Published : 11 Mar 2014 12:57 PM
Last Updated : 11 Mar 2014 12:57 PM
இந்தியாவில் உள்ள சிறு நகரங்களை இணைக்கும் வகையில் 200 சிறிய விமான நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை ஹைதராபாதில் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணைச் செயலர் ஜி. அசோக் குமார் தெரிவித்தார்.
இந்தியா ஏவியேஷன் 2014 மாநாடு ஹைதராபாதில் புதன் கிழமை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் 18 நாடுகளைச் சேர்ந்த 250 விமான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பேகம்பட் விமான நிலையத்தில் இக்கண் காட்சி, மாநாடு தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்துள்ள அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
பெரிய விமான நிலையங்களை செயல்படுத்துவது மற்றும் அதன் நிர்வாகச் செலவு அதிகமாக உள்ளது. இதற்கு மாற்றாக குறைந்த கட்டணத்திலான விமான நிலையங் களை அடுத்த 20 ஆண்டுக ளுக்குள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் விமான சேவை மூலம் இணைக்கப்படும்.
இப்போது இந்தியாவில் 400 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த 6 ஆண்டு களில் இந்த எண்ணிக்கை 1,000 ஆக உயரும் என்று அவர் சுட்டிக் காட்டினார். பெரு நகரங்கள் அல்லாத இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூலமான வருமானம் 30 சதவீதமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அளவு 45 சதவீதமாக உயரும் என்று அவர் குறிப்பிட்டார்.
கிரீன்ஃபீல்ட் விமான நிலைய கொள்கையின்படி மேலும் 15 புதிய விமான நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் விமான நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். விமான நிலைய கட்டமைப்பு, சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது, விமான நேவிகேஷன் சேவை உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளுக்காக 12,000 கோடி டாலரை இந்தியா முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
விமான போக்குவரத்தில் வேகமான வளர்ச்சியை எட்டிவரும் நாடாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், 2020-ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கும் என்று குறிப்பிட்டார். இப்போது 9-வது இடத்தில் இந்தியா உள்ளது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் ஆண்டுக்கு 33 கோடி வெளிநாட்டினர் மற்றும் 8 கோடி உள்நாட்டினரைக் கையாளும் அளவுக்கு விரிவாக்கப்பட வேண்டியுள்ளது. இப்போது 12 கோடி வெளிநாட்டினர் மற்றும் 4 கோடி உள் நாட்டினரை விமான நிலையங்கள் கையாள் கின்றன.ஐ.ஏ.என்.எஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT