Published : 19 Feb 2014 11:40 AM
Last Updated : 19 Feb 2014 11:40 AM
பொருளியலில் தவிர்க்க முடியாத ஒரு சொல் ‘தேவை’. பொதுவாக, இச்சொல்லில் இருந்துதான் பொருளியலின் ஆரம்பமே இருக்கும். தேவை என்ற சொல்லுக்கு அன்றாட வாழ்வில் விருப்பம் என்று அர்த்தம் எடுத்துகொள்ளலாம். ஆனால், பொருளியலில் ஒரு பொருள் எனக்கு தேவை என்றால், அப்பொருளை வாங்கும் சக்தியும், அப்பொருளுக்கான விலையை கொடுக்கும் விருப்பமும் எனக்கு உள்ளது என்று அர்த்தம்.
இச்சொல்லுடன் இணைந்த ஒரு கோட்பாடு, ‘மற்றவை எல்லாம் நிலையாக இருக்க, ஒரு பொருளின் விலை அதிகரிக்க அதனின் தேவை அளவு குறையும்’ என்ற தேவைக் கோட்பாடாகும்.
நான் ரூ10 எடுத்துக்கொண்டு ஒரு பொருளை வாங்க கடைக்கு போகிறேன். அப்பொருளின் விலை ரூ1 என்று இருந்தால் அப்பொருளின் 10 எண்ணிக்கையை வாங்குவேன், ரூ2 என்றால், 5 எண்ணிக்கை மட்டுமே வாங்குவேன். இப்படி, அப்பொருளின் விலை அதிகரிக்க என் தேவை குறைகிறது. இது நமக்கு அன்றாடம் ஏற்படும் ஒரு அனுபவம்தான்.
உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். பல பொருட்களின் விலைகள் ஏறினாலும் அவற்றின் தேவையை நாம் குறைத்து கொள்வதில்லை. எதனால்? மேலே கூறிய தேவைக் கோட்பாட்டில் ‘மற்றவை எல்லாம் நிலையாக இருக்க’ என்ற அனுமானம், நமது வருவாய், மற்ற பொருட்களின் விலைகள், நமது விருப்பம் எல்லாம் மாறாமல் நிலையாக இருந்தால் மட்டுமே, தேவைக் கோட்பாடு செயல்படும்.
ஒரு பொருளின் விலை அதிகரிக்கும் அதே காலத்தில் நமது வருவாயும் அதிகரித்தால், நாம் தேவையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் நமது விருப்பம் மாறினால், விலை மாற்றம் இல்லாமலே தேவையில் மாற்றம் ஏற்படும். தேநீர் அருந்த வேண்டும் என்று உணவகத்துக்கு சென்ற பிறகு விருப்பம் மாறி காபி அருந்திவிட்டு வரும்போது தேவைக் கோட்பாடு செயல்படவில்லை.
அதே போல் தேநீர் ஒரு கப் ரூ6, காபி ஒரு கப் ரூ10 என்று நினைத்து தேநீர் அருந்த உணவகத்துக்கு சென்றால், அங்கு இரண்டும் ஒரே விலை என்றால், தேநீர் குடிக்க சென்ற நான் காபி குடித்துவிட்டு வருவேன். இவ்வாறு மற்றவை நிலையாக இல்லாமல் இருந்தால் தேவை விதி பொய்யாகிவிடும்.
ஒவ்வொரு பழமும் அதன் பருவகாலத்தில் விலை குறைவாக இருக்கும் போது நாம் அதனை அதிகமாக வாங்குவதும், மற்ற காலங்களில் குறைவாக வாங்குவதும் இயற்கை. வியாபாரிகள் விலைத் தள்ளுபடி கொடுப்பதும் தேவை கோட்பாட்டின் அடிப்படையில்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT