Published : 05 May 2017 10:20 AM
Last Updated : 05 May 2017 10:20 AM
தலைமைப்பண்பு என்றவுடன், ஏதோ பெரிய பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்பிலும், உயர் பதவிகளிலும் இருப்பவர்களுக்கான திறன்கள் என்று நினைப்பதே நம் இயல்பு அல்லவா!. உண்மையில் அப்படியல்ல, நமது தனிப்பட்ட பல்வேறு செயல்களிலும் கூட தலைமைப்பண்பின் தாக்கம் பெருமளவில் உண்டு. வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, நட்பு மற்றும் உறவுமுறை என அனைத்திலும் இதன் பிரதிபலிப்பு உண்டு என்பதே உண்மை. ஆக, தலைமைப்பண்பு என்பது வேலை, தொழில், நிறுவனம், பதவி இவற்றையெல்லாம் தாண்டி தனி மனித உயர்வுக்கும் அவசியமான ஒன்றே என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம்.
ஒவ்வொரு தனி மனிதனுக்குமான தலைமைப் பண்பிற்கான திறன்களை மேம்படுத்துவதற்கான வழிமுறை களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள் ளது “லீடர்ஷிப் 101” என்னும் இந்தப் புத்தகம். நீங்கள் யார், எப்படிப்பட்ட வர் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, யாராக இருந்தாலும், எப்படிப் பட்டவராக இருந்தாலும் சிறப்பான முறையில் தலைமையேற்கவும், செயல்படவும் முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் தொடங்குகிறார் இதன் ஆசிரியர் “ஜான் சி மாக்ஸ்வெல்”.
அடிப்படை விதி!
ஒரே நாளில் கிடைத்துவிடுவதல்ல தலைமைத்துவப் பண்புகள், ஒவ்வொரு நாளும் மெருகேறிக்கொண்டே வரு பவை என்பதே தலைமைப் பண்பிற்கான அடிப்படை விதி. நீண்ட நாட்களுக்கு நம்மால் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு நாளுக்குமான செயல்பாடுகளே தரமானதொரு தலைமைப் பண்பினை உருவாக்குகிறது. நமது வெற்றியின் ரகசியம், நமது தினசரி நிகழ்வுகளிலேயே உள்ளதாக சொல்கிறார் ஆசிரியர்.
மரியாதை, அனுபவம், மனோ பாவம், அறிவாற்றல், ஒழுக்கம், பார்வை, கால நேரம் என பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது தலைமைப் பண்பு. இவை அனைத்தையும் உள்ளடக் கிய நமது அன்றாட செயல்பாடுகளே, காலப்போக்கில் நம்மை நல்ல தலைவ னாக மாற்றக்கூடிய காரணிகள் என் பதை அடிப்படை விதியாக வைத்துச் செயல்பட வேண்டியது அவசியம்.
முயற்சியே மூலதனம்!
புகழ்பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபரான தியோடோர் ரூஸ்வெல்ட் பற்றி அறிந்திருப்போம். அவர் குழந்தை யாக இருந்தபோது மிகவும் மெலிந்த உடலமைப்புடனும் நோயுடனுமே இருப்பாராம். ஆஸ்துமா மற்றும் பார்வை குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைப்பதே கடினம் என்று அவரது பெற்றோர்கள் நினைத்திருந்தனராம். அவரது பனி ரெண்டாவது வயதில், அவரது தந்தை அவரிடம், “உனக்கு மனவலிமை இருக்குமளவிற்கு உடல்வலிமை கிடையாது என்றும் உடலின் உதவியின்றி மனதால் வெகுதூரம் பயணிக்க முடி யாது” என்றும் கூறியுள்ளார். மேலும், அவரது உடல்நலனில் தகுந்த கவனம் செலுத்தும்படியும் வலியுறுத்தியுள்ளார்.
அதன்பிறகே தன் உடல் வலிமைக் கான பயிற்சிகளில் தினமும் ஈடுபடத் தொடங்கியுள்ளார் ரூஸ்வெல்ட். எடை, உயரம், பனிச்சறுக்கு, வேட்டை, படகோட்டுதல், குதிரையேற்றம், குத்துச்சண்டை என தனது பட்டப்படிப்பு முடியும்வரை அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளார். ஒரே நாளில் ரூஸ்வெல்ட் மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்துவிடவில்லை. அதிபர் பதவி வரையிலான அவரது பயணம், பல சீரான வளர்ச்சிகளை உள்ளடக் கியது. நியூயார்க் நகர போலீஸ் கமிஷனர் முதல் நாட்டின் அதிபர் வரை பல்வேறு நிலைகளில் பணியாற்றி யுள்ளார் ரூஸ்வெல்ட். கற்றலையும், வளர்ச்சியையும் தொடர்ந்து தன்னுடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.
ரூஸ்வெல்டின் தலைமையில் அமெ ரிக்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றங் களைக் கண்டு, உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்கத் தொடங்கியது எனலாம். அமெரிக்க கடற்படை, பனாமா கால்வாய், ஜப்பான் ரஷ்ய அமைதி என பலதரப்பட்ட பணிகளில் தனது தளராத முயற்சியினால் வெற்றி கண்டவர் ரூஸ்வெல்ட். 1909-ம் ஆண்டு தனது பதவிகாலம் முடிந்த உடனேயே, ஒரு அறிவியல் ஆராய்ச்சிக்காக ஆப் ரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அந்த அளவிற்கு தொடர்ந்து செயல் பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அவ்வளவு ஏன், அவர் இறந்தபிறகு அவரது படுக்கையில் தலையணைக்கு கீழே ஒரு புத்தகம் இருந்ததாக சொல்வதுண்டு. ரூஸ்வெல்டின் கற்கும் ஆர்வத்திற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்.
பார்வை வேண்டும்!
ஒரு தலைவனுக்கு அவனது பார்வையே அனைத்துமாக இருப்பதாக கூறியுள்ளார் ஆசிரியர். மேலும், இது முற்றிலும் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதையும் வலியுறுத்தியுள்ளார். ஆம், குழுவை வழிநடத்துவது தலைவன் என்றால், அந்த தலைவனை வழிநடத்துவது அவனது பார்வையே. இலக்கு மற்றும் செயல்பாடுகள் மீதான சரியான பார்வை இல்லாத தலைவன், தனது பணியில் சிறிதளவும் பயணிக்காதவனாகவே இருப்பான். அதாவது, ஒரு வட்டவடிவப் பாதை யில் மீண்டும் மீண்டும் சுற்றிவருவதைப் போல. அதேசமயம் இந்த பார்வை யானது விலைக்கு வாங்கக்கூடியதோ அல்லது மற்றவர்களிடமிருந்து இரவல் பெறக்கூடியதோ அல்ல. இது முழுக்க முழுக்க நமக்குள்ளிருந்தே கிடைக்கப்பெறுவது என்பதையும் கவனத்தில் வைத்தல் நலம்.
சரி, இலக்கின் மீதான பார்வை இருந்தால் மட்டுமே போதுமா என்றால் கண்டிப்பாக இல்லை, ஆம், ஒரு தலைவனின் பார்வையின் மீதான தொடர்ச்சியான அளவீடு என்பது, அவ னின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் அவசியமான ஒன்று என்கிறார் ஆசிரியர். செயல்பாட்டின் ஆரம்பகால பார்வையில் தேவையான மாற்றங்கள் அவ்வப்போது ஏற்படுகிறதா இல் லையா என்பதை இவ்வித அளவீட்டின் மூலமே அறிந்துக்கொள்ள முடியும். இதற்காக சில முக்கிய நபர்களைப் பயன்படுத்தலாம். குடும்ப உறுப்பினர் கள், நண்பர்கள், முக்கிய பணியாளர்கள் ஆகியோரிடம் நமது பார்வை மீதான அவர்களது கருத்துகளை அவ்வப் போது கேட்டுப்பெறலாம். இது இலக் கினை நோக்கிய சீரான பயணத்திற்கு அவசியமான ஒன்று.
செல்வாக்கு முக்கியம்!
செல்வாக்கு இல்லாத தலைவனால் ஒருபோதும் மற்றவர்களை வழிநடத்திச் செல்லமுடியாது. செல்வாக்கு மற்றும் அதன் மீதான அளவீடு ஆகியன தலைமைப்பண்பில் முக்கியமான காரணிகளாகப் பார்க்கப்படுகின்றது. 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களினால் மக்கள் பெருந்துயரத்தில் இருந்த சமயம். ஆம், ஒரு வாரத்திற்கும் குறைவான இடைவெளியில் ஏற்பட்ட இளவரசி டயானா மற்றும் அன்னை தெரசா ஆகியோரின் மரணம். இருவருக்கும் இடையில் பல வேறுபாடுகள் உண்டு. உயரமான, இளமையான, அழகான, இங்கிலாந்தின் உயரிய குடும்பத்தை சேர்ந்தவர் டயானா. அதேசமயம் சிறிய உருவத்துடன், வயதான, அல்பேனியாவில் பிறந்து இந்தியாவின் கொல்கத்தாவில் சேவையாற்றிய, நோபல்பரிசு பெற்ற அன்னை தெரசா.
ஆனால், இருவருக்கும் இடையே யான ஒரு ஒற்றுமை, மக்களிடம் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு. ஆம், நம்பமுடியாத வகையில் அவர்களின் தாக்கம் ஒரே மாதிரியானதாக இருந்தது வியக்கத்தக்க ஒன்றே. 1996 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த டெய்லி மெயில் என்னும் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பே இதற்கு சான்று. உலகின் மிகவும் கவனிக்கத்தக்க மனிதர்களின் பட்டியலில் இளவரசி டயானாவும் அன்னை தெரசாவும் முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கான அதீத செல்வாக்கு மக்களிடம் இல்லாமல் இது சாத்தியமற்றது. அன்னை தெரசாவைப் போலவே இளவரசி டயானாவையும் மக்கள் விரும்புவதற்கு காரணம், டயானாவால் நிருபிக்கப்பட்ட அவரின் செல்வாக்கின் சக்தியே.
நமது பணியை உணர்ந்து, பொறுப்பு களை ஏற்று, வளர்ச்சிக்கான வாய்ப்பு களை பயன்படுத்தி, மற்றவர்களின் கருத்தறிந்து, பரந்த பார்வை மற்றும் செல்வாக்குடன் செயல்பட்டால் நாமும் நல்ல தலைவனே.
தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT