Published : 08 Jul 2017 10:58 AM
Last Updated : 08 Jul 2017 10:58 AM
தங்கத்துக்கான வரி விதிப்பு அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை குறையும் என்று உலக தங்க கவுன்சில் (WGC) கூறியுள்ளது. குறுகிய காலத்தில் தங்க விற்பனையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் தற்போது தங்க விற்பனை கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவில் சரிவடைந்துள்ளது. இது குறுகிய காலத்துக்கு நீடிக்கும் என்றாலும், தங்க நகை விற்பனை துறையில் மிகப் பெரிய சவால்களை உருவாக்கியுள்ளது. புதிய வரி விகிதத்துக்குள் வருவதால் சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பல்வேறு வகைகளில் பாதிப்புகள் இருக்கும். ஏற்கெனவே தங்கத்தின் மீது 1.2 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலை யில் ஜிஎஸ்டியில் 3 சதவீத வரி விகிதம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தங்கத்தின் மீதான வரி விதிப்பின் காரணமாக முறையாக இறக்குமதி செய்வது பாதிக்கப்படும். கடத்தல் தங்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகலாம் என்றும் கூறியுள்ளது.
ஏற்கெனவே 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய முடியாது என்கிற அரசின் கட்டுப்பாட்டால் கிராமப்புறத்தில் தங்கத்தின் விற்பனை சரிந்துள்ளது. கிராமப்புற மக்கள் தங்கம் வாங்குவதற்கு ரொக்கத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். தவிர மூன்றில் இரண்டு பங்கு தங்க தேவை கிராமப்புறங்களை சார்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தங்க தேவை ஆண்டுக்கு 846 டன்னாக இருந்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டில் இந்தியாவின் தங்க தேவை ஆண்டு சராசரியைவிட குறைந்து 650 டன்னாக இருக்கும் என்கிற கணிப்பையும் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT