Published : 07 Nov 2014 09:49 AM
Last Updated : 07 Nov 2014 09:49 AM

மின் துறையில் 25,000 கோடி டாலர் முதலீடு செய்ய வாய்ப்பு: சிஐஐ மாநாட்டில் அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

அடுத்த ஐந்தாண்டுகளில் 25,000 கோடி டாலர் மின் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் தேவையும் இருக்கிறது என்று நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். புதுடெல்லியில் நடந்த இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் உலக பொருளாதார மையம் நடத்திய மாநாட்டில் இத்தகவலை அவர் தெரிவித்தார்.

இதில் 10,000 கோடி டாலர் மரபு சாரா எரிசக்தி துறையிலும், 5,000 கோடி டாலர் மின் பகிர்மானத்துறையிலும் முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

எங்களுக்கு சுற்றுப்புற சீர்கேடில்லாத மின்சாரம் தேவை. ஒரு மாநிலம் மின் மிகை மாநிலமாகவும் ஒரு மாநில மின் பற்றாக்குறை மாநிலமாகவும் இருக்கிறது. இதற்கு மின்சாரத்தை பகிர்ந்துகொள்வதற்கான முழுமை யான வசதிகள் இல்லாததுதான் காரணம்.

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் மின்சாரத் தேவை இரு மடங்காக உயரும். அதற் கேற்ப 2019-ம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்தியை இரு மடங்காக்க வேண்டும். அதாவது இப்போதைக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்து வருகிறோம். வரும் ஐந்தாண்டு காலத்தில் இதனை 2 லட்சம் யூனிட்களாக அதிகரிக்க வேண்டும் என்றார்.

இதில் சில எரிபொருள் மற்றும் மரபு சாரா எரி சக்தியை எவ்வளவு அதிகப்படுத்துகிறோம் என்பது உள்ளிட்ட சவால்களும் நம்மிடையே இருக்கின்றன. இப்போதைக்கு உற்பத்தி செய் யப்படும் மின்சாரத்தில் 6 சதவீதம் மட்டுமே மரபு சாரா எரிசக்தி மூலம் கிடைக்கிறது என்றார்.

1993 முதல் 2010-ம் ஆண்டு வரையில் அனுமதிக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை உச்ச நீதி மன்றம் செப்டம்பர் 24-ம் தேதி ரத்து செய்துவிட்டது.

இதற்கிடையே மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தடையில்லாமல் கிடைக்க ஆன்லைன் ஏலம் மூலம் அனுமதிக் கலாம் என்று மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இப்போதைக்கு நிலக்கரி உற்பத்தி 50 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிப்படும் என்றார்.

வரும் 2022-ம் ஆண்டு சூரிய சக்தியை பயன்படுத்தி ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். வட்டி விகிதம், டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் நிலவும் ஸ்திரத்தன்மை ஆகியவை காரணமாக இந்த திட்டங்களுக்கான மூலதன செலவுகள் குறையும் என்றார்.

மேலும் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களாக என்.டி.பி.சி. கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மரபு சாரா எரிசக்தியில் முதலீடு செய்து வரிச்சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். அணுசக்தி குறித்து பேசிய அமைச்சர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் புதிய அணுசக்தி நிலையங்களை அமைத்தாக தெரியவில்லை.

அணுசக்தியை பொறுத்தவரை இந்தியா எச்சரிக்கையாக இருக்கும், மேலும் அணுசக்தி நிலையங்களின் ஆயுள் காலம் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x