Published : 29 Apr 2017 10:44 AM
Last Updated : 29 Apr 2017 10:44 AM
நீங்கள் ஒரு டாக்டர் என்று நினைத் துக் கொள்ளுங்கள். உங்களிடம் தெரியாத்தனமாக 67 வயது பெரியவர் ஆர்த்ரைடிஸ் இடுப்பு வலி யோடு வருகிறார். அவருக்கு எல்லா மருந்தும் கொடுத்தும் வலி தீரவில்லை. இருக்கும் ஒரே வழி, ஆப்ரேஷன். செய்யலாமா என்று யோசிக்கும் போது அதுவரை அவருக்கு தரப்படாத ஒரு மருந்து இருப்பது தெரிகிறது. என்ன செய்வீர்கள்? தராத மருந்தை தந்து பார்ப்பீர்களா? செய்து ரொம்ப நாளாச்சு என்று ஆப்ரேஷன்தான் பண்ணுவேன் என்று அடம் பிடிப்பீர்களா?
இக்கேள்வியை பல டாக்டர்களிடம் கேட்டார்கள் ‘டொனால்ட் ரெடில்மயர்’ மற்றும் ‘எல்டர் ஷாஃபிர்’. பதில்களை ‘Journal of the American Medical Association’ல் அலசி ‘Medical Decision Making in Situations That Offer Multiple Alternatives’ என்ற ஆய்வுக் கட்டுரையாக எழுதினார்கள். ஆய்வில் 47% டாக்டர்கள் புதிய மருந்தை தந்து பார்ப்பேன், எதற்கு கத்தியை சாணை பிடித்து கிழவர் இடுப்பை கீறிக்கொண்டு என்றனர்.
இதே கதையை சற்று மாற்றி வேறு சில டாக்டர்களிடம் ‘ஆப்ரேஷன் ஒரு பக்கம் இருக்க, இன்னும் தரப்படாத இரண்டு புதிய மருந்துகள் இருந்தால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டார்கள் ஆய்வாளர்கள்.
வயதான காலத்தில் பெரியவரை ஆப்ரேஷன் என்ற அவஸ்தைப் படுத்துவதற்கு பதில் இப்பொழுது இரண்டு மருந்துகள் இருப்பதால் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம், ஆக இரண்டில் ஒரு மருந்தை கொடுத்துப் பார்ப்பது பெட்டர் என்று தோன்றுகிறதா? ஆனால் இம்முறை 28% டாக்டர்கள் மட்டுமே மருந்து தந்து குணப்படுத்த முயல்வேன் என்றனர்.
என்ன யோசனை இது? ஒரு மருந்து மட்டும் இருக்கும் போது ஆப்ரேஷன் வேண்டாம் என்று 47% டாக்டர்கள் மருந்தை தேர்ந்தெடுக்க ஒன்றுக்கு இரண்டு மருந்துகள் இருக்கும்போது ஆப்ரேஷனை பெருவாரியான டாக்டர் கள் தேர்வு செய்வது ஏன்?
இதற்குக் காரணம் ‘முடிவு பக்க வாதம்’ (Decision Paralysis) என்கிறார்கள் ஆய்வாளர்கள். முடிவெடுக்கும் போது அதிக ஆப்ஷன்கள் இருந்தால், அவை என்னதான் நல்ல ஆப்ஷன்களாக இருந் தாலும் அதிகப்படியான ஆப்ஷன்களே முடிவெடுக்க விடாமல் தடுத்து விடும். அப்பொழுது இருக்கும் நிலையையே (status quo) தொடரச் செய்கிறது. அதா வது பக்கவாதம் வந்து முடிவெடுக்க முடியாதது போன்ற நிலை!
ஷாப்பிங் செய்யும் போது சீக்கிரம் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள். அது கடைகளை ஏறி இறங்கி அலை வதால் உண்டான உடல் அலைச்சல் என்று தானே நினைத்தீர்கள்? அதுதான் இல்லை. எதை எடுப்பது எதை விடுப்பது என்று கடையிலிருக்கும் அதிக ஆப்ஷன்களால் மனம் முடிவெடுக்க முடியாமல் திண்டாடி அதனாலேயே மனமும் உடலும் சோர்வடைகிறது.
ஒற்றை தூர்தர்ஷன் சேனல் மட்டும் இருந்த போது முழு நேர வேலையாய் டீவி முன் உட்கார்ந்து ‘கண்மணிப் பூங்கா’ முதல் ‘வயலும் வாழ்வும்’ வரை மணிக்கணக்காய் பார்த்த நாம் இப்பொழுது அதே டீவியில் ஐநூறு சேனல்களை மாற்றி மாற்றி எதை பார்ப்பது என்று புரியாமல் ‘சே ஒரு எழவும் நல்லா இல்ல’ என்று போய் போர்த்திக் கொண்டு படுப்பது முடிவு பக்கவாதத்தின் கைங்கர்யத்தால் தான்!
முடிவு பக்கவாதத்தை விளக்கும் இன்னொரு ஆய்வு அமெரிக்காவில் நடந்தது. ஒரு கடையில் ஆறு ஜாம் பாட்டில்கள் வைக்கப்பட்டு வாடிக்கை யாளர்கள் அதை டேஸ்ட் செய்து வாங்க லாம் என்று கூறப்பட்டது. பலர் வாங்கி யும் சென்றனர். மறுநாள் அதே இடத் தில் 24 ஜாம் பாட்டில்கள் வைக்கப்பட்டு டேஸ்ட் செய்து வாங்கலாம் எனப்பட்டது. இம்முறை வாங்கியவர்கள் வெகு குறைவு.
என்ன பெரியதாய் குறைவு என்று தானே கேட்கிறீர்கள்? 24 பாட்டில் இருந்த போது வாங்கியவர்களை விட 6 பாட்டில்கள் மட்டும் இருந்து போது வாங்கியவர்கள் 10 மடங்கு அதிகம். 10 மடங்கு! ஆப்ஷன் அதிகமாக முடிவெடுக்க முடியாமல் மனம் திணறுவது புரிகிறதா.
இதை வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலும் சந்திக் கிறோம். ஆனால் உணர்வதில்லை, அவ்வளவே. ஹோட்டலுக்கு நண்பர்களோடு செல்கிறீர்கள். என்ன சாப்பிடுவது என்று தெரிந்தாலும் சர்வரிடம் ‘என்னப்பா இருக்கு’ என்று கேட்கிறீர்கள். அவர் ஒரே மூச்சில் உங்களுக்குத் தெரிந்த, தெரியாத, புரிந்த, புரியாத, அறிந்த, அறியாத ஐடங்களை வர்தா புயல் போல் கடகடவென்று கொட்டுகிறார். புயலில் சிக்கிய மரம் போல் ஆடி போய் ஒன்றும் புரியாத நீங்கள் எதை தின்பது என்று குழம்பிப் போய் நண்பரிடம் ‘நீ என்னப்பா சாப்பிடற’ என்று கேட்டு அவர் கூறுவதை சர்வரிடம் கூறி எனக்கும் அதையே கொடுப்பா என்று சொல்வதும் முடிவு பக்கவாதமே!
திருமணத்திற்கு பெண் தேடும் போதும் பலரை இக்கோட்பாடு பீடித்து படுத்துவதை பார்த்திருக்கலாம். ஒன்றிரண்டு பெண்களின் ஃபோட்டோ மட்டும் தரப்படுபவர்கள் ஏதோ ஒருவரை பார்த்தோம், செலக்ட் செய்தோம், பண்ணி தொலைப்போம் என்று முடிவு செய்வார்கள். ஆனால் கையில் கல்யாண புரோக்கர் கணக்காய் ஆயிரத்தெட்டு ஃபோட்டோக்களை வைத்திருப்பவர்கள் அவர்கள் உடம்பிற்கே பக்கவாதம் வரும் வரை யாரை தேர்வு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவார்கள்.
முடிவு பக்கவாதம் என்னவோ டாக்டர் களை, ஜாம் பாட்டில் வாங்குபவர்களை, பெண் பார்பவர்களை மட்டுமே வாட்டும் பிரச்சினை என்று நினைக்காதீர்கள். வாழ்க்கை முதல் வியாபாரம் வரை முடிவெடுக்கும் தருணம் அனைத்திலும் தன் கைவரிசையை காட்டும் கோட்பாடு இது. உங்கள் பிராண்டிற்கு புதிய பத்திரிக்கை விளம்பரம் டிசைன் செய்யும் படி விளம்பர ஏஜென்சியிடம் கேட்கிறீர்கள். அது பத்தாதென்று ‘நாலஞ்சு டிசைன் செஞ்சு எடுத்துட்டு வாங்க, நல்லா இருப்பதை செலக்ட் செய்றேன்’ என்கிறீர்கள். விளம்பர ஏஜென்சி பல டிசைன்களுடன் வர அனைத்தையும் ரூம் போட்டு யோசிக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் யோசிக்கிறீர்கள். யோசித்துக் கொண்டே இருந்து முடிவெடுக்க முடியாமல் ‘இருக்கும் பழைய டிசைனே தேவலை, அதே இருக்கட்டும்’ என்று பழைய குருடியை கதவை திறந்து வரவேற்று ‘விளம்பர ஏஜென்சி தண்டம், அவங்க தந்த டிசைன் ஒன்று கூட நல்லா இல்ல’ என்று உங்களை பீடித்திருக்கும் முடிவு பக்கவாத வியாதியை மறைத்து அவர்களை பழிக்கிறீர்கள்.
‘ஆப்ஷன்ஸ் அதிகமாகும் போது மனம் சுமைப்படுத்தப்பட்டு முடிவெடுக்க முடியாது திணறுகிறது. அதிக ஆப் ஷன்கள் மனதை விடுவிப்பதில்லை, கட்டுப்படுத்துகிறது. பலப்படுத்துவ தில்லை, பலவீனப்படுத்துகிறது’ என்கிறார் ‘பேரி ஷ்வார்ட்ஸ்’ என்ற உளவியாளர். இவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு The paradox of choice. தேர்வு செய்வதில் முரண்பாடு!
வீட்டிலோ, வியாபாரத்திலோ முடி வெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்து தேர்ந்தெடுக்க ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கும்போது முடிவு பக்கவாதம் தாக்கும் என்பதை முதற் காரியமாக உணருங்கள். ஆனாளப்பட்ட டாக்டர் களையே ஒன்றுக்கு இரண்டு மருந்துகள் போட்டு பாடாய் படுத்தி குழப்புகின்றன என்றால் நீங்களும் நானும் இந்த வியாதியிலிருந்து விடுபட வழி இருக்கிறதா?
இருக்கிறது. முடிவு பக்கவாதத்தை பக்காவாக போக்க பலே ஐடியாக்கள் தரும் ஒரு நான்கு, ஐந்து புத்தகங்களின் பெயர்களை என்னால் தர முடியும். ஆனால் அதில் எதை வாங்குவது, எதை படிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் மீண்டும் முடிவு பக்கவாதம் வந்து உங்களை பாடாய் படுத்தும். எதற்கு உங்களுக்கு தலையெழுத்து. பேசாமல் நானே சில ஐடியாக்களை விலாவரியாய் விளக்குகிறேன். அடுத்த வாரம்!
தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT