Published : 29 Jul 2016 10:42 AM
Last Updated : 29 Jul 2016 10:42 AM
இந்தியாவின் முதல் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையத்தை கேரள மாநிலம் விழிஞ்சத்தில் அதானி குழுமம் அமைத்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் தற்போது சீனாவுக்கு போட்டியாக அந்தப் பகுதியில் 26,818 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் போக்குவரத்து மையத்தை மத்திய அரசு விரைவில் அமைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
கேரளாவில் உள்ள விழிஞ்சத்தில் புதிய துறைமுகத்தை அமைப்பதற்கு மத்திய அரசு கௌதம் அதானிக்கு நிதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. விழிஞ்சம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் அடுத்ததாக மத்திய அரசும் தமிழ்நாட்டில் இணையத்தில் பன்னாட்டு சரக்கு மாற்று பெட்டக மையத்தை அமைக்க ஆரம்பித்துவிடும் என்று கப்பல் துறை அதிகரி ஒருவர் தெரிவித்தார். இணையம் துறைமுகத்தால் மட்டும் 1340 கோடி ரூபாய் இந்திய நிறுவனங்களுக்கு சேமிப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா 7,500 கிலோ மீட்டர் அளவுக்கு கடற்கரை கொண்டுள்ளது. உலகின் முக்கிய கடல்வழி பாதைகளையும் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, முதலீடு செய்து துறைமுகங்களை வளர்ச்சிபடுத்துவதன் மூலம் சரக்குகள் கையாளப்படுவதை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்.
இந்திய நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு போக்குவரத்து செலவு ஆகிறது இதை தடுப்பதற்காக தெற்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்துக்கு போட்டியாகவும் புதிய துறைமுகங்களை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்த்து வருகிறது.
விழிஞ்சம் துறைமுகம் 100 கோடி டாலர் முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டிற்குள் இது செயல்பாட்டுக்கு வரும். இந்த துறைமுகம் கல்ப்-மலேக்கா கடல்வழிப்பாதையில் அமைந்துள்ளது. அதனால் சர்வதேச அளவில் சரக்குகளை கையாளுவதில் மூன்றாவது பெரிய துறைமுகமாக இருக்கும்.
சீனாவின் அச்சுறுத்தல்
சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் பொருட்டு இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் துறைமுகங்கள் அமைப்பதற்கு முதலீடு செய்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்தியா கவலை அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது பாகிஸ்தானுடைய ஜிவாதார் கடல் துறைமுகத்தை சீனா கட்டமைத்து வருகிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 4600 கோடி டாலர் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சீனா விழிஞ்சம் துறைமுகத்தை கட்டமைத்தும் வரும் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு விருப்பம் தெரிவித்தது. ஆனால் அந்த முன்மொழிதலை மத்திய அரசு தேச பாதுகாப்புக்காக ரத்து செய்தது.
இந்திய துறைமுகத்தில் முதலீடு செய்யும் சீனா நிறுவனங்களை தடை செய்யவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடையை அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவும் தனது வர்த்தக மற்றும் உத்திகளை விரிவாக்கும் பொருட்டு ஈரான் நாட்டிலுள்ள சபாஹர் துறைமுகத்தை உருவாக்குதற்காக 50 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளோடு வர்த்தக தொடர்பு கொள்ள முடியும்.
சர்வதேச துறைமுகங்களோடு போட்டி போடும் வகையில் இந்திய துறைமுகங்கள் இருக்க வேண்டும். காலம், திறன், தொடர்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்திய துறைமுகங்கள் சிறந்ததாக இருக்கவேண்டும் என்று இந்திய கப்பல்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT