Last Updated : 11 Aug, 2016 10:09 AM

 

Published : 11 Aug 2016 10:09 AM
Last Updated : 11 Aug 2016 10:09 AM

அமெரிக்காவில் அதிக மதிப்புமிக்க 100 நிறுவனங்களில் இடம் பிடித்தது டிசிஎஸ்

சர்வதேச அளவிலான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் அமெரிக்காவில் அதிக மதிப்பு கொண்ட 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவில் அதிக மதிப்பு கொண்ட பிராண்டுகள் குறித்து ஆண்டுதோறும் வெளியிடப்படும் பட்டியலில் டிசிஎஸ் நிறுவனம் 58வது இடத்தில் உள்ளது.

டாப் 500 அமெரிக்க பிராண்டுகள் என்கிற இந்த ஆய்வை பிராண்ட் பைனான்ஸ் நடத்தியது. நிறுவனத்தினுடைய பிராண்ட், அறிவுசார்ந்த சொத்துகள் மற்றும் வர்த்தகச் சின்னத்துக்கு உள்ள நிதி சார்ந்த மதிப்புகளை தொழில்துறையில் உள்ள இதர நிறுவனங்களோடு ஒப்பீடு செய்து இந்த பட்டியல் தர வரிசைப்படுத்தப்படும்.

அமெரிக்காவில் டாப் 100 பிராண்ட் பட்டியலில் இடம்பிடித்த 4 சர்வதேச தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்று. இந்த துறையில் 78.3 புள்ளிகளோடு அதிக சக்தி வாய்ந்த பிராண்டாக உள்ளது. ஏஏ+ புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு கடந்த ஆறு ஆண்டுகளில் 286 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் 230 கோடி டாலராக இருந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 2016 ஆம் ஆண்டில் 904 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

குறுகிய காலத்தில் தகவல் தொழில்நுட்ப சேவை துறையில் இது மிகப் பெரிய வளர்ச்சியாகும்.

டிசிஎஸ் நிறுவனம் வாடிக்கையாளர்கள் சேவையை மையப்படுத்தியதன் மூலம் இந்த வெற்றியை அடைந்துள்ளது. ஆனால் புள்ளி விவரங்களை கவனிக்கிறபோது பிராண்ட் முதலீடு மற்றும் பணியாளர்கள் திருப்தி சார்ந்த விஷயங்களில் மேற்கொண்ட உறுதியான மேம்பாட்டு நடவடிக்கைகள்தான் இந்த ஏற்றத்துக்குக் காரணம் என்று பிராண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டேவிட் ஹை குறிப்பிட்டுள்ளார்.

ஐடி சேவை துறையில் ஏகபோகமாக வளர்ந்து வருவதுடன், இத்த துறையில் உறுதியான பிராண்டாகவும் உள்ளது. இந்த பிராண்டுக்கு உள்ள சக்தியை மறுக்க முடியாது. இந்த தர மதிப்பீடு உண்மையாக எங்களது விரிவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு இன்னும் நெருக்கமாகச் செல்ல முடியும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பிரிவு தலைவர் சூர்ய காந்த் தெரிவித்தார்.

டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் பிராண்ட்டை நிலை நிறுத்தவும் தொழிலை மேம்படுத்தவும் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத் தக்க முதலீடுகளை செய்துள்ளது. சமீபத்தில் புதிய வசதியாக டிஜிட்டல் ரீஇமேஜினேஷன் ஸ்டுடீயோ வசதியை சாண்டா கிளாராவில் தொடங்கியுள்ளது. வாடிக்கை யாளர்களுக்கு டிஜிட்டல் முறையி லான சேவைகளை இங்கிருந்து மேற்கொண்டு வருகிறது. அமெரிக் கவில் அதிக வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x