Published : 31 Aug 2017 09:48 AM
Last Updated : 31 Aug 2017 09:48 AM
ப
ங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது அதிக லாபம் பெறலாம் என்பதுபோல இருக்கும். ஆனால் தொடர்ந்து பங்குச் சந்தையில் இருப்பவர்களிடம் கேட்டால்தான், பங்குகளைத் தேர்வு செய்வது எவ்வளவு கடினம் என்பது புரியும். ஒரு சிலர் பங்குகளை தேர்வு செய்வதில் குறுக்கு வழியைக் கையாளலாம். அதாவது பெரிய முதலீட்டாளர்கள் வாங்கிய பங்குகளை தாமும் வாங்குவது. பெரிய, முக்கியமான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் என்ன பங்குகளை வாங்கு கிறார்கள் என்பதை பொறுத்து சிறு முதலீட்டாளர்களும் அதே பங்குகளில் முதலீடு செய்கிறார்கள்.
ஒரு நிறுவனத்தில் ஒரு சதவீதத்துக்கு மேல் பங்குகள் வைத்திருப்பவர்கள் குறித்து காலாண்டுக்கு ஒரு முறை நிறுவனங்கள் பங்குச்சந்தை அமைப்புக்கு தகவல் தெரிவிக்கும். அதேபோல மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் தங்களது போர்ட்போலியோவில் நடக்கும் மாற்றங்களை ஒவ்வொரு மாதமும் வெளி யிடும். அதேபோல மொத்தமாக எந்த பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பது குறித்த தகவலும் வெளியாகிறது.
தற்போது இது குறித்த தகவல்களை வெளியிடுவதற்கே, gurufocus.com, rakesh-jhunjhunwala.in, உள்ளிட்ட இணையதளங்கள் இருக்கின்றன. உங்களுடைய விருப்பமான முதலீட்டாளர் எந்த பங்கினை வாங்கினார், விற்றார் என்பது குறித்த தகவல்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும். சில சமூக வளைதளங்களில் உடனுக்குடன் தகவல்களும், ஊகங்களும் கிடைக்கக்கூடும். ஆனால் இவர்களை போன்ற முக்கிய முதலீட்டாளர்களை பின்பற்றுவதனால் மட்டுமே லாபம் பெற முடியும் என நினைக்க வேண்டாம். பெரிய முதலீட்டாளர்களின் முதலீடுகளை பின்பற்றி வாங்குவதில் எவ்வளவு அபாயங்கள் (ரிஸ்க்) உள்ளன என்பதை புரிந்து கொள்வது நல்லது.
ரிஸ்க் என்ன?
சரியான பங்குகளை தேர்வு செய்வதானால் மட்டுமே அதிக லாபம் சம்பாதிக்க முடியாது. ஒரு பங்கினை ஏன் வாங்குகிறோம், எதற்காக வாங்கிறோம், எதாவது ரிஸ்க் இருந்தால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசித்த பிறகுதான் பெரிய முதலீட்டாளார்கள் ஒரு பங்கில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் சிறிய முதலீட்டாளர்கள் பங்கின் பெயரை மட்டுமே தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்வது ஆபத்தானது. ஒரு வேளை நீங்கள் வாங்கி இருக்கும் பங்கு சரிய தொடங்கினால் சிறு முதலீட்டாளர் களுக்கு என்ன செய்வது என்பது தெரியாது. இதனால் மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்படும்.
சமீபத்தில் 331 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்துக்கு செபி கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தில் ஒரு சதவீத பங்குகளுக்கு மேல் முக்கிய முதலீட்டாளரான ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா வைத்திருக்கிறார். அதேபோல ஜே.குமார் இன்பிரா நிறுவனத்தில் பிரபல மியூச்சுவல் பண்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. தற்போதைய சூழலில், ராகேஷ் அல்லது மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இனியும் பங்கினை வைத்திருக்கலாமா, தொழில் ஸ்திரமாக இருக்கிறதா என்னும் ஆலோசனைக்கு பிறகு முடிவெடுப்பார்கள். ஆனால் பெரிய முதலீட்டாளர் வாங்கினார் என்பதற்காக அதை வாங்கி இருக்கும் சிறு முதலீட்டாளார்களின் நிலை பரிதாபத்துக்கு உரியது. இந்த சூழ்நிலையில் பதற்றப்படுவதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது.
மொத்த முதலீடும் சில பங்குகளில்
பங்குச்சந்தை வல்லுநர்களும் தவறு செய்வார்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎம் பங்கினை வாங்கியது தவறு என வாரன் பபெட் ஒப்புக்கொண்டிருக்கிறார். 2010-ம் ஆண்டு ஏ2இசட் இன்பிரா நிறுவனத்தின் ஐபிஓவில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்தார். முதலீடு செய்த தொகையில் 75 சதவீதத்தை இரண்டு ஆண்டுகளில் இழந்தார். மிகப்பெரிய முதலீட்டாளர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பதல்ல அர்த்தம். ஆனால் அவர்களிடம் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோ இருப்பதால் இந்த இழப்புகளை அவர்களால் சமாளிக்க முடியும். ஆனால் இவர்களைப் பார்த்து முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களிடம் பெரிய போர்ட்போலியோ இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் மொத்த தொகையை இழப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
தாமதமாக கிடைக்கும் தகவல்
நல்ல பங்குகளை வாங்குகிறோம் என்பதைவிட எந்த விலையில் வாங்குகிறோம் என்பது முக்கியம். ஏற்கெனவே முதலீட்டாளர்கள் ஒரு பங்கில் முதலீடு செய்கிறார் என்றால் அந்த தகவல் பொதுவெளியில் தாமதமாகத்தான் கிடைக்கும். அதற்குள் அந்த பங்கின் விலை உயர்ந்து விடும் வாய்ப்பு அதிகம். அதனால் சரியான பங்குகளை வாங்கி இருந்தாலும் கூட நல்ல லாபம் கிடைக்காது.
உதாரணத்துக்கு ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு ஜூலை 21-ம் தேதி 17 சதவீதம் உயர்ந்தது. இதற்கு காரணம் ஜூன் காலாண்டு முடிவில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா இந்த நிறு வனத்தில் 1.03 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறார் என்னும் செய்தி. ஆனால் மார்ச் காலாண்டு முடிவில் ராகேஷ் குறித்த செய்தி இல்லை. சிலர் இந்த காலாண்டில் இந்த பங்குகளை வாங்கி இருக்கலாம் என்று நினைக் கலாம்.
ஆனால் கடந்த சில காலாண்டுகளாக அந்த பங்கில் முதலீடு செய்து, ஒரு சதவீதம் என்னும் எல்லையை ஜூன் காலாண்டில் தாண்டி, அதனால் இந்த தகவல் வெளிவந்திருக்கலாம். அதனால் ராகேஷ் முதலீடு செய்திருக்கிறார் என்னும் தகவல் மட்டுமே சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய போதுமானது இல்லை. பெரிய முதலீட்டாளார்கள் அல்லது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ஒரு பங்கில் முதலீடு செய்கின்றன என்பது வெறும் தகவல் மட்டுமே. குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பு கொஞ்சம் ஆராய்ச்சி செய்யலாமே!
aarati.k@thehindu.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT