Published : 15 Mar 2014 12:14 PM
Last Updated : 15 Mar 2014 12:14 PM

எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவர் ராஜினாமா: புதிய தலைவராக மாத்யூ பொறுப்பேற்பு

எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவர் பதவியை ஜி.கே. பிள்ளை ராஜினாமா செய்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து துணைத் தலைவராக இருந்த தாமஸ் மாத்யூ, தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திரா காந்தி மேம்பாட்டு மையத்தின் பேராசிரியர் அஷிமா கோயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபைனான்ஷியல் டெக்னா லஜீஸ் (இந்தியா) லிமிடெட் (எப்டிஐஎல்) மற்றும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (எம்சிஎஸ்) ஆகிய இரு நிறுவனங்களும் பொதுமக்கள் பங்குதாரராக உள்ள நிறுவனமாக மறு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னர் இவ்விரு நிறுவனங்களும் மேம்பாட்டாளர்களை (புரமோட்டர்) மட்டுமே பங்குதாரராகக் கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை நடைபெர்ற எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில் இயக்குநர்கள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான தகவலை எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் மறுத்துள்ளது.

எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் வளர்ச்சி யில் மிக முக்கிய பங்காற்றியவர் ஜி.கே. பிள்ளை என்றும், மிகவும் இக்கட்டான சூழலில் அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்றும் அதன் நிர்வாக இயக்குநர் சௌரவ் சர்க்கார் குறிப்பிட்டார். எம்சிஎக்ஸ் சந்தையில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அவர் விளங்கினார் என்று புகழாரம் சூட்டினார்.

இயக்குநர் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மாத்யூ மற்றும் துணைத் தலைவர் டாக்டர் அஷிமா கோயல் ஆகியோர் தலைமையில் தொடர்வர் என்றும் அவர் தெரிவித்தார். எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் இயக் குநர் குழு சமீபத்தில்தான் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தலை வராக முன்னாள் உள்துறைச் செயலரான ஜி.கே. பிள்ளையை தலைவராகவும், மாத்யூவை துணைத் தலைவராகவும் நியமித்திருந்தது.

எம்சிஎஸ்க்ஸ்-எஸ்எக்ஸ் தலைவராக பொறுப்பேற்றபோது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும் கடந்த சில மாதங்களில் சந்தைக்கு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். சந்தையின் உரிமப் பங்குகள் வெளியிடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பங்குதாரர்களிடமிருந்து இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது என்று பிள்ளை கூறினார்.

பங்குச் சந்தையின் செயல்பாட்டு செலவைக் கணிசமாகக் குறைத்துள்ளோம். இது ஆண்டு நிதி நிலை அறிக்கையின்போது தெரியவரும். மேலும் இப்போதைய பங்குச் சந்தையின் செயல்திறனை மேம்படுத்துவது, சந்தை பங்கேற்பு ஆகியன சந்தையின் செயல்பாட்டை அதிகரிக்கும். சந்தை அறிமுகப்படுத்தவுள்ள சீர்திருத்தங்கள் கரன்சி டெரி வேடிவ்ஸ் பிரிவில் உரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாத்யூ குறிப்பிட்டார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலையில் உரிமப் பங்கு 2:1 என்ற விதத்தில் வெளியிடப்பட்டதற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளாக எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் அறிவித்தது. புதிய முதலீட்டாளர்கள் வந்துள்ளதால், உரிமப் பங்கு வெளியீட் டுக்குப் பிறகு விருப்ப ஒதுக்கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்க உள்ளது.

மத்திய புலனாய்வுக் குழு (சிபிஐ),பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் சி.பி. பாவே மற்றும் முன்னாள் முழு நேர உறுப்பினர் கே.எம். ஆப்ரஹாம் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது.

எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் தொடங்குவதற்கு லைசென்ஸ் வழங்கிய விவகாரம் தொடர்பாக இவர்களிருவர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் சர்க்கார். 2008-ம் ஆண்டு முதல் எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் சந்தை செயல்பட்டு வருகிறது.

எதிர்கால வட்டி கணிப்பு வர்த்தகம் (ஐஆர்எப்-interest rate futures) மேற்கொள்வதற்கு கடந்த ஜனவரி மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதிலிருந்தே சந்தையின் செயல்பாட்டில் செபிக்கு பூரண திருப்தி ஏற்பட்டதே காரணம் என்று அவர் குறிப்பிட்டார். ஐஆர்எப் மேற்கொள்வதால் இந்த சந்தை இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே எம்சிஎக்ஸ் பங்கு வர்த்தகத்தின் இடையே 17.5 சதவீதம் வரை சரிந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே இந்த பங்கு ஏற்றம் பெற்று 4 சதவீத சரிவில் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x