Published : 21 Feb 2017 10:11 AM
Last Updated : 21 Feb 2017 10:11 AM

தொழில் முன்னோடிகள்: வில்லியம் லெவிட் (1907- 1994)

எந்த முட்டாளாலும் வீடு கட்ட முடியும்: குறைந்த விலையில் எத்தனை வீடுகள் கட்டி விற்கிறோம் என்பதில்தான் திறமை இருக்கிறது. - வில்லியம் லெவிட்

சென்ற வாரம் பெங்களூரு போயிருந் தேன். தேவனஹல்லி ரோடு என்னும் புறநகர்ப் பகுதி. வரிசையாக, ‘அம்மாடி’ என்று அண்ணாந்து பார்த்து அசர வைக்கும் 17 மாடிக் கட்ட டங்கள். அவற்றில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதிகள். மொத்தம் 2,790 குடியிருப்புகள். கனவு உலகம்போல் இருக்கிறது.

சென்னையிலும் நீச்சல் குளங்கள், டென்னிஸ் கோர்ட்கள், பூங்கா, கடைகள் என அத்தனை வசதி களோடும், குரோம்பேட்டை, பல்லா வரம், பள்ளிக்கரணை, வண்டலூர், ராஜகீழ்ப்பாக்கம் போன்ற சென்னை யின் எல்லைப் பகுதிகளில் குடியி ருப்புகள் வருகின்றன. அடையாறிலும், அண்ணாநகரிலும் வாங்கமுடியாத நடுத்தர வர்க்கத்தினருக்குக் கட்டுப் படியாகும் பட்ஜெட்டில் சகல வசதி களோடும் இந்த வீடுகள் வருகின்றன. குறைந்த விலையில் நிறைந்த வசதி களோடு வீடுகள் தரும் இத்தகைய திட்டத்தை முதன் முதலில் சிந்தித்தவர், செயலாக்கியவர் வில்லியம் லெவிட்.

1998 ஆம் ஆண்டு. இருபதாம் நூற்றாண்டின் 100 முக்கிய மனிதர் களை அமெரிக்காவின் புகழ் பெற்ற `டைம்’ பத்திரிகை பட்டியலிட்டது. காந்திஜி, சர்ச்சில், மார்ட்டின் லூதர் கிங், ஹிட்லர், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, ஹெலன் கெல்லர், சே குவேரா, சார்லி சாப்ளின், ஐன்ஸ் டின், விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் ஆகியோரோடு இடம் பிடித்திருப்பவர் வில்லியம் லெவிட். அப்படியென்ன சாதித்திருக்கிறார் இவர்?

ஆப்ரஹாம் லெவிட், ஆஸ்திரி யாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த யூத பூசாரியின் மகன். ஏழைக் குடும்பம். விடாமுயற்சியோடு சட்டம் படித்தார். வழக்கறிஞராகத் தொழில் தொடங்கினார். அவரிடம் ஆலோ சனைக்கு வந்தவர்களில் பெரும் பாலானோர் வீடுகள், கட்டடங்கள் கட்டுபவர்கள். இதனால், அவருக்குக் கட்டுமானத் தொழிலின் நெளிவு, சுளிவுகள், நுணுக்கங்கள் புரிந்தன.

இப்போது, ஆப்ரஹாம் எதிர் பாராமலே, திறந்தது ஒரு வாய்ப்புக் கதவு. அவருடைய கட்சிக்காரர் ஒருவரின் வீடு கட்டும் கம்பெனி திவாலானது. ஆப்ரகாமின் ஃபீசாக நீதிமன்றம் 100 வீட்டுமனைகளை வழங் கியது. அங்கே வீடுகள் கட்டும் காண்ட்ராக்ட்டை ஒரு நிறுவனத்திடம் தந்தார். வக்கீல் தொழிலையும், இந்த மேற்பார்வையையும் சமாளிக்க அவருக்கு நேரம் இருக்கவில்லை. காண்ட்ராக்ட் மேற்பார்வைப் பொறுப்பை மகன் வில்லியத்திடம் ஒப்படைத்தார்.

வில்லியத்துக்குச் சிறுவயது முதலே, பணக்காரக் கனவுகள். அப்பா வின் கோட்டை மாட்டிக்கொண்டு திரிவான். `நியூயார்க் போவேன், நிறையப் பணம் சம்பாதிப்பேன். ஜாலி யாக இருப்பேன்’ என்று டயலாக் விடுவான். படிப்பில் சுமார்தான். கல்லூரியில் சேர்ந்தான். முதல் வருடத்திலேயே படிப்புக்கு டாட்டா சொன்னான். 1929. வில்லியம் வயது 22. அப்பா தொடங்கிய லெவிட் சன்ஸ் கம்பெனியில் சேர்ந்தான்.

விற்பனையும், விளம்பரமும் வில்லியம் பொறுப்பில் இருந்தன. மார்க்கெட்டிங்கில் தனக்கு இயற் கையான ஈடுபாடும், அசாத்தியத் திறமையும் இருப்பதை வில்லியம் உணர்ந்தார். சொகுசு பங்களாக்கள் கட்டுவதில் அதிக லாபம் வரு வதைக் கண்டுபிடித்தார். தரமான பங்களாக்களை நியாயமான விலையில் விற்றார். நடிகர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலதுறைப் பிரபலங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். அடுத்த 12 வருடங்களில் லெவிட் கம்பெனி 2,000 பங்களாக்கள் விற்பனை செய்தது. அமெரிக்கா எங்கும் லெவிட் கம்பெனியின் புகழ் பரவியது. அவர்கள் குடும்பம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர்ந்தது.

1929 முதல் 1939 வரை அமெரிக் காவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. மக்கள் பெரிய வீடுகள் வாங்கு வதைத் தவிர்த்தார்கள். இந்தத் தேவை யைப் பூர்த்தி செய்ய, 1941 இல் அமெரிக்க அரசாங்கம் மலிவு விலையில் 2,350 வீடுகள் கட்ட முடிவு செய்தது. இது பெரிய வாய்ப்பு. ஆகவே, இந்த பிசினஸில் நுழைய வில்லியம் முடிவெடுத்தார். அரசாங்கம் இந்தக் காண்ட்ராக்ட்களை ஏலத்துக்கு விடுவார்கள். யார் குறைவான பணம் கேட்கிறார்களோ, அவர்களுக்கு பிசினஸ் தருவார்கள். காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் தரத்தைக் குறைப்பார்கள். ஆனால், வில்லியமோ, தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். குறைந்த விலையில் நிறைந்த தரம் என்பது முடியாத காரியம் என்று எல்லோரும் நினைத்தார்கள். வில்லியம் `முடியாததை’ச் சாதித்தார். அவர் நிர்வாகத் திறமையால், கட்டுமானம் வேக, வேகமாக நடந்தது, செலவு கணிசமாகக் குறைந்தது. லெவிட் கம்பெனி கல்லா நிறைந்தது.

1939. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. லெவிட் பிசினஸும் சரிவைச் சந்தித்தது. 1945 இல் யுத்தம் முடிந்தவுடன், வீரர்கள் நாடு திரும்பினார்கள். வீடுகள் வாங்க விரும்பினார்கள். நகரங்களில் வீடுகள் யானை விலை, குதிரை விலை. இது ஒரு மாபெரும் வாய்ப்பு என்பதை வில்லியம் உணர்ந்தார். பிரம்மாண்டத் திட்டத்தோடு களத்தில் குதித்தார்.

லாங் ஐலண்ட் என்னும் இடத்தில் 1,000 ஏக்கர் நிலம் வாங்கினார். 750 சதுர அடிப் பரப்பளவு, இரண்டு படுக்கையறைகள், அடுக்களை, ஒரு வரவேற்பறை. மொட்டை மாடி என ஒரே மாதிரியான வடிவமைப்புக் கொண்ட தனி வீடுகள் கட்டத் திட்ட மிட்டார். வெள்ளை, சிவப்பு ஆகிய இரு வண்ணப் பெயிண்ட்கள் மட்டுமே இங்கு பயன்படுத்தப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச டி.வி, வாஷிங் மெஷின். ஒரே மாதிரியான ஜன்னல்கள், கதவுகள், பெயிண்ட், டி.வி, வாஷிங் மெஷின் ஆயிரக் கணக்கில் வாங்கினால், பேரம் பேசி, அடிமாட்டு விலைக்கு வாங்கலாம் என்னும் கணக்குத்தான் ஒரே மாதிரி வடிவமைப்புக்கும், வில்லியமின் துணிச்சலான திட்டங்களுக்கும் அடிப் படை. வீடு வாங்க வந்தவர்களிடம் வெறும் 58 டாலர்கள் மட்டுமே முன் பணம் பெற்றுக்கொண்டார். மீதிக்கு அரசாங்க, வங்கிக் கடன்கள் வாங்க உதவி செய்தார்.

கட்டுமானத்திலும் வில்லியம் புரட்சி கரமான முறைகளைக் கடைப்பிடித் தார். வீடு கட்டுவதில், 27 வகையான பணிகள் இருப்பதைப் பட்டியலிட்டார். 20 ஏக்கரில் சுமார் 100 வீடுகள் வந்தன. ஒவ்வொரு 20 ஏக்கருக்குமிடையே பொதுவிடம் அமைத்தார். இந்த 100 வீடுகளுக்கான சிமெண்ட் குழைப்பு, தச்சு வேலைகள், குடிநீர், சாக்கடைக் குழாய்கள் தயாரிப்பு ஆகிய 27 வேலைகளும் பொதுவிடங்களில் முடிக்கப்பட்டு, வீடு வீடாக விநியோ கிக்கப்பட்டன. வேலை வேகமாக நடந்தது. பிற கட்டடக் கம்பெனிகள் வருடத்துக்கு ஐந்து வீடுகள் கட்டிக் கொண்டிருந்தபோது, வில்லியம் ரெக்கார்ட் என்ன தெரியுமா? வாரத் துக்கு 180 வீடுகள்! பிறர் கட்டுமானச் செலவு சுமார் 10,000 டாலர்களாக இருந்தது. வில்லியமின் செலவோ 6,990 டாலர்கள். 7,990 டாலர்களுக்கு விற்றார். சுளையாக ஒரு வீட்டுக்கு 1,000 டாலர் லாபம்.

விற்பனையை அறிவித்தார். முதல் நாளே 1,400 வீடுகள் விற்றுப்போயின. சில மாதங்களில் 17,000 வீடுகள் விற் பனை. லெவிட் கம்பெனிக்கு சுமார் லாபம் 1.7 கோடி டாலர்கள்! இந்த வெற்றி தந்த உந்துதலால், நியூ ஜெர்ஸி மாநிலத்தில் 12,000 வீடுகள் கொண்ட டவுன்ஷிப் உருவாக்கினார். 1967. வில்லியம் தான் வந்த பாதையைப் பெருமிதத்தோடு திரும்பிப் பார்த்தார். அவர் கட்டியிருந்த மொத்த வீடுகள் 1,40,000.

ஆனால், இதற்குப் பின் வில்லியம் வாழ்க்கை சோகக் காவியமானது. தன் கம்பெனியை ஐ.டி.டி. என்னும் நிறுவனத்துக்கு விற்றார். பதிலாக அவர்களின் கம்பெனிப் பங்குகளைப் பெற்றார். ஐந்தே வருடங்களில், இந்தப் பங்குகளின் விலை 90 சதவீதம் விழுந்தது. இந்தப் பங்குகளை அடமானமாக வைத்து வில்லியம் ஏகப்பட்ட சொத்துக்கள் வாங்கியிருந் தார். இவை அத்தனையும் கடன் கொடுத்தவர்களால் பறிமுதல் செய் யப்பட்டன. இத்தனை துயரங்கள் தந்த இயற்கை, நீண்ட ஆயுளையும் அவருக்குத் தந்திருந்தது. 87 ஆம் வயதில் மரணமடைவதுவரை, வறுமையும், சோகமும் அவர் நிரந்தரத் துணைகளாக இருந்தன.

வில்லியம் வாழ்க்கையில் சறுக்கியது உண்மை. அதே சமயம், வசதி குறைந்தவர்களின் சொந்த வீட்டுக் கனவுகளை நனவாக்கி, உலகக் கட்டுமானத் துறையில் அவர் புதிய பாதை போட்டிருப்பது அதைவிடப் பெரிய உண்மை.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x