Published : 03 Jan 2014 10:35 AM
Last Updated : 03 Jan 2014 10:35 AM
இடைக்கால பட்ஜெட் தயாரிக்கும் பணியில் நிதி அமைச்சகம் தீவிரமாக இறங்கியுள்ளது. பல்வேறு துறைகளும் தங்களுக்குத் தேவைப்படும் நிதி குறித்த விவரத்தை இம்மாதம் 10-ம் தேதிக்குள் அனுப்புமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ரயில்வேத்துறை தவிர, துணை மானியக் கோரிக்கை எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கலாகும். மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது பதவியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு செலவு அனுமதி கோரிக்கை (வோட் ஆன் அக்கவுண்ட்) எனப்படும் இடைக்கால பட்ஜெட் எதிர்வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். வழக்கமாக பொது பட்ஜெட் பிப்ரவரி 28-ம் தேதி தாக்கல் செய்யப்படும். செலவு அனுமதி கோரிக்கை என்பதால் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படலாம். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான செலவு அனுமதி கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
புதிதாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசு முழுமையான பொது பட்ஜெட்டை ஜூலை மாதம் தாக்கல் செய்யலாம். நிதி அமைச்சகம் மற்ற துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் எந்த சூழ்நிலையிலும் திருத்தப்பட்ட மதிப்பீட்டு இலக்கை விட கூடுதலாக செலவு அனுமதி கோரிக்கை இருக்கக் கூடாது என சுட்டிக் காட்டியுள்ளது.
கூடுதல் செலவு அனுமதி கோரிக்கையின்போது அது 2013-14-ம் நிதி ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் ஒவ்வொரு துறையின் செலவு அளவு நிர்ணயிக்கப்பட்ட 15 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்பதில் நிதி அமைச்சகம் உறுதியாக உள்ளது.
கூடுதல் செலவு அனுமதி கோரிக்கையாக இரண்டாவது முறை அரசு ரூ. 18,594 கோடிக்கு அனுமதி கோரியது. இப்போது மூன்றாவது செலவு அனுமதி கோரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. பெட்ரோலியம், உர மானியத்தை ஈடுகட்டுவதற்காக கூடுதல் செலவு அனுமதி கோரிக்கை தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
செலவு அனுமதிக்கு ஒப்புதல் வழங்கும் ஆணையம், கூடுதல் செலவு அனுமதி கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது அதில் எந்த அளவுக்கு சேமிக்க முடியும் என்று ஆராயும். எனவே தேவையற்ற, கூடுதல் செலவினங்களைக் குறைக்கும். இதன் மூலம் ஒதுக்கீட்டுக்குப் பிறகு செலவு செய்யாமல், அதை மறு ஒப்படைப்பு செய்யும் நிகழ்வைத் தடுக்க இத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்றே தோன்றுகிறது. மேலும் குறைந்தபட்ச செலவுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தத் தொகையானது எதிர்நோக்கும் அனைத்து செலவினங்களையும் சமாளிக்கப் போதுமானதாக இருக்கும். பிற துறைகளின் கூடுதல் செலவு கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடிந்த வரை முயற்சிப்போம் என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இதுவரை 8 பொது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இப்போது செலவு அனுமதி கோரிக்கையையும் (இடைக்கால பட்ஜெட்) தாக்கல் செய்ய உள்ளார். நாடு சுதந்திரமடைந்தபிறகு இதுவரை 82 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய். அவருக்கு அடுத்த இடத்தில் சிதம்பரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT