Last Updated : 19 Nov, 2014 01:07 PM

 

Published : 19 Nov 2014 01:07 PM
Last Updated : 19 Nov 2014 01:07 PM

கோவக்காய்க்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு: சாகுபடியில் தேனி விவசாயிகள்

தமிழக மக்கள் கோவக்காயை விரும்பி உண்ணாத நிலையில், கேரளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கோவக்காய் சாகுபடி பணியில் தேனி மாவட்ட விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதிகளான தென்பழனி, கே.கே.பட்டி, சுருளிபட்டி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கோவக்காய் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதனை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் சாகுபடி பரப்பரளவு குறைந்தது. அதிக வருவாய் ஈட்டியதால் திராட்சை சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டினர். கிராமப்புறங்களில் உள்ள ஆறு, குளம் போன்ற நீர்நிலைப்பகுதி ஓரங்களில் கோவை கொடிகளில் காய் விளைந்து தொங்கும் இதனை பொதுமக்களில் பலர் தொட்டுபார்க்க கூட விரும்புவதில்லை தமிழக மக்களின் உணவு பட்டியலில் இருந்து வெறுத்து ஒதுக்கப்பட்ட கோவக்காய்க்கு கேரள மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக பல நு£று ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த திராட்சை பழங்கள் அழுகி விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டத்தினை ஏற்படுத்தியதால் அவர்கள் கவலை அடைந்திருந்தனர். கேரளத்திற்கு கோவக்காய் தேவை அதிகரிப்பால் அதனை வாங்கி செல்ல அம்மாநில வியாபாரிகள் கம்பம் பள்ளதாக்கு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இதனால் திராட்சை சாகுபடி செய்து நஷ்டம் அடைந்த விவசாயிகள் சிலரும் கோவக் காயினை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். இது குறித்து ‘தி இந்து’ செய்தியாளிடம் கோவக்காய் சாகுபடி செய்த விவசாயி கருப்பையா கூறுகையில், கேரள உணவில் கோவக்காய் அதிகமாக சேர்க்கப்படுகிறது. நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு விலையும் ஒரு கிலோ ரூ.30 வரை போகிறது. இதன் காரணமாக கூடுதலான இடங்களில் கோவக்காய் சாகுபடி செய்யும் பணியில் தேனி மாவட்ட விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்றார்.

கோவக்காய் சாகுபடியில் சாதனைபடைத்த சுருளிபட்டி விவசாயி கணேசன் கூறுகையில், ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.55 ஆயிரம் முதல் 60ஆயிரம் வரை செலவு ஆகிறது. கொடி வளர்ந்த 90 நாட்கள் பின்னர் 10நாட்களுக்கு ஒருமுறை ஒன்றரை ஆண்டுகளுக்கு காய் பறிக்கலாம். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தினால் 30முதல் 35டன் வரை காய்கள் பறிக்க முடியும். செலவு போக ரூ.5 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என்றார்.

இவரை 9789618969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x