Published : 22 Aug 2017 10:43 AM
Last Updated : 22 Aug 2017 10:43 AM
-1984. ஆண்களின் தனிக்காட்டு ராஜியமாக இருந்த அமெரிக்க தொலைக்காட்சி டாக் ஷோ நிகழ்ச்சிகளை நடத்திய முதல் பெண்.
-1986 முதல் 2011 வரை, 25 வருடங்கள் ஓப்ரா வின்ஃப்ரே என்னும் டாக் ஷோ நடத்தி, தொலைக்காட்சி வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்தவர்.
-சினிமா நடிகை. 1985–இல், பிரபல இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் தயாரித்து, இயக்கிய கலர் பர்ப்பிள் என்னும் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே, சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.
-தொலைக்காட்சி சேனல், ஓப்ரா பத்திரிகை, ஸ்டுடியோக்கள் எனப் பல ஊடகங்களில் கலக்கும் ஹார்ப்போ புரொடக்ஷன்ஸ் நிறுவன உரிமையாளர்.
-இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்கக் கறுப்பு இனத்தவர்களிலேயே மிகுந்த செல்வம் கொண்ட கோடீஸ்வரி.
-குடும்பப் பின்புலம் எதுவுமின்றி முன்னேறிய அமெரிக்கப் பெண்களில் மூன்றாம் இடம்.
-அமெரிக்காவின் தலைசிறந்த 50 கொடை வள்ளல்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
-அமெரிக்காவின் டைம் பத்திரிகை, 1999 – ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும், உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்கள் பட்டியலை வெளியிடுகிறது. இந்தப் பதினெட்டு வருடங்களில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 11 முறையும், ஹிலாரி கிளின்டன் 10 முறையும் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக ஓப்ரா. ஒன்பது முறை! ஆட்சி பலம், அரசியல் பின்புலம் எதுவுமில்லாத சாமானியன் பெற்றிருக்கும் பெருமை.
இந்தச் சிகரங்களைத் தொட, ஓப்ரா நீந்தி வந்த நெருப்பாறுகள் பல.
வெர்னிட்டா லீ வீட்டு வேலை பார்க்கும் இளம் பெண். அமெரிக்காவில் மிஸிஸிப்பி மாகாணத்தில் , கோஸியுஸ்க்கோ நகரத்தில் வசித்தார். வெர்னான் வின்ஃப்ரே என்னும் சுரங்கத் தொழிலாளியைச் சந்தித்தார். விட்டில் பூச்சி விளக்கில் விழுந்தது. கர்ப்பமானார். 1954. மகள் பிறந்தார். ஆர்ஃபா (Orpah) என்று பைபிளில் வரும் பெயர் வைத்தார்கள். அடர்த்தியான முடி கொண்டவர் என்று அர்த்தம். ஆனால், இந்தப் பெயர் யார் வாயிலும் நுழையவில்லை. ஓப்ரா (Oprah) என்று கூப்பிடத் தொடங்கினார்கள். இதுவே பெயராகிவிட்டது.
அம்மாவுக்கு வேலையும் பார்த்துக்கொண்டு ``வேண்டாத” மகளையும் வளர்க்க நேரமில்லை. தன் அம்மா, அப்பாவிடம் கொண்டுபோய்த் தள்ளினார். சிறிய பண்ணை வைத்திருந்தார்கள். குழந்தைக்கு டிரெஸ் வாங்கக்கூட தாத்தா பாட்டியிடம் பணம் கிடையாது. கடைகளுக்கு உருளைக் கிழங்குகள் வரும் சாக்குப்பைகளைப் பாட்டி பொறுக்கிக்கொண்டு வருவார். அதில் கவுன்கள் தைத்துத் தருவார். உடன் விளையாட பொம்மைகளோ, நண்பர்களோ கிடையாது. பண்ணையில் பயிரான மக்காச் சோளத்தின் காம்புகளில் பொம்மை செய்து கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பாள். கரப்பான் பூச்சிகள் தோழிகள். தனிமையில் குழந்தை தவிப்பதைப் பார்த்த பாட்டி மூன்று வயதிலேயே புத்தகங்களை நண்பர்களாக்கினார். ஐந்து வயதில் வாசிக்கும் பழக்கம் வந்தது. தொடர்கிறது.
ஓப்ராவுக்கு ஆறு வயது. அம்மா அதிசயமாக, தன்னோடு சில நாட்கள் தங்க அழைத்துக்கொண்டு போனார். அம்மாவும், இன்னொரு கறுப்புப் பெண்மணியும் அறையைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அந்தப் பெண் கறுப்பு இனம். ஆனால், கொஞ்சம் வெளிறிய நிறம். ஆகவே, உயர்வு மனப்பான்மை. ஓப்ரா அதே அறையில் தூங்கக்கூடாது என்று வெளியே தூங்கவைத்தார். இனவெறிக் கொடுமை ஓப்ராவுக்கு முதன் முதலாகப் புரிந்தது.
அம்மா ஏழை. ஆனாலும், மகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்னும் ஆசை. வசதியானவர்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பினார். அவர்கள் போல் செலவு பண்ண ஓப்ராவுக்கு ஆசை. வீட்டில் திருடத் தொடங்கினாள். ஒன்பது வயதில் ஒரு அதிர்ச்சி அனுபவம். ஒரு மாமா உட்படப் பலர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள். அவமான உணர்வால், பயத்தால், ஓப்ரா யாரிடமும் இதைச் சொல்லவில்லை.
பதினான்காம் வயதில் ஓப்ரா ஒரு ஆண் நண்பனோடு வீட்டை விட்டு ஓடிப்போனாள். வயிற்றில் கரு வளரத் தொடங்கியது. இளம் குற்றவாளியாகக் கைது செய்யப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பினார். குறைப் பிரசவம். ஆண் குழந்தை. அகால மரணம். அம்மாவுக்கு மகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. தனியாக வாழ்ந்த அப்பாவிடம் அனுப்பினார். அப்பாவின் கண்டிப்பில், ஓப்ராவுக்குப் படிப்பில் அக்கறை வந்தது. பேச்சுப் போட்டிகளில் பங்கெடுத்தார். அனைவரும் அதிசயிக்கும் திறமை. பரிசுகள் குவிந்தன. பள்ளித் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள். கல்லூரியில் படிக்க உதவித்தொகை கிடைத்தது.
டென்னஸி பல்கலைக் கழகத்தில் நடிப்புத் துறை இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். ஓப்ராவுக்கு எப்போதுமே கூட்டத்தில் ஒருத்தியாக இருக்கப் பிடிக்காது. தனித்து நிற்கவேண்டும், தன் மேல் புகழ் வெளிச்சம் விழவேண்டும். வாய்ப்புகளைத் துரத்திப் பிடிப்பார். கறுப்பு இனத்தவருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொண்டு மிஸ்.டென்னஸி மகுடம். கறுப்பு இனத்தவருக்கான வானொலி நிலையம் இருந்தது. அங்கே பகுதிநேர வேலையில் சேர்ந்தார். அடுத்து, டென்னஸி தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர்.
1983. படிப்பு முடிந்தது. சிக்காகோ தொலைக்காட்சி நிலையத்தில் இணைந்தார். ஓப்ராவின் திறமை கண்டு வியந்த நிர்வாகம் காலை ஏழு மணி நிகழ்ச்சியான டாக் ஷோ நடத்தும் பொறுப்பைத் தந்தது. வெட்டி விவாதங்கள், பிரபலங்கள் தங்கள் பிரதாபங்களைத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சுயபுராணங்கள் - ஒரு சிலரே பார்த்த சப்பை நிகழ்ச்சி. ஓப்ராவின் திறமையால் சில மாதங்களில் நம்பர் 1 இடத்துக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில், கலர் பர்ப்பிள் படத்தில் அறிமுகமாகி, சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
டாக் ஷோவின் பிரம்மாண்ட வெற்றியால், இந்த நிகழ்ச்சிக்கு ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என்று தொலைக்காட்சி நிர்வாகத்தினர் பெயர் சூட்டினார்கள். மாபெரும் அங்கீகாரம். 1986 – இல் ஓப்ரா ஹார்ப்போ ஸ்டுடியோஸ் என்கிற பெயரில் நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். (Oprah என்னும் வார்த்தையில் இருக்கும் எழுத்துகளைத் திருப்பிப் போட்டால் Harpo வரும்.)
1986 முதல் 2011 வரை ஒளிபரப்பான ஓப்ரா வின்ஃப்ரே ஷோ, அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மாபெரும் வெற்றி கண்ட 50 நிகழ்ச்சிகளில் ஒன்று. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்;
1. எலிசபெத் டைலர், மைக்கேல் ஜாக்சன், டாம் க்ரூஸ் போன்ற பிரபலங்கள் ஓப்ராவிடம் மனம் திறந்து பேசினார்கள்.
2. ஓப்ரா நிகழ்ச்சியின் இலக்கணத்தையே மாற்றி எழுதினார். அடித்தட்டு மக்களின், விளிம்புநிலை மனிதர்களின் பிரச்சினைகளை அலசும், வெளிச்சம் போட்டுக் காட்டும் அரங்கமாக மாற்றினார். எய்ட்ஸ் நோயாளி, இனவெறிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர், இரண்டு வயதிலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகி மனம் பேதலித்து, 92 ``அந்நியன்கள்” உருவங்களில் தன்னைக் கற்பனை செய்துகொண்டிருந்த இளம் பெண், பிற பெண்ணோடு தொடர்பு வைத்திருந்த கணவனைச் சுட்டுக் கொன்று சிறையிலிருந்த குடும்பத் தலைவி - இப்படிப் பலரை மக்கள் முன் கொண்டுவந்தார்.
சாதாரணமாக, ஊடகப் பேட்டியாளர்கள், இத்தகைய மனிதர்களைப் பரபரப்பு ஆசைக்கு பலிக்கடா ஆக்குவார்கள். ஓப்ரா காட்டியது மனிதநேயம், சமுதாய அக்கறை . அது மட்டுமல்ல, கணவனைக் கொன்ற ஒரு இளம் பெண் தன் குழந்தையின் வருங்காலம் பற்றிக் கவலைப்பட்டபோது, தானும் உதவி, தன் ரசிகர்களிடமும் நிதி திரட்டித் தந்தார். சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த மார்பக புற்றுநோய் பெண், படிக்க வசதியில்லாத சிறுமி எனப் பல்லாயிரம் பேருக்கு ஓப்ரா ஷோ உதவியிருக்கிறது.
தான் அனுபவித்த வறுமை, இனவெறிக் கொடுமை, பாலியல் வன்முறை ஆகியவை நாளைய தலைமுறையைப் பாதிக்கக்கூடாது என்னும் கனிவு நெஞ்சம் ஓப்ராவுக்கு. பெண்கள் கல்வி, முன்னேற்றம் ஆகியவற்றுக்காக 400 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கியிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் அவர் நடத்தும் Oprah Winfrey Leadership Academy for Girls, ஏழைப் பெண்களுக்கு தரமான இலவசக் கல்வி அளிப்பதோடு, தலைமைப் பண்புகளைப் பட்டை தீட்டும் பாசறையாகவும் இருக்கிறது.
63 வருடங்களில், இந்தக் கறுப்புப் பெண், ஏழை வேலைக்காரப் பெண்ணின் மகள், வெகுதூரம் வந்துவிட்டார். அவர் இன்னும் பல சிகரங்கள் தொட லட்சோப லட்சம் நெஞ்சங்கள் எப்போதும் வாழ்த்தும்.
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT