Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM
கவர்ச்சிகரமான போலி முதலீட்டுத் திட்டங்களால் உண்மையிலேயே உரிய பலனைத் தரும் திட்டங்கள் எடுபடாமல் போகிறது என்று பங்கு பரிவர்த்தனை (செபி) மையத்தின் தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார்.
இதற்கு முக்கியக் காரணம் சாதாரண மக்களிடையே மிக விரைவில் இத்தகைய போலி முதலீட்டுத் திட்டங்கள் பிரபலமாவதுதான் என்று அவர் குறிப்பிட்டார். அதிக வட்டி உள்ளிட்ட மக்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களை இவை அறிவிக்கின்றன. ஆனால் உண்மையிலேயே நம்பகமான நல்ல முதலீட்டுத் திட்டங்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதில்லை என்று குறிப்பிட்டார்.
எந்த ஒரு முதலீட்டுத் திட்டத்திலும் 20 சதவீதம், 30 சதவீதம் மற்றும் 40 சதவீத வட்டியை ஆண்டுதோறும் அளிக்க இயலாது. போலியான திட்டங்கள் இத்தகைய அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களைக் கவர்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். போலியான முதலீட்டுத் திட்டங்கள் அளிக்கும் வாக்குறுதிகள், அதிக வட்டிகளை இந்தியாவில் உள்ள நியாயமாக செயல்படும் எந்த நிறுவனத்தாலும் தர இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் போலியான முதலீட்டுத் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைகின்றன. அதேபோல நியாயமான முதலீட்டுத் திட்டங்கள் அதிக அளவில் வருவதில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனாலும் சந்தையில் சில நம்பகமான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அதை மக்கள்தான் அடையாளம் காண வேண்டும் என்று குறிப்பிட்டார். எந்த ஒரு நியாயமான திட்டமும், போலி முதலீட்டுத் திட்ட வாக்குறுதிகளோடு ஒப்பீடு செய்ய முடியாது. ஆனாலும் பெரும்பாலான இடங்களை இத்தகைய சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் சென்றடைவதில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
கிராமப் பகுதிகளில் உரிய பரஸ்பர நிதித் திட்டங்களை கிராமமக்களுக்குப் பரிந்துரைக்கும் சிறந்த ஆலோசகர் இல்லாததும் முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார். இந்த சிக்கலைப் போக்கு வதற்காக கிராமப் பகுதிகளுக்கும் சிறந்த நிதித் திட்டங்களைக் கொண்டு செல்வதற்கான வழி வகைகளை செபி ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் போலி முதலீட்டுத் திட்டங்களின் வருகை அதிகரித்துள்ளது. இது போன்ற திட்டங்களில் ஆரம்ப காலத்தில் அதிக வட்டி அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகை யானது முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. புதிய முதலீட்டாளர்களிடமிருந்து நிதி வர வர இதுபோன்ற போலி திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வட்டி கிடைக்கும். அது நின்றுபோகும்போது முதலீட்டை திரட்டியவர் தலைமறைவாகி விடுவார். இதனால் முதலீட் டாளர்கள் அனைவரும் தங்கள் முதலீடுகளை இழந்து நிற்பர்.
இதுபோன்ற பல முதலீட்டுத் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றை செபி தடுத்துள்ளது. மேலும் இது போன்ற முதலீட்டு திட்டத்தைத் தொடங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் இப்போது செபி-க்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வங்கியில் சேமிப்பு அதிகமுள்ள 86 மாவட்டங்களைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் சிறந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களைப் பிரபலப்படுத்தும் திட்டமும் இப்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக சின்ஹா கூறினார். வங்கி மூலமாக பங்குச் சந்தை முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக மியூச்சுவல் ஃபண்ட் அமைப்பான ஆம்ஃபியுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT