Published : 07 Jul 2017 11:31 AM
Last Updated : 07 Jul 2017 11:31 AM
நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கான வெற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றியோ எதுவாயினும், நமது உழைப்பினையும் தாண்டி பல்வேறு உதவிகளும், ஆலோசனைகளும் நமக்கான இலக்கினை அடைவதில் பேருதவி புரிகின்றன என்றால் அது மிகையல்ல. சரியான இடத்திலிருந்து கிடைக்கும் அல்லது கற்பிக்கப்படும் மிகச்சரியான பாடங்கள், மிகப்பெரிய வெற்றிக்கான அடித்தளங்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் “லெசன்ஸ் ஃபிரம் த மவுஸ்” என்னும் இந்தப் புத்தகம்.
அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற தீம் பார்க்கான வால்ட் டிஸ்னி வேர்ல்டில் இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து இன்று முழுநேர பேச்சாளராகவும், பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் உள்ள “டென்னிஸ் ஸ்நோ” அவர்களின் அனுபவமும், பாடங்களுமே இந்த புத்தகம்.
பணியாளரும் வாடிக்கையாளரும்!
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அந்நிறுவனப் பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் அதன் வளர்ச்சிக்கு எந்தளவிற்கு முக்கியமானவர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தனித்தனியே இவர்களின் செயல்பாடுகளும் பங்களிப்பும் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு இவர்களின் கூட்டுச் செயல்பாடுகளும் பங்களிப்பும் நிறுவனத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறார் ஆசிரியர்.
பணியாளர்கள் தங்களது நிறுவன வாடிக்கையாளர்களிடம் தவிர்க்கவேண்டிய செயல்பாடுகளாக அதாவது செய்யக்கூடாதவைகளாக சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். வாடிக்கையாளரின் முன்பாக செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பது அல்லது மொபைல் போன் போன்றவற்றை தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்துவது, நிறுவனத்தைப் பற்றியோ அல்லது நிறுவனத்தின் மற்ற பணியாளர்களைப் பற்றியோ வாடிக்கையாளரிடம் புகார் தெரிவிப்பது, நிறுவன விதிகளுக்கு புறம்பாக நிறுவனத்தைப்பற்றிய முக்கிய செய்திகளை வாடிக்கையாளரிடம் பகிர்ந்துகொள்வது போன்ற செயல்பாடுகள் அறவே களையப்பட வேண்டியவைகளாக உள்ளதாக குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
சிறுபிள்ளைத்தனமான கேள்வி!
பணியாளர்களின் ஒரு சில தேவையற்ற செயல்பாடுகளுக்கு சிறிதும் குறைவில்லாமல் வாடிக்கையாளரிடமும் இத்தகைய செயல்பாடுகள் இருக்கவே செய்கின்றது. வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வழக்கத்திற்கு மாறான கேள்விகளே இச்செயல்களுக்கான உதாரணங்கள் என்கிறார் ஆசிரியர். அதாவது, வங்கியில் பண பரிவர்த்தனை செய்யும்போது என்னதான் அனைத்து விபரங்களும் அங்கு ஓட்டப்பட்டிருந்தாலும், ஒவ்வொன்றையும் அலுவலரிடம் கேட்பது. மின் இணைப்பினைச் சரியாக பொருத்தாமல், கம்ப்யூட்டர் வேலைசெய்யவில்லை என்று விற்பனையாளரை வீட்டிற்கு வரவழைப்பது. பொருட்களின் விலை நன்கு தெரியும்படி பாக்கெட்டில் பிரிண்ட் செய்திருந்தாலும், கடைக்காரரிடம் ஒருமுறை கேட்பது என இந்த பட்டியலுக்கு முடிவே கிடையாது.
என்னதான் இப்படியான கேள்விக்கணைகள் வந்தாலும், அதற்கான பதில் செயல்பாடு வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருக்கவேண்டியது அவசியம். இது முழுக்க முழுக்க நிறுவன பணியாளர்களின் கையில் உள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களால் உருவாக்கப்படும் ஒவ்வொரு சூழ்நிலையையும், அவர்களின் கண்ணோட்டத்திலேயே பார்க்கவேண்டிய பொறுப்பு நிறுவனப் பணியாளர்களுடயது. வாடிக்கையாளர்கள் எல்லா நேரங்களிலும் சரியாக நடந்துகொள்வதில்லை, ஆனால் எப்படி நடந்துகொண்டாலும் அவர்கள் எப்போதுமே நிறுவனத்தின் வாடிக்கையாளர்களே என்பதே பணியாளர்களுக்காக சொல்லப்பட்ட தத்துவமாக இருக்கின்றது.
முழுமையான ஈடுபாடு!
ஒரு செயலில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளாதவரை அச்செயலில் நம்மால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாது. நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான பணியையும் தாண்டி, நிறுவனத்தைப் பற்றியும் அதன் உற்பத்தி மற்றும் சேவை என அனைத்தையும் உங்களால் முடிந்த அளவிற்கு அறிந்து வைத்துக்கொள்வதே சிறந்தது என்கிறார் ஆசிரியர்.
எத்தனை வேலைகள் உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதில் எத்தனை வேளைகளில் உங்களால் முழுமையாக திறம்படச் செயல்பட முடியும் என்பதே முக்கியம். புதிய வழிகளைக் கண்டறிதல், தாமதமின்றி செயல்படுதல், பிரச்சினைகளை ஒதுக்கித்தள்ளாமல் ஏற்று செயல்படுதல், எளிமையான மற்றும் விரைவான தகவல் தொடர்பு மற்றும் சரியான ஆலோசனைகளைக் கேட்டுப்பெறுதல் ஆகியவற்றை தொடர்ந்து பழக்கப்படுத்திக்கொள்ளும்போது நமது பணியின் மீதான ஈடுபாடு நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது என்கிறார் ஆசிரியர்.
கேளிக்கையும் வேண்டும்!
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் இறுக்கமான சூழ்நிலையில் வேலைபார்ப்பவர்களே அதிகம். வீடோ அல்லது தொழிற்கூடமோ அல்லது அலுவலகமோ எதுவாயினும் நகைச்சுவை இல்லாத இடம் எவ்விதத்திலும் முழுமை பெறுவதில்லை. சாதாரணமாக செய்யப்படும் ஒரு வேலைக்கும், அதே வேலையை ஒரு சிறிய புன்முறுவலுடன் செய்வதற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. பகிரப்படும்போது துக்கம் குறைவதையும், மகிழ்ச்சி அதிகரிப்பதையும் நாம் அறிந்திருப்போம் அல்லவா. உண்மையில் மகிழ்ச்சியானது நமது செயல்பாட்டின் வேகத்தை அதிகரித்து நம்மை அதிகம் உழைக்க வைக்கின்றது. ஆக நமது பணியின்போது முடிந்த அளவிற்கு மகிழ்ச்சியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
எந்த ஒரு விஷயத்தையும் முக்கியமானதாக கருதலாமே தவிர அதிக தீவிரமாக எண்ணக்கூடாது. நம்மைச் சுற்றியும், நமது பணியிலும் ஆங்காங்கே உள்ள நகைச்சுவையான விஷயங்களை கண்டறிந்து அதனூடே பயணிக்க வேண்டும். எந்த பணியானாலும் மகிழ்ச்சியும் நிம்மதியுமே இறுதி பலனாக தேவைப்படுகிறது. டிஸ்னி வேர்ல்டின் நோக்கம் மகிழ்ச்சியை உருவாக்குவது, ஒரு வழக்கறிஞரின் நோக்கம் அவரது கட்சிக்காரரின் மன அமைதி, ஒரு வங்கியின் நோக்கம் அதன் வாடிக்கையாளரின் நிதி கனவுகளை அடைய உதவுவது என அவரவர் வேலையின் நோக்கங்களை நினைவில் கொள்ளுதலும் மகிழ்ச்சிக்கான காரணியே. இவையெல்லாம் தவிர பிரச்சினைகளை தீர்க்கும் மனப்பாங்கு, பணியின் மீதான ஆர்வம், தொடர்ச்சியான கற்றல் மற்றும் கடினமான அதேசமயம் விவேகமான உழைப்பு ஆகியவற்றையும் வெற்றிக்கான இரகசியங்களாகக் கொண்டு செயல்படுவோம்.
தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT