Last Updated : 09 Nov, 2014 11:03 AM

 

Published : 09 Nov 2014 11:03 AM
Last Updated : 09 Nov 2014 11:03 AM

பிரச்சினைக்குத் தீர்வானது பிஸினஸ்! - ஃபுட்பாக்ஸ் நிறுவனர் சதீஷ் சாமிவேலுமணி பேட்டி

பயணங்கள் எல்லோருக்கும் இனிமை யானதாக அமைந்து விடுவதில்லை. ஏதேனும் பிரச்சினை, இடைஞ்சல்கள் பொதுவாக எல்லோருக்குமே எந்த வகையிலாவது ஏற்படுகிறது. பிரச்சினைகள் இப்படித்தான் இருக்கும் என்று நம்மில் பெரும்பாலோர் அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிடுகிறோம். நாம் சந்தித்த பிரச்சினை இனி மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்று நினைத்து அதற்கு தீர்வு காண முனைவோர் வெகு சிலரே.

அவ்விதம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண யோசித்த சதீஷ் சாமிவேலுமணி இன்று ஃபுட்பாக்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். சென்னையில் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவருடனான சந்திப்பிலிருந்து...

கோவையில் பொறியியல் படிப்பு முடித்த பிறகு சிறிது காலம் எல்ஜி நிறுவனத்தில் வேலை. வீட்டை அடமானம் வைத்து நியூ ஜெர்ஸி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர்ந்தேன். கல்லூரி படிப்பை முடித்தால் உடனே இந்தியா திரும்பியாக வேண்டும். இதனால் ஒரு பேப்பர் முடிக்காமல் வேலை தேடினேன். கியூனோஸ் எனும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. உடனேயே மேல் படிப்பை முடித்து பணியில் தொடர்ந்தேன்.

சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தை 3எம் எனும் நிறுவனம் கையகப்படுத்தியது. மேற்படிப்பை தொடர 3 எம் வாய்ப்பு அளித்தது. இதனால் 2007-09-ம் ஆண்டில் எம்எஸ் நிர்வாகவியல் படிப்பை முடித்தேன். பிறகு 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன்.

ஃபுட்பாக்ஸ் எனும் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்தேன். அப்போது மதிய நேரத்தில் உணவு கிடைக்கவில்லை. சிறிய ஊரில் ரயில் நின்றபோது அங்கு கிடைத்த பிஸ்கெட்டை சாப்பிட்டு பசியாறினோம். தொழில் தொடங்குவது என்றால் உணவு சார்ந்த தொழிலில் இறங்கலாம் என முடிவு செய்தேன். எடுக்க எடுக்கக் குறையாத அட்சயப்பாத்திரத்தைப் பற்றி அறிந்ததால் அட்சயம் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

நீங்கள் உணவு தயாரிக்கவில்லை, மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்கிறீர்கள்? எந்த அளவுக்கு உணவு சுகாதாரமாக இருக்க முடியும்?

உணவு வகைகளைப் பொருத்தமட்டில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஹோட்டல் தயாரிப்புகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். அந்த ஹோட்டல்கள் உணவு தயாரிக்கும் இடத்தில் பாக்கிங் மெஷின் மற்றும் பாக்கிங் பொருள்கள் அனைத்தையும் அளித்து விடுகிறோம். உணவை பாக் செய்வதற்கான பயிற்சியும் அளித்து விடுகிறோம். நிர்ணயிக்கப்பட்ட அளவு, வடிவமைப்பில் அழகாக, காற்று புகாதவாறு பேக் செய்யப்படும்.

சைவ உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை ஒரே பெட்டியில் வைத்து விற்பனை செய்வது சைவ பிரியர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதா?

முதலில் நாங்கள் எந்த உணவையும் தயாரிக்கவில்லை. மற்ற நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவை காற்று புகாதவாறு அவற்றை பாக்கிங் செய்கி றோம். மேலும் ஃபுட்பாக்ஸ் பெட்டியில் இவை அடுக்கப்படுகின்றன. இயந்திரம்தான் இந்த பாக்கெட்டுகளை எடுத்து சூடுபடுத்தி அளிக்கிறது. இதில் சைவ, அசைவ கலப்புகளுக்கு வாய்ப்பே இல்லை.

ஹோட்டல்கள் உங்களுடன் கைகோர்க்க எப்படி முன்வந்தன?

ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் இந்த ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அமைப்பதற்கு அதிகம் செலவிட வேண்டும். அதற்குப் பதில் இந்த ஹோட்டல்களின் சமையலறையில் தயாராகும் பொருள்கள் அவர்கள் கண் எதிரே பேக் செய்யப்பட்டு அதே தரத்துடன் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்த பிறகே இதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

சில ஹோட்டல்கள் நகரின் ஒரு பகுதியில் மட்டுமே இருக்கும். நகரின் முக்கியமான இடங்களில் நாங்கள் அமைப்பதால் அந்த ஓட்டலின் உணவுகள் பலருக்கு சென்றடையும். மேலும் நாங்கள் அவர்களின் தயாரிப்பை விற்பனை மட்டுமே செய்வதால் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

பணம் செலுத்தி 90 வினாடிகளில் பிறகுதான் உணவு கிடைக்கிறது. அதிக நபர்கள் இருக்கும் போது உணவை பெற அதிக நேரம் ஆகுமே?

ஒன்றுக்கும் மேற்பட்ட கவுன்டர்கள் இருக்கிறது. மேலும் 90 வினாடிகள் என்பதை குறைக்கும் நடவடிக்கையை எடுத்துவருகிறோம். உதவுவதற்கு அனைத்து மையங்களிலும் எங்கள் நிறுவன பிரதிநிதி உள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று மையங்கள்தான் ஏற்படுத்தியுள்ளீர்கள். விரிவாக்க நடவடிக்கைகள் மெதுவாக உள்ளனவே?

வங்கிகளின் ஏடிஎம்-மை மக்கள் முழுமையாக பயன்படுத்த 10 ஆண்டு களாகிவிட்டது.

புதிய தொழில்நுட்பத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் முதலில் டிஎல்எப் ஐ.டி. பூங்காவில் வைத்தோம். அது இப்போது சிறப்பாக செயல்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எஸ்ஆர்எம் பல்கலையில் நல்ல வரவேற்பு உள்ளது. சோதனை அடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைத்துள்ளோம். ஓராண்டுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து எங்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை ஐஆர்டிசி நிர்வாகம் அளிக்கும். விமான நிலையங்களில் அமைப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். விரைவில் இவை தொடங்கப்படும். சென்னையைத் தொடர்ந்து பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்குச் செல்ல முடிவு செய்துள்ளோம்.

என்னென்ன உணவுகள் எந்தெந்த நேரங்களில் கிடைக்கும்?

காலையில் இட்லி, பொங்கல் வடை உள்ளிட்டவை கிடைக்கும். மதியம் உணவு வகைகள், இரவில் சப்பாத்தி, நான் உள்ளிட்டவை கிடைக்கும். மொறுமொறுப்பான பொருள்கள் கிடைக்காது. இவற்றை மீண்டும் சூடுபடுத்தும்போது சுவை குன்றிப் போகும். அதனால் கல் தோசை, வெந்தய தோசை உள்ளிட்ட ரகங்கள் மட்டுமே கிடைக்கும்.

உணவுடன் தண்ணீர் அளிக்கலாமே?

தண்ணீர் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

விரிவாக்க நடவடிக்கைகளுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கும்?

ஆரம்பத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஏஞ்செல் இன்வெஸ்டரின் பங்களிப்பு உள்ளது. இப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் முதலீடு செய்ய தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை இறுதி கட்ட நிலையை எட்டியுள்ளன..

இதில் வளர்ச்சி வாய்ப்புதான் என்ன?

சிலவற்றை சொந்தமாகவும், சில வற்றை பிரான்சைஸி முறையிலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பல்கலைக் கழகங்கள் என மக்கள் அதிகம் வரும் இடங்களில் இத்தகைய மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். சென்னையை அடுத்து பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளிலிருந்தும் அழைப்புகள் வந்துள்ளன. இதுவும் பரிசீலிக்கப்படுகிறது.
ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x