Published : 12 Aug 2016 11:01 AM
Last Updated : 12 Aug 2016 11:01 AM
ஏன் சிலர் மட்டும் எளிதாக பணத்தை சம்பாதித்துவிடுகிறார்கள், மற்றவர்கள் இதனை பெரும் போராட்ட மாக தங்கள் வாழ்வில் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த இரு பிரிவினரிடையே ஏதாவது வேறுபாட்டினை கண்டதுண்டா?. அவர்களது கல்வியில், அறிவு திறனில், மற்ற திறமைகளில், பணி தொடர்பான பழக்கங்களில், தொடர்புகளில், அதிர்ஷ்டத்தில், வேலைகளை தேர்வு செய்வதில், தொழிலில் அல்லது முதலீட்டில் என எதிலாவது வேற்றுமை உண்டா என்றால், இவற்றில் எதுவும் இல்லை என்பதே இதற்கான பதில்.
வேறு என்ன வித்தியாசம் என்கிறீர்களா? தங்களுக்கான நிதியின் எதிர் காலத்தை தங்கள் மனதிலிருந்து சரியாக அறிந்துகொண்டால் மட்டுமே, அதனை அடையவும் முடிகின்றது என் கிறார் “சீக்ரெட்ஸ் ஆப் தி மில்லியனரி மைண்ட்” என்னும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் “டி ஹார்வ் எகெர்”.
நிதி செயல்திட்டம்!
எனக்கு ஐந்து நிமிடம் கொடுங்கள், உங்களது ஒட்டுமொத்த வாழ்விற்கான நிதி எதிர்காலத்தை என்னால் கணித்துக்கொடுக்க முடியும் என்கிறார் ஆசிரியர். ஆம், ஒருவருடைய பணம் மற்றும் வெற்றியின் செயல்திட்டத்தை சரியாக அடையாளம் காண்பதன் மூலம் இதைச் செய்ய முடியும் என்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் நமது ஆழ்மனதில் நமக்கான தனிப்பட்ட இந்த செயல்திட்டம் பதியப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இதுவே மற்ற எதையும் விட நமது நிதி எதிர்காலத்தை தீர்மானிக்கும் வல்லமை உடையது. இதனை கண் டறிந்து புதுப்பிக்கவும், அதன்மூலம் இயற்கையான வெற்றிகளை வசப் படுத்தவும் முடியும் என்பதே ஆசிரி யரின் வாதம்.
பணம் தொடர்பான அனைத்தும் நமக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கெட் டிங், சேல்ஸ், பேரம், பங்கு, தொழில் என நிதி ரீதியிலான அனைத்திலும் நாம் கில்லாடியாக இருந்தாலும், உயர்ந்த வெற்றிக்கான நமது நிதி செயல்திட்டத்தை சரியாக அமைத்துக்கொள்ளாத நிலையில், நம்மால் அதிகப்படியான பணத்தை சம்பாதிக்க முடியாது என்கிறார் ஆசிரியர். ஒருவேளை சம்பாதித்தாலும், அவற்றை சரிவர கையாளாமல் இழந்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதையும் குறிப்பிடுகிறார்.
பழத்தின் தரம் வேரில்!
மரம் ஒன்றை கற்பனை செய்து, அது உங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்ப தாக வைத்துக்கொள்ளுங்கள். மரத் தின் பழங்கள் வெற்றிக்கான நமது செயல்பாட்டின் முடிவுகள். நன்கு பழுத்து சாப்பிட தயாராக இருக்கும் அந்த பழம், சுவை குறைவானதாக உள்ளபோதோ, போதுமானதாக இல்லாதபோதோ, அளவில் சிறிய தாக உள்ளபோதோ நீங்கள் அதை விரும்பவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில், பெரும்பாலானோர் செய்வது என்ன வென்றால் மீண்டும் மீண்டும் அந்த பழத்தின் மீதே கவனத்தை செலுத்து வதே. அதாவது உங்கள் செயல்பாட்டு முடிவுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது.
ஆனால், உண்மையில் அந்த பழத்தை உருவாக்கியது விதைகளும் வேர்களும் தானே. அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்?. எது உங்கள் கண்களுக்கு தெரியாமல் தரைக்கு அடியில் உள்ளதோ, அதுவே உங்கள் கண்களுக்கு தெரிகின்ற தரைக்கு மேல் உள்ளதை உருவாக்குகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள். ஆக, நீங்கள் பழத்தின் தரத்தை மாற்ற விரும்பினால், முதலில் அதன் வேரை கவனத்தில் கொள்ளவேண்டும். உங்களுக்கு கிடைக்கும் செயல்பாட்டு முடிவில் மாற்றம் வேண்டுமானால், உங்கள் செயல்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
எப்படி உருவாகிறது!
உங்களுக்கான நிதி மற்றும் வெற்றி யின் செயல்திட்டம் எவ்வாறு உருவா கின்றது என்பதை தெரிந்துகொள் வோம். இதன் முதல்படி உங்களுக்கு கிடைக்கும் தகவல்களிலிருந்து தொடங்குகின்றது. பெரும்பாலும் இந்த தகவல்கள் உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், மத தலைவர்கள், ஊடகம் மற்றும் உங்கள் கலாச்சாரம் போன்ற பல முனைகளிலிருந்தும் சிறுவயது முதலே உங்களுக்குள் ஊடுருவி புரோகிராமிங் செய்யப்பட்டுவிடுகின்றன. இந்த அடித்தள தகவல்களே உங்களது வெற்றிக்கான செயல்திட்டத்திற்கு தொடக்கப்புள்ளி.
மனதிலுள்ள இந்த தகவல்களே உங்களது எண்ணங்களுக்கு வழி வகுக்கின்றது. பிறகு இந்த எண்ணங் கள், உங்களது உணர்வுகளுக்கு வழி வகுக்கின்றது. அதன்பிறகு உணர்வு கள் செயல்வடிவம் பெற்று உங்களிட மிருந்து வெளிப்படுகின்றது. இறுதியில் இந்த செயல்பாடே உங்களது வெற்றிக்கு வழிவகுக்கின்றது. ஆக, சிறுவயது முதலே நீங்கள் பார்த்தது, கேட்டது மற்றும் உங்கள் அனுபவம் ஆகியவற்றில் பணம் தொடர்பான விஷயங்கள் எவ்வாறு இன்றைய உங்களது நிதிநிலையை பாதித்துள்ளது என்பதன் மூலமே உங்களுக்கான நிதி திட்டமிடல் உருவாகின்றது.
வெற்றியாளர்களின் சிந்தனை!
நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பு கிறீர்கள், வெறுமனே நீரில் இறங்கி நீச்சலடிக்க ஆரம்பித்துவிடுவீர்களா? இல்லை, முதலில் நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள் எவ்வாறு நீந்துகிறார்கள் என்பதை கவனித்து, பிறகு அதைப்போல பயிற்சி செய்ய வேண்டும் அல்லவா. அதுபோலவே பணக்காரராக வேண்டுமானால் பணக் காரர்களின் சிந்தனையையும் செயலை யும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் மற்றும் செயல்படுகிறார்கள் என்பது தெரிந்திருக்க வேண்டும். இந்த சிந்தனைகளும் அனுபவங்களும் உங்க ளுடைய மனதில் பதியப்படும்போது, அதிலிருந்து வெற்றிக்கான எண் ணங்களும், உணர்வுகளும், செயல்களும் தோன்றுகின்றது.
ஏழ்மையான மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து பணக்காரர்களின் சிந்தனையும் செயலும் பெரிதும் வேறுபடுவதாக சொல்கிறார் ஆசிரியர். பணம், வசதி, அவர்களுக்கான மற்றும் மற்றவர்களுக்கான எண்ணம் என வாழ்வின் அனைத்து நிலை களிலும் அவர்களின் செயல்பாடு வேறு பட்டதாகவே உள்ளது. இவர்களிடம் உள்ள சிந்தனை மற்றும் செயல்பாடு களில் உள்ள வேறுபாடே அவர்களை பணக்காரர்களாக மாற்றியுள்ளது என்பதை உணர்ந்து செயல்படும்போது நீங்களும் அவர்களது நிலையை அடையலாம்.
வாழ்க்கையின் உருவாக்கம்!
பணம் சம்பாதித்தவர்கள் “என் வாழ்க்கையை நானே உருவாக்கு கிறேன்” என்பதில் நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றார்கள். அதேசமயம் மற்றவர்கள் “எது தானாக நடக்கிறதோ” அதை சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்கிறார் ஆசிரியர். பணம் சம்பாதித்தலைப் பொறுத்தவரை, பணக்காரர்கள் வெற்றிபெற வேண்டும் என்று செயல்படுகிறார்கள். ஆனால் மற்றவர்கள் தோல்வியடையக்கூடாது என்ற நிலையிலேயே செயல்படுகிறார் கள். உங்களது வாழ்க்கையை வளமான தாக அமைத்துக்கொள்ள வேண்டுமா னால், அதற்கான உந்துசக்தி நீங்களே என்பதில் ஆழமான நம்பிக்கை வர வேண்டும். இதில் நம்பிக்கை ஏற்படாத பட்சத்தில், உங்கள் வாழ்க்கை உங்களது கட்டுப்பாட்டிலிருந்து விலகிச்சென்றுவிடும்.
நிதி நிலைமையில் வெற்றியடைந் தவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்துகிறார்கள். மற்றவர்களோ தங்களுக்கு ஏற்படும் தடைகளில் கவனத்தை செலவிடுகிறார்கள். வெற்றியாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விட வலிமையான வர்கள். மற்றவர்ளைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்சனைகளே அவர்களை விட வலிமையானதாக இருக்கின்றது. மேலும், பணக்காரர்களின் நிதி மேலாண்மை மற்றவர்களை விட சிறப்பானதாக இருப்பதாக தெரிவிக்கின்றார் ஆசிரியர்.
பணக்காரர்களிடம் உள்ள பணம் அவர்களுக்காக கடுமையாக உழைக்கின்றது. மற்றவர்களோ பணத்திற் காக கடுமையாக உழைத்துக்கொண் டிருக்கிறார்கள். மேலும், நிதி நிலை மையில் சிறந்தவர்கள் ஒருபோதும் தங்களது தேடுதலை நிறுத்திக்கொள்வ தில்லை. இந்த வேறுபாடுகளை உணர்ந்து வெற்றியாளர்களைப் போல் செயல்பட்டு நாமும் வளம் பெறுவோம்.
p.krishnakumar@jsb.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT