Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM
பணவீக்கத்தை தாண்டி வருமானம் கொடுக்கும் கடன் பத்திரங்கள் திங்கள்கிழமை (டிச.23) வெளியாகின்றன. சில்லறை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பத்திரங்கள் வெளியாகின்றன. இந்த பத்திரங்களில் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 31 வரை முதலீடு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் பத்திரத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 5 ஆயிரமாகும். அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தனி நபர், ஹிந்து கூட்டு குடும்பத்தினர், அறக்கட்டளைகள், பல்கலைக் கழகங்கள் ஆகியன இதில் முதலீடு செய்யலாம். நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் வட்டி விகிதம் கணக்கிடப்படும்.
இரண்டு வகையில் வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர வட்டியாக 1.5 சதவீதம் ஆண்டுக்கும் அத்துடன் பணவீக்கம் அடிப்படையிலான அளிக்கப்படும். ஆண்டுக்கு இரண்டு முறை கணக்கிடப்பட்டு, முதிர்வு காலத்தில் வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஓராண்டுக்குப் பிறகு இப்பத்திரத்திலிருந்து வெளியேறலாம்.
மற்றவர்களுக்கு குறைந்த பட்ச காலம் 3 ஆண்டுகளாகும். முன்கூட்டியே கடன் பத்திரத்திலிருந்து வெளியேற நினைப்பவர்கள் அதற்குரிய பிடிப்புத் தொகை போக மீதியைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் பத்திரங்கள் வங்கிகள் மூலம் வெளியிடப்படும். முதலீட்டாளர்கள் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளை அணுகலாம். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இந்த கடன் பத்திரங்கள் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment