் சாப்பிடும் இனிப்புக்கு 5 சதவீத வரி, மிக்சருக்கு 12 சதவீத வரி, கீரை வடைக்கு 18 சதவீத வரி என்பது நுகர்வோருக்கு மட்டும் சுமையல்ல, தொழில்முனைவோரையும் அது பாதிக்கவே செய்யும்.
maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT