Published : 03 Nov 2014 11:01 AM
Last Updated : 03 Nov 2014 11:01 AM
பங்குச் சந்தை தொடர் ஏற்றம் பெற்றதால் தொழிலதிபர்களின் வசமுள்ள பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. அதேபோல அவர்களது வாரிசுகளின் சொத்து மதிப்பு ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. நிறுவன தொழிலதிபர்களின் வாரிசுகள் மட்டுமின்றி தலைமை நிர்வாகிகளின் வாரிசுகளின் பங்கு மதிப்பும் உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்ஃபோசிஸ், சிப்லா, சன் பார்மா, ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் வாரிசுகள் வசமுள்ள பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது.
2013-ம் ஆண்டு இறுதியில் வாரிசுகளின் சொத்து மதிப்பு ரூ. 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது பங்குச் சந்தை ஏற்றத்தால் 18 சதவீதம் உயர்ந்தது. இதனால் ரூ. 2,600 கோடி அதிகரித்துள்ளது. இன்ஃபோசிஸ் வாரிசுகளின் பங்கு மதிப்பு 14 சதவீதம் உயர்ந்து ரூ. 12,200 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ரூ. 10,720 கோடியாக இருந்தது.
அக் ஷதா மூர்த்தி, ரோஹன் மூர்த்தி ஆகியோரின் பங்கு மதிப்பு ரூ. 6,500 கோடியாக உள்ளது. இன்போசிஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி நந்தன் நிலகேணியின் மகன் நிஹார் மற்றும் மகள் ஜான்வியின் பங்கு மதிப்பு ரூ. 1,350 கோடியைத் தொட்டுள்ளது.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் வாரிசுகள் திவ்யா மற்றும் தீக் ஷாவின் சொத்து மதிப்பு முறையே ரூ. 245 கோடியும், ரூ. 1,115 கோடியும் உயர்ந்துள்ளது. எஸ்.டி. சிபுலாலின் வாரிசின் பங்கு மதிப்பு ரூ. 2,978 கோடியைத் தொட்டுள்ளது. விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜியின் வாரிசுகள் ரிஷாத் மற்றும் தாரிக் பங்கு மதிப்பு ரூ. 53.6 கோடியாக அதிகரித்துள்ளது.
இதேபோல சன் பார்மா நிறுவனர் திலிப் சாங்வியின் மகன் அலோக் சாங்வி மற்றும் அவரது சகோதரி வசமுள்ள பங்குகளின் மதிப்பு 46 சதவீதம் அதிகரித்து ரூ. 485 கோடியாக உயர்ந்துள்ளது. சிப்லா நிறுவனர் எம்.கே. ஹமீதின் வாரிசுகள் கமில் மற்றும் சாமினாவின் பங்கு மதிப்பு ரூ. 550 கோடி அதிகரித்துள்ளது.
வொக்கார்ட் நிறுவனர் ஹபில் கொராகிவாலாவின் வாரிசுகள் முஸ்தபா மற்றும் ஹுசைபா ஆகியோரின் பங்கு மதிப்பு 75 சதவீதம் அதிகரித்து ரூ. 34 கோடியைத் தொட்டுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் வாரிசுகள் பங்கு மதிப்பு 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானியின் பங்கு மதிப்பு ரூ. 680 கோடியாக அதிகரித்துள்ளது. இவரது சகோதரர் அனில் அம்பானியின் வாரிசுகளின் பங்கு மதிப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜியான்மோல் மற்றும் ஜியான்ஷுல் ஆகியோர் வசமுள்ள பங்கு மதிப்பு ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.
கோத்ரெஜ் நிறுவன வாரிசுகள் தான்யா, பிரோஷா, நிஸாபா மற்றும் பிரோஸ் ஆகியோரின் பங்கு மதிப்பு ரூ. 1,045 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 960 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜிண்டால் குழும வாரிசுகளான தாரிணி, தான்வி மற்றும் பார்த்ஸ் ஆகியோரின் பங்கு மதிப்பு ரூ. 776 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 560 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT