Published : 04 Jul 2017 10:29 AM
Last Updated : 04 Jul 2017 10:29 AM
உங்கள் இலக்குகளை எட்டவே முடியாத உயரத்தில் வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
- டெட் டேர்னர் (Ted Turner)
சன், ஜெயா, கலைஞர், தந்தி, ராஜ், புதிய தலைமுறை, நியூஸ் 18, கேப்டன் என 24 மணிநேர செய்தி சேனல்கள். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்தில் என்.டி.டி.வி, டைம்ஸ் நெள, இந்தியா டுடே, சி.என்.பி.சி. டிவி.18; மலையாளத்தில் சேர நன்னாட்டு மாந்தர் பறையுந்ந ஏஷியாநெட், மனோரமா நியூஸ்; சுந்தரத் தெலுங்கில் நியூஸ் இசைக்கும் ஈ டி.வி, ஜெமினி; கன்னடத்தில் மாத்தாடும் உதயா நியூஸ், ஜன நியூஸ். 24 மணி நேரம், வாரத்தில் ஏழு நாட்கள் சேவை. உலகமே உங்கள் உள்ளங்கைகளில். உலகின் முதல் 24 x 7 செய்திச் சேனல் சி.என்.என். இதன் பிரம்மா டெட் டேர்னர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராபர்ட் எட்வர்ட் டேர்னர்.
``வாழ்க்கை என்மீது எத்தனை துன்பங்களைத் தூக்கிப் போட்டபோதும், நான் கலங்கவில்லை. ஏனென்றால், நான் சிகரத்தை எட்டுவதில் குறியாக இருந்தேன்.”
டெட் சொல்வது கதையல்ல. நிஜம்.
குழந்தைப் பருவத்திலும், இளமையிலும், அவர் வீடு யுத்த பூமி. தினமும் ரணகளமாகும். அப்பா செவர்லே கார் நிறுவனத்தில் சேல்ஸ்மேன் வேலை பார்த்தார். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நாள் முழுக்கச் சண்டை.
டெட் நான்காம் வயதில் தங்கை மேரி பிறந்தாள். அப்பா வேலையில் இட மாற்றம். அந்தப் பிஞ்சு வயதில் மகனை போர்டிங் ஸ்கூலில் சேர்த்தார்கள். அப்பா அம்மா, தங்கை மூவரும் அடுத்த ஊர் போனார்கள். தனக்கு யாருமே இல்லை என்னும் சோகம். யாரோடும் விளையாட மாட்டான். தனிமை அவனைக் கொன்றது. இந்தப் பாதிப்பால், வாழ்நாள் முழுக்கப் பாதுகாப்பின்மை, தான் தனிமரம் என்னும் உணர்வு. அன்புக்காக ஏங்கினான்.
ஒரே வருடம். பெற்றோர் மறுபடி வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். உள்ளூர் ஸ்கூலில் சேர்த்தார்கள். அவன் வால் பையன். எல்லோரோடும் சண்டை போடுவான். பக்கத்து வீடுகளில் துணி தோய்த்து உலரப் போட்டிருப்பார்கள். அவற்றில் சேற்றை வாரி இறைப்பான். கிறிஸ்மஸ் அலங்காரங்களைப் பிய்த்துப்போடுவான்.
அப்பா அவனிடம் ஒழுங்கையும், கட்டுப் பாட்டையும் வளர்க்க நினைத்தார். அந்நியன் சினிமாவில் அம்பி, அந்நியனாக அவதாரம் எடுப்பாரே? அதாவது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஆடர் (Multiple Personality Disorder) என்னும் நோய். இந்த நோய் டெட் அப்பாவுக்கும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதுவும், குடித்துவிட்டால், வன்முறை எல்லை மீறும். அவரிடம் டெட் அடிவாங்காத நாளே கிடையாது. சாதாரண அடியல்ல, சவுக்கடி. டெட் உடல் முழுக்க ரத்தவிளாறியாகும். மகன் மாறவில்லை. ஆகவே, அணுகுமுறையை மாற்றினார். தரையில் படுப்பார். பேன்ட்டைக் கீழே இறக்கிவிடுவார். சவுக்கால் தன்னை விளாசச் சொல்லுவார். டெட் மறுப்பான். அப்போது சரமாரியாக உதை விழும். இதற்கு பயந்து அப்பாவை அடிக்கத் தொடங்கினான்.
அப்பா ``அம்பி”யாக இருக்கும்போது பாசத் தோடு நடந்துகொள்வார். அவனை வாரம் இரண்டு புத்தகங்கள் படிக்கச் சொல்லுவார். விசித்திரமான அப்பாவை அந்தக் குழந்தை மனம் எப்படியோ புரிந்துகொண்டது. அப்பா மேல் கோபமோ, வெறுப்போ அவனுக்கு வரவேயில்லை. பயம், அதே அளவு பாசம்.
ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் டெட் தங்கை மேரியோடு விளையாடுவான். அவனுக்கு அவள் உயிர். டெட் வயது 16. மேரிக்கு ஜூரம் வந்தது. மூளைக் காய்ச்சல் என்று டாக்டர்கள் சொன்னார்கள். நாள் முழுக்க வாந்தி, காட்டுக் கூச்சல். அதிக பட்சம் ஐந்து வருடங்களே வாழ்க்கை என்று டாக்டர்கள் கெடு வைத்தார்கள். அப்பா அம்மா உறவில் இன்னும் விரிசல். திருமணம் முறிந்தது. மேரி அம்மாவோடு போனாள். டெட் அப்பாவுடன். அவர் மறுமணம் செய்துகொண்டார். சித்திக்கும் அவனுக்குமிடையே எப்போதும் இடைவெளி. அம்மாவையும், தங்கையையும் நினைத்து ஏங்குவான்.
மேரியை நினைக்கும்போதெல்லாம் டெட் மனம் ரத்தக் கண்ணீர் விடும். கள்ளம் கபட மில்லாத மேரிக்கு இத்தனை துன்பங்கள் தரும் கடவுள் கருணையற்றவர் என்னும் முடிவுக்கு வந்தான். கடவுள் நம்பிக்கை காற்றில் பறந்தது. அவன் நாஸ்திகனானான்.
ஸ்கூலுக்கு திரும்பினான். அவனை அறியாமலே அவனுக்குள் மாற்றம். அடக்க ஒடுக்கம். படிப்பில் ஆர்வம். ஆசிரியர்களே பிரமித்துப் போனார்கள். தினமும் ஐம்பது பக்கங்கள் வாசித்தான். அறிவு விசாலமானது. பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டான். தூங்கிக்கொண்டிருந்த திறமை விழித்துக் கொண்டது. பரிசுகள் குவிந்தன. பழைய தறுதலை டெட் இப்போது இல்லை. அவன் புது மனிதன்! உயர்வான மதிப்பெண்களோடு பள்ளிப் படிப்பை முடித்தான்.
இந்தக் காலகட்டத்தில் அப்பா செவர்லே கம்பெனி வேலையை விட்டார். கட்டடங் களிலும், நெடுஞ்சாலைகளிலும் விளம்பர போர்டுகள் வைக்கும் சொந்த பிசினஸ் தொடங்கினார். கோடை விடுமுறைகளில் டெட் வீட்டுக்கு வரும்போது அவனைக் கசக்கிப் பிழிந்துவிடுவார். தினமும் தொழிலாளிகளோடு அனுப்புவார். போர்டு வைக்கும் இடங்களைச் சுத்தம் செய்வது, போர்டு எழுதுவது, பெயிண்ட் அடிப்பது என அத்தனை வேலைகளும் அவனுக்கு அத்துப்படியாயின.
பட்டப் படிப்புக்காக, புகழ்பெற்ற பிரெளவுன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். முதல் மாணவனாக வரவேண்டும் என்னும் ஆசையோடு படித்தார். ``நீ வாரா வாரம் தவறாமல் எனக்குக் கடிதம் எழுதவேண்டும். உனக்குப் பாக்கெட் மணி வாரம் ஐந்து டாலர் தருவேன்” என்று அப்பா சொன்னார். டெட் எழுதிக்கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள். படிப்புச் சுமை. கடிதங்கள் எழுதமுடியவில்லை. அப்பா பாக்கெட் மணியை நிறுத்தினார். டெட்டுக்கு வந்தது கோபம், அப்பாவைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும், தினசரி குடிக்கத் தொடங்கினார். ஒரு பெண்ணை ஹாஸ்டல் அறைக்கு அழைத்துவந்து இரவை அவளோடு செலவிட்டார். பல்கலைக் கழகத்தில் மதுவும், மாதுவும் மன்னிக்க முடியாத குற்றங்கள். அவரை டிஸ்மிஸ் செய்தார்கள். படிப்பு பாதியில் போச்சு.
வீடு திரும்பிய மகனை அப்பா அட்லாண்டா நகரில் இருந்த தன் விளம்பரக் கம்பெனியின் கிளைக்கு மேனேஜராக அனுப்பினார். டெட் விளம்பர போர்ட் பிசினஸ் நுணுக்கங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவராயிற்றே? நஷ்டத்தில் ஓடிய கிளையில் லாபம் காட்டினார்.
அடுத்த சில வருடங்கள். விளம்பர உலக வெற்றி என்னும் சந்தனக் குளத்தில் அவர் ஒரு காலைப் பதித்துக்கொண்டிருந்தபோது, இன்னொரு கால் சொந்த வாழ்க்கைச் சோகம் என்னும் சேற்றில் அழுந்திக்கொண்டிருந்தது. அவரை விதி பந்தாடிய நாட்கள். 1959. தங்கை மேரி மரணமடைந்தார். பாசம் வைத்த சகோதரி மறைவுக்கு அழுவதா அல்லது அவள் நோயின் கொடுமையிலிருந்து தப்பினாளே என்று ஆறுதல் அடைவதா? விடை கிடைக்காத கேள்வி. 1960. காதல் திருமணம். மூன்று வருடங்கள். இரண்டு குழந்தைகள். மனைவியோடு தகராறு, விவாகரத்து. மனைவி குழந்தைக ளோடு போனார். அவர் சில மாதங்களில் இன் னொருவரைத் திருமணம் செய்துகொண்டார்.
1963. இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் இன்னொரு பூகம்பம். அப்பாவின் குடியும், வன்முறையும் கட்டுக்கடங்காமல் போயின. ஒரு நாள். அவர் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டார். மாடிக்குப் போனார். கொஞ்ச நேரத்தில் ``டுமீல்” சப்தம். டெட் மாடிக்கு ஓடினார். வாயில் துப்பாக்கி. ரத்த வெள்ளத்தில் அப்பா. நாடித் துடிப்பு அடங்கிக்கொண்டிருந்தது. தான் பொறுப்பில்லாமல் நடப்பதுதான் அப்பா மரணத்துக்குக் காரணமோ என்று டெட் மனதில் குற்ற உணர்ச்சி. இதற்குப் பாவ மன்னிப்பு, அப்பா தொடங்கிய கம்பெனியை உச்சத்துக்குக் கொண்டுபோவதுதான்.
ஆக்ஷன் ஸ்டார்ட். டெட் பம்பரமாகச் சுழன்றார். டேர்னர் அட்வர்ட்டைசிங்கின் அத்தனை கிளைகளும் சுறுசுறுப்பாக லாபத்தில் இயங்கத் தொடங்கின. இதற்கு நடுவில் இன்னொரு காதல். 1964 இல் திருமணம். அடுத்த ஐந்து வருடங்களில் மூன்று குழந்தைகள். ஒரு நாள். முதல் மனைவி மூலம் பிறந்த வாரிசுகளான ஏழு வயதுப் பெண்ணும், ஐந்து வயது மகனும் அவரைப் பார்க்க வந்தார்கள். இருவர் உடல் முழுக்கக் காயங்கள். அம்மாவின் இரண்டாவது கணவர் குடிகாரர், தினமும் தங்களை அடிக்கிறார் என்றார்கள். திரும்பிப்போக மறுத்தார்கள். டெட் முதல் மனைவியோடு பேசினார். அவரும் குழந்தைகளை அனுப்பாதீர்கள் என்று கெஞ்சினார். வைத்துக்கொண்டார். இரண்டாம் மனைவியோடு தினமும் உரசல்கள். ஆனால், இந்த இடி, மழை, மின்னல்களை மீறி, திருமணம் 24 வருடங்கள் நீடித்தது.
சாதாரண மனிதன், சோதனைமேல் சோதனை. போதுமடா சாமி என்று நொறுங்கிப் போயிருப்பான். இவர் சாதாரண மனிதரில்லை. டெட் டேர்னர்! என்ன செய்தார் தெரியுமா?
தொடர்புக்கு: slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT