Last Updated : 13 Sep, 2016 10:46 AM

 

Published : 13 Sep 2016 10:46 AM
Last Updated : 13 Sep 2016 10:46 AM

தமிழில் மனித வளக் கருத்தரங்கம்: சிறிய விஷயங்களுக்கான விவாத களம்

தொழில்துறை சார்ந்த கருத்தரங்கம் என்றாலே அவை ஆங்கிலத்தில் மட்டுமே நடக்க வேண்டும் என்னும் எழுதப்படாத சட்டம் இயற்றப்பட்டுவிட்டது போல, அனைத்து கருத்தரங்குகளும் ஆங்கிலத்தி லேயே நடக்கின்றன. அதனை மாற்றும் முயற்சியாக இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் (ஐஎஸ்டிடி) `தமிழ் மண்ணும் மனித ஆற்றலும்’ என்னும் மனித வள மாநாட்டை புதுச்சேரியில் நடத்த இருக்கிறது.

மனித வளம் குறித்து தமிழில் மாநாடு நடப்பது இது இரண்டாம் முறை ஆகும். தமிழில் இந்த மாநாட்டின் தேவை என்ன? மனித வளத் துறை பங்களிப்பு என்ன என்பது குறித்து இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஆர்.கார்த்தி கேயனிடம் உரையாடியதிலிருந்து…

இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் முக்கிய பணிகள் என்ன?

நமக்கு குறைவான பொறியாளர் களும், அதிகமான பணியாளர்களும் தேவை. ஆனால் நாம் உருவாக்கி வைத்திருப்பது அதிக பொறியாளர் களையும், குறைவான பணியாளர்களை யும்தான். ஒருபுறம் பொறியாளர் களுக்குத் தேவை இல்லை. மாறாக இதர பணிகளுக்கான ஆட்கள் தேவை. குறிப்பாக தனிச் சிறப்பான பணிகளைச் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை. மத்திய அரசின் மாடுலர் எம்பிளாயபிள் திட்டத்தில் (modular employable scheme) திறனை வளர்த்துக்கொள்ளும் நபர்களுக்கு, சோதனை செய்து அவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவது ஐஎஸ்டிடி.

மேலும் நிறுவனங்கள், அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்போது எங்கு தேவை இருக்கிறது என்பதை அறிந்தால் அவற்றைப் பூர்த்தி செய்ய முடியும். உதாரணத்துக்கு ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்துக்குக் குறிப்பிட்ட திறனில் 100 பணியாளர்கள் தேவை என்றால், தேவைக்கு ஏற்ப பயிற்சி அளிக்க முடியும். அதேபோல பயிற்சிப் பெற்ற நபர்களுக்கு எங்கு தேவை இருக்கிறதோ அங்கு பணியமர்த்த முடியும். அடுத்த கட்டமாக இந்த அமைப்புகளை ஒருங்கிணைக்க ஐஎஸ்டிடி திட்டமிட்டு வருகிறது. தவிர, திறன்மிக்க பணியாளர்கள் பற்றிய தகவல் பட்டியலை உருவாக்க வேண்டும்.

மனித வளம் குறித்த மாநாடு தமிழில் நடப்பதினால் என்ன மாற்றம் வந்துவிடும். தவிர கலந்து கொள்பவர்கள் அனைவருக்குமே ஆங்கிலம் புரியுமே?

இது ஒரு மாயை. ஆங்கிலம் புரியலாம். ஆனால் பேசவோ, எழுதவோ முடியாது. அந்த தயக்கம் காரணமாக ஒவ்வொரு கூட்டமும் மேலெழுந்தவாரியாகவே முடிந்துவிடுகிறது. மாநாட்டில் பேசுபவர்கள் பெரிய பெரிய விஷயங்களைப் பேசுவார்கள். அது குறித்த கவலை கேட்பவருக்கு இல்லை. கேட்பவரின் பிரச்சினை வேறு. ஏதாவது சந்தேகம் கேட்க வேண்டும் என்றால்கூட தயக்கம் இருக்கும். தமிழில் மாநாடு நடக்கும் போது ஒரு வழிப்பாதையாக இல்லாமல், பங்கேற்பவர்களின் கருத்துகள் மீதும் விவாதங்கள் நடக்கின்றன. தமிழில் பேசும்போது நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்த கள நிலவரம் வெளியாகும். ஆங்கிலத்தில் நடந்தால் மேக்ரோ நிலையிலேயே முடிந்துவிடும்.

கடந்த வருடம் சோதனை முயற்சியாக நடத்தினோம். இப்போது அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறோம்.

தமிழில் மாநாடு நடத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன?

எந்த ஒரு விஷயத்திலும் சவால்கள் இருக்கதான் செய்யும். உதாரணத்துக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங் களில் உள்ளவர்களின் வருகை குறைவாக இருக்கும். அது போன்ற நிறுவனங் களையும் கொண்டு வருவதற்கான முயற்சி எடுத்து வருகிறோம்.

இதனால் என்ன விளைவு ஏற்படும் என நினைக்கிறீர்கள் ?

கடந்த வருடம் நடந்த மாநாட்டில் ஒப்பந்த தொழிலாளர் உரிமைகள் குறித்து விரிவாக விவாதித்தோம். அது அங்கு வந்திருந்த பல மனித வளத் துறையினருக்கு உதவியாக இருந்தது. இப்போது எம்பிஏ படிப்பவர்களுக்குத் தொழிலாளர் சட்டம் தெரியாது. இருந்தாலும் அவர்களால் மனித வளத் துறையில் பணியாற்ற முடியும். இதுபோன்ற விவாதங்கள் நடக்கும் போது புதிதாக வருபவர்களுக்கு இது குறித்த தெளிவு கிடைக்கும். அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் தங்களைக் கூர் தீட்டிக்கொள்ள உதவியாக இருக் கும். தவிர களத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்தால்தான் முழுமையான மனித வளத்துறை தலைவராக உயர முடியும். மேலும் வருங்காலத்தில் இது போன்ற மாநாடுகளில் நடக்கும் விவாதங் களை தமிழில் ஆவணப்படுத்தும் திட்டமும் இருக்கிறது.

பொதுவாக ஹெச்ஆர் என்றாலே ஆட்களை வேலையை விட்டு நீக்கும் பணியைத்தான் செய்வார்கள் என்பது போல எதிர்மறை எண்ணங்கள்தான பணியாளர்கள் மத்தியில் இருக்கிறது?

இது எப்படி இருக்கிறது என்றால், நிதித் துறையினரின் வேலை எது என்று கேட்டால், பணத்தை நிறுத்தி வைப்பது, தள்ளிவைப்பது, முடியாது என்று சொல்வதுதான் என்பது போல இருக்கிறது. இது எப்படி தவறான விளக்கமோ அதுபோலத்தான் இந்த சிந்தனையும் இருக்கிறது.

இது நிறுவனங்களைப் பொறுத்தது. சரியான மனிதவளக் கொள்கைகளை நிறுவனங்கள் உருவாக்காத போது, மனித வளத் துறையினர் என்ன செய்ய முடியும். அவர்களும் பணியாளர்கள்தானே.

மனித வளத்துறையால் நிறுவனத்தின் போக்கினை மாற்ற முடியுமா?

நிர்வாகத்தில் ஒரு பகுதிதான் ஹெச்ஆர். டாடா போன்ற சில நிறுவனங் களில் ஹெச்ஆர், தொழிலாளர் சட்டம் இல்லாதபோதே அவர்கள் தொழிலாளர்களுக்காக வழிமுறைகளை உருவாக் கினார்கள். மனித வளம் குறித்து நிர்வாகத் துக்கு தெளிவான எண்ணம் இருக்க வேண்டும். தவறு நடக்கும்பட்சத்தில் அதனை விளக்க வேண்டிய கடமை ஹெச்ஆர்-க்கு இருக்கிறது. இந்த முடிவு சட்டப்படியாக தவறு, இப்படிச் செய்தால் மேலும் சில தவறுகள் நடக்கலாம் என்று விளக்க வேண்டிய கடமை இருக்கிறது.

ஒரு நிறுவனத்துக்கு இரண்டு ஹெச்ஆர் தேவை. சிஇஓ-க்கு உதவியாக ஒருவரும், சிஎப்ஓ-க்கு உதவியாக ஒருவரும் தேவை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அது சரியா? உங்கள் கருத்து என்ன?

இதை நான் ஏற்கவில்லை. ஆனால் வேறு மாதிரி கருதுகிறேன். நிறுவனத்தில் எந்த பிரச்சினையும் வராமல் சுமூகமாக நடத்த ஒருவரும், பணியாளர்களுக்கு என்ன வசதி செய்து கொடுக்கலாம், அவரது உற்பத்தி திறனை எப்படி மேம்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்த ஒருவரும் தேவை என்று நான் குறிப்பிடுவேன்.

தொடர்புக்கு: karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x