Published : 27 Apr 2014 12:00 PM
Last Updated : 27 Apr 2014 12:00 PM

வணிக நூலகம் - கவனம் எனும் கவசம்

கவனச்சிதறல்தான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனப் பிரச்சினை என்கிறார் டேனியல் கோல்மேன். இவர் Emotional Intelligence என்ற கருத் தாக்கத்தை பிரபலப் படுத்திய உளவியலாளர். பத்திரிக் கையாளர் மற்றும் எழுத்தாளர். அதே பெயரில் அவர் எழுதிய புத்தகம் வந்த காலம் முதல் பிரபலம்.

Howard Gardner-ன் Theory of Multiple Intelligences அறிவு என்பது பன்முகத்தன்மை கொண்டது என் கிறது. இவர் கூற்றின் அடிப்படையில் விளைந்ததுதான் உணர்வு சார்ந்த அறிவு எனும் கருத்தாக்கம் கல்விக் கூடத்தில் உணர்வு சார்ந்த அறிவை கண்டுகொள்ளவே இல்லை என்கிற வாதத்தை பிரமாதமாய் முன் வைத்து வெற்றி கண்டவர் என சொல்லலாம்.

நல்ல மதிப்பெண்கள் வாங்கும் மாணவனை விட குறைந்த மதிப்பெண் கள் வாங்கும் மாணவன் வாழ்க்கையில் ஜெயிக்கும்போது அதை பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பாட அறிவை விட தன்னை உணர்ந்து, பிறரை உணர்ந்து, தன் உணர்வுகளை சிறப்பாக கையாண்டு சரியான முடிவு எடுக்கும் மாணவனுக்கு உணர்வு சார்ந்த அறிவு அதிகம் என்று புரிந்து கொள்ளலாம்.

உளவியலை பண்டிதர் கூட்டத்தை விட்டு வெளியே எடுத்து வந்து சாதாரண மக்களுக்கு புரியும்படி சொன்னவர் டேனியல் கோல்மேன். இவரின் Focus: The Hidden Driver of Excellence புது வரவு.

நன்கு ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களை தொகுத்து எளிய மொழி யில் நிறைய உதாரணங்கள் கொண்டு எழுதப்பட்ட கனமான புத்தகம். 300 பக்கங்களுக்கு மேல் உள்ளது என்பதைக் காட்டிலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இவர் கூறும் விஷயங்கள் அதிகம். அதனால் கிட்டத் திட்ட ஒரு மாதம் வைத்துத் தான் படிக்க முடிந்தது.

வரலாற்றில் எங்கும் இல்லாத அளவு கவனச்சிதறல் இன்று மக்களை பீடித்துள்ளது என்கிறார். தொழில் நுட்ப வளர்ச்சி இதை மிகத் தீவிரமாக்கி விட்டது என்கிறார். 60 ஆண்டுகளுக்கு முன்னரே தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித குலம் கவனச்சிதறலில் மாட் டிக் கொள்ளும் என்று சொன்ன தத் துவ அறிஞர் மார்டின் ஹெய்டகர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி!

தன் மகள் அழைப்பது கூடத் தெரியாமல் ஃபேஸ்புக்கில் இருக் கும் அம்மா, விருந்தாளிகளை உட்கார வைத்துவிட்டு தொலைக் காட்சி சானல்களை திருப்பிக்கொண் டிருக்கும் குடும்பத்தலைவர், முக்கிய வியாபார சந்திப்பில் எதிராளி இரு வாக்கியங்கள் பேசுவதற்குள் மூன்று முறை பிளாக்பெரியை பார்க் கும் கார்ப்பரேட் ஆசாமி என இவர் சொல்லும் அனைத்து உதாரணங் களும் நாம் இங்கு பார்த்துக் கொண்டிருப்பவை தான்!

கல்வி, வேலை, குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு, சமூக உறவுகள் என அனைத்தையும் கவனச்சிதறல் பாதிக்கிறது!

நாலைந்து வேலைகளை இயல் பாக செய்த அந்த கால வீட்டுப் பெண் மணிகளை நினைவுகூர வைக்கிறது. அடுப்படியில் நின்று கொண்டு மாமி யாருடன் பேசிக்கொண்டே, குழும்பு கொதிக்கிறதா என்று பார்த்தவாறே, காயை நறுக்கிக் கொண்டே, மகள் வாய்ப்பாடு சொல்வதை கவனித்த வாறே வீதியில் பால்காரன் வருகிறானா என்று நோட்டமிட்டவாறே, சைக்கிள் சத்தம் கேட்டால் கணவராக இருக்கும் என்று எதிர் நோக்கும் பெண்மணி எப்படி தன் ஒற்றை மனதை இத்தனை வேலைகளுக்கு சிறப்பாக கொடுக்க முடிந்தது?

கவனம் என்பது பிரித்துக் கையாள முடியாதது என்கிறது நரம்பு உளவியல். பின் எப்படி இது சாத்தியம் என்று நான் மாணவப் பருவத்தில் கேள்வி கேட்டு விடை அறிந்ததை, மிக எளிமை யாக விளக்குகிறார் கோல்மேன்.

கவனம் பிரிக்க முடியாததுதான். ஆனால் ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு கவனத்தை நொடிப்பொழுதிற்கும் குறை வாக மாற்றலாம். தேர்ந்த மனம் ஒரு நொடிக்குள் ஆறு விஷயங்களில் கவனம் செலுத்தி, மாறக்கூடியது. அஷ்டாவதானிகள் என்றும் 16 வேலை களை ஒரே நேரத்தில் செய்து சாகஸம் செய்யும் நம் ஊர் கலைஞர்கள் செய்வதும் இதைத்தான்.

அவர்களும் கவனத்தை சிதைப்பதில்லை. கவனத்தை நொடிப்பொழுதுக்குள் பல விஷயங்களுக்கு மாற்றுகிறார்கள். அதே நேரத்தில் பதட்டமில்லாத இயல்பான மனம் ஒரு நொடிக்கு குறை வான நேரத்தில் ஒரு விஷயத்தை முழுவதுமாக கணிக்க கூடியது. அதுவும் மனதை ஒரு நிலைப்படுத்தும் பயிற்சி கொண்ட மனிதர்களால் இதை மிக எளிதாகச் செய்யமுடியும்.

இன்றைய பிரச்சினை எந்த விஷயத்தின் மீதும் முழு கவனம் செலுத்த முடியாமல் அடுத்த விஷயத் திற்கு தாவுவது தான். ஆனால் இது முழுக்க முழுக்க மனப்பயிற்சியால் மாற்றக்கூடியது என்பது தான் நற்செய்தி.

புத்தகத்தின் ஒவ்வொரு அத்தி யாயத்திலும் இது போல ஏராளமான நுட்பமான விவாதங்கள், பல துறை மனிதர்கள் பயன்படுத்தும் யுத்திகள், அறிவியலுக்கு உட்படுத்தப்பட்ட ஆய் வுகளின் முடிவுகள் என அனைத்தையும் சுவாரசியமான நடையில் சொல்லும் போது ஏன் இவர் உலகப் புகழ் உளவியல் எழுத்தாளராக இருக்கிறார் எனப் புரிகிறது.

கவனம், சுய கட்டுப்பாடு, பிறர் மனம் புரிதல், நிறைகளை எண்ணுதல், சாமர்த்திய வேலைப்பாடு, சுவாசம் தரும் மாற்றங்கள், மூளையின் இயக் கம் என அழகாக நகர்த்திச் செல்கிறார். தலாய் லாமா சொற்பொழிவு பற்றிய செய்தி சிந்திக்க வைக்கிறது.

தலாய் லாமா திபெத்திய மொழி யில் உரையாற்ற அவர் மொழி பெயர்ப் பாளர் அதை ஆங்கிலத்தில் எடுத்து ரைக்க வேண்டும். தலாய் லாமா சில நேரங்களில் 15 நிமிடங்கள் வரை மொழி பெயர்ப்பிற்கு நிறுத் தாமல் பேசுகிறார். ஆனால் சிறிது மௌனத்திற்குப் பிறகு மொழி பெயர்ப் பாளர் சரளமாக அதை சிறப்பாக ஆங்கிலத்தில் சொல்கிறார். இதைக் கண்ட கோல்மேன் அந்த மொழி பெயர்க்கும் இளைஞரை அழைத்து எப்படி சாத்தியம் என்று விசாரிக்கிறார்.

அதற்கு அவர் தன் துறவிப் பயிற்சியில் பல மொழி செய்யுள்களை மனன முறையில் கற்க நேர்ந்ததாகவும், அந்த மனப்பாட முறை தன் கவனத்தை கூர்மைப்படுத்தியதாகவும் சொல் கிறார். எங்கு வந்து துறவிப் பயிற்சி பெற்றார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்: “தென் இந்தியா!”

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x