Published : 01 Aug 2017 09:51 AM
Last Updated : 01 Aug 2017 09:51 AM

தொழில் முன்னோடிகள்: அஸிம் பிரேம்ஜி (1945)

1966.

அஸிம் பிரேம்ஜிக்கு வயது இருபத்தி ஒன்று. அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்தார். அப்போது வந்தது, மும்பையிலிருந்து அம்மாவின் தொலைபேசி அழைப்பு.

அப்பா இறந்துவிட்டார். உடனே புறப்பட்டு வா.

புறப்பட்டார். அப்பாவின் அந்திம கிரியைகளை முடிக்கவேண்டும், அமெரிக்கா திரும்பவேண்டும், பட்டம் பெற வேண்டும். அங்கேயே வேலை தேடவேண்டும்.

பிரேம்ஜி குடும்பம் கோஜா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். பர்மாவிலிருந்து குஜராத்தில் குடியேறியவர்கள். அப்பா முகமது ஹஷீம் பிரேம்ஜி, மகன் பிறந்த சில மாதங்களில், 1945 – இல், வெஸ்ட்டேர்ன் இந்தியா வெஜிட்டபிள் புராடக்ட்ஸ் என்னும் வனஸ்பதி தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்.

1947. இந்தியா சுதந்திரம் பெற்றது. பாகிஸ்தானின் தேசப் பிதா முகமது அலி ஜின்னா. தன் நாட்டில் குடியேறுமாறும், நிதி அமைச்சர் பதவி தருவதாகவும் அழைப்பு விடுத்தார். ‘‘இந்தியாதான் என் வீடு” என்று முகமது ஹஷீம் மறுத்துவிட்டார். அடுத்த பத்தொன்பது வருடங்களில் நிறுவனத்தை மும்பைப் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட வெற்றிகரமான நிறுவனமாக்கினார்.

51 வயதில் முகமது ஹஷீமின் அகால மரணம். ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி விற்பனை செய்துகொண்டிருந்த வெஸ்ட்டேர்ன் இந்தியா வெஜிட்டபிள் புராடக்ட்ஸ் மாலுமி இல்லாத கப்பல். கம்பெனியை ஏற்று நடத்துமாறு அம்மா கேட்டுக்கொண்டார். அரைகுறை மனதோடு பிரேம்ஜி சம்மதித்தார். நிர்வாகக் குழுவும் சம்மதித்தது. சிஇஓ – வாக நியமனம்.

வருடாந்தரப் பங்குதாரர்கள் கூட்டம். கரன் வாடியா என்னும் பங்குதாரர் பேசினார், ‘‘இளைஞனே, இந்த பிசினஸை உன்னால் நடத்தவே முடியாது. உன் பங்குகளை அனுபவம் கொண்ட யாருக்காவது விற்றுவிட்டுப் போ.”

பிரேம்ஜியின் தன்முனைப்பு விழித்துக்கொண்டது, கரன் வாடியாக்களின் முன்னால் ஜெயித்துக் காட்டவேண்டும். முழுமூச்சில் இறங்கினார், தொழிற்சாலைக்குப் பல விசிட்கள். ஊழியர்களுடன் உரையாடல்கள். வனஸ்பதி தயாரிப்பு நுணுக்கங்கள் உள்ளங்கையில். தொழிற்சாலையின் சுகாதாரமற்ற ஈக்கள் மொய்க்கும் சூழ்நிலை, விற்பனைப் பொருட்களின் தரமற்ற பேக்கிங் ஆகியவற்றை உடனே மாற்றினார். ஒரு இளம்புயல் ஆட்சிக்கு வந்துவிட்டது என்று எல்லோருக்கும் தெரிந்தது.

தொழில் முனைவோராகக் கொடிகட்டிப் பறக்க, மேனேஜ்மென்ட் அறிவு தேவை என்பதை உணர்ந்தார். மும்பையின் எம்பிஏ கல்லூரி பேராசிரியரைச் சந்தித்தார். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள எந்தப் புத்தகங்கள் படிக்கலாம் என்று ஆலோசனை கேட்டார். அரைகுறை ஆட்கள், அனைத்தும் தெரிந்தவர்களாக ஆட்டம் போடும்போது, ஒரு சிஇஓ – வுக்கு இத்தனை அடக்கமா, அறிவுத்தேடலா என்று பேராசிரியர் ஆச்சரியப்பட்டார். புத்தகங்களின் பட்டியலைத் தந்தார்.

பிரேம்ஜிக்கு நாள் முழுக்க வேலை. புத்தகம் படிக்க நேரம் கிடைக்கவில்லை. ஒரு வழி கண்டார். தூக்கத்தைக் குறைத்தார். இரவு வெகு நேரம் விழிப்பார். காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பார். இன்றும் இந்த வாசிப்பு தொடர்கிறது.

அடுத்த நான்கு வருடங்கள். படித்த மேனேஜ்மெண்ட் கொள்கைகளின் அடிப்படையில் தன் கம்பெனியின் செயல்பாட்டை ஆராய்ந்தார். ஒரு சில திறமைசாலிகளிடம் அதிகாரம் குவிந்திருந்தது. இவர்கள் தங்கள் அறிவையும், அனுபவத்தையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. இந்தச் சிலர் விட்டுப்போனால், கம்பெனி ஆட்டம் கண்டுவிடும். அத்தோடு, வளர்ச்சி வாய்ப்பில்லாத புதியவர்கள் வேறு நிறுவனங்களுக்குப் போனார்கள். பிரேம்ஜி முக்கிய பணிகள் அத்தனையும் அடையாளம் கண்டார். இந்தப் பணிகளைச் செய்தவர்கள் அனைவரும், தங்களுக்கு அடுத்து அந்தப் பொறுப்பை யார் ஏற்கலாம் என்று அடையாளம் காட்டும் பணி (Succession Planning) கட்டாயமாக்கப்பட்டது.

கம்பெனியில் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழக்கம் இல்லை. பிரேம்ஜி இதை நடைமுறைப்படுத்தினார். இந்த அடிப்படையில் ஒவ்வொரு ஊழியருக்கும் வருடாந்தர இலக்குகள் நிர்ணயித்தார். எதிர்பார்ப்பை மிஞ்சியவர்களுக்கு ஊதிய, பதவி உயர்வுகள், இன்னும், இன்னும் சாதிக்கவேண்டும் என்னும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை வந்தது, வளர்ந்தது. பழமையில் ஊறிய ஒரு நிறுவனத்தில், இவை புரட்சிகர மாற்றங்கள். நாற்காலி சுகம் கண்டவர்கள் எதிர்த்தார்கள். விடாப்பிடியாகச் சீர்திருத்தங்களை நிறைவேற்றினார்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் போன்ற நிர்வாகக் கல்லூரிகளிலிருந்து திறமைசாலி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார். பல முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்தார். செயல்படும் அதிகாரத்தையும் தயங்காமல் பகிர்ந்துகொண்டார். இந்த அனுபவம் அவர் தொழில்துறையில் எடுத்துவைத்த ஒவ்வொரு முயற்சிக்கும் அஸ்திவாரமாயிற்று.

பிரேம்ஜியின் இன்னொரு குணம், சமரசமே செய்யாத நேர்மை. தொழிற்சாலைக்கான மின் இணைப்புத் தர, துறை அதிகாரி லஞ்சம் கேட்டார். பிரேம்ஜி கொடுக்க மறுத்தார். இணைப்பு கிடைக்கவில்லை. பிரேம்ஜி என்ன செய்தார் தெரியுமா? கம்பெனிச் செலவில் சொந்த மின்நிலையமே கட்டினார். செலவு? லஞ்சத் தொகையைவிட 150 மடங்கு! ஆமாம், கொள்கை முக்கியம். பணம் இரண்டாம் பட்சம்தான்.

வனஸ்பதி நிறுவனம், சலவை சோப், குளியல் சோப், அழகு சாதனங்கள் என தன் தயாரிப்பை விரிவாக்கியது. தொடர் வெற்றிப்பாதையில். அடுத்து என்ன செய்யலாம்? தன் பொறியியல் படிப்பைப் பயன்படுத்தினால்….மின்விளக்குகள், பளுதூக்கி இயந்திரங்களில் (Crane) பயன்படும் சிலிண்டர்கள் எனப் பல புது முயற்சிகள். இவை அத்தனையுமே சுமார் வெற்றியே கண்டன. பிரேம்ஜியோ வானத்தில் ஏறிச் சந்திரனைப் பிடிக்க ஆசைப்படுபவர். ஆகவே, இந்தச் சிறு வெற்றிகள் அவருக்குத் திருப்தி தரவில்லை. மனம் பிரம்மாண்ட வாய்ப்புகளைத் தேடி அலைந்தது. எதிர்பாராத விதமாகத் திறந்தது ஒரு ஆச்சரியக் கதவு.

1973. மொரார்ஜி தேசாய் அரசாங்கம் ஃபெரா (FERA – Foreign Exchange Regulation Act) என்னும் சட்டம் கொண்டுவந்தது. இதன்படி, இந்தியாவில் செயல்படும், அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களிலும், இந்தியர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கவேண்டும்; இல்லையா, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும். அப்படிப் போனவர்களில் ஒரு நிறுவனம், கம்ப்யூட்டர் உலகின் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஐபிஎம். இந்திய கணினி உலகில் வந்தது வெற்றிடம். பிரேம்ஜிக்கு எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்கள் துறைகளில் முன் அனுபவமோ, பிரத்தியேக அறிவோ கிடையாது. ஆனால், இருந்தது, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல், என்னால் முடியும் என்னும் தன்னம்பிக்கை. இதற்கு முன்னேற்பாடாக, 1977- ஆம் ஆண்டு, கம்பெனி பெயரை விப்ரோ லிமிடெட் (Western India Vegetable Products என்பதில் Vegetable என்னும் வார்த்தை நீக்கப்பட்டது. Western – இன் W, India – வின் I, Products – இன் Pro. கிடைத்தது Wipro) என்று மாற்றினார்.

புதிய கம்பெனி முன்னால் இருந்தன இரண்டு மாற்று வழிகள் – வெளிநாடுகளிலிருந்து கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்யலாம், அல்லது அவர்களின் தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கி, இங்கே தயாரிக்கலாம், நம் வித்தியாசச் சிந்தனையாளர் இடர்கள் நிறைந்த இரண்டாம் வழியைத் தேர்ந்தெடுத்தார். சென்ட்டினெல் என்னும் அமெரிக்க நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டார். அதுவரை, கம்ப்யூட்டர்களின் விற்பனைக்குப் பிறகு கஸ்டமர்கள் பெற்ற சேவை பெயரளவுக்கு மட்டுமே இருந்தது. பிரேம்ஜி இதை மாற்றினார். விப்ரோவில் ஒரு விற்பனைப் பிரதிநிதிக்கு மூன்று சேவைப் பிரதிநிதிகள் என்னும் விகிதத்தில் வடிவமைத்தார். விப்ரோ கணினிகள் மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்தன.

இந்தியாவில் கம்ப்யூட்டர்கள் பரவலாகப் பயன்படத் தொடங்கின. இதன் காரணமாக, சாஃப்ட்வேர் என்னும் மென்பொருளின் தேவை அதிகமாகும் என்பதைப் பிரேம்ஜி உணர்ந்தார். 1983. மென்பொருள் உருவாக்குவதில் குதித்தார். 1990. அமெரிக்காவின் பிரம்மாண்ட ஜிஇ நிறுவனம் தன் பணிகளை விப்ரோவுக்கு அவுட்சோர்ஸ் செய்தது. 1999 – இல் வந்த Y2K பிரச்சினை, அவுட்சோர்சிங் துறையின் வளர்ச்சி, விப்ரோவின் உலகத்தரம் ஆகியவற்றால் ராட்சச வளர்ச்சி - விப்ரோவின் இன்றைய வருமானம் 55,418 கோடி ரூபாய். பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 1,12,000 கோடி ரூபாய். இந்தியாவின் நான்காவது பெரும் பணக்காரர். இந்தியாவின் கல்வி முன்னேறுவதற்காகத் தொடங்கியிருக்கும் அறக்கட்டளைக்குச் சுமார் நாற்பதாயிரம் கோடி வழங்கியிருக்கிறார். இந்தியா முழுக்க மூன்றரை லட்சம் பள்ளிகளுக்கும் அதிகமாக இதனால் பயன் பெறுகிறார்கள்.

கரன் வாடியா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. எங்கிருந்தாலும், அவர் மனம் மன்னிப்புக் கேட்கும். அல்லது, ஒரு வேளை, நான் அன்று ஏற்படுத்தியது அவமானமல்ல, அந்த இளைஞரை முன்னேறவைத்த வெகுமானம் என்று பெருமைப்பட்டுக்கொள்வாரோ?

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x