Published : 04 Mar 2017 10:06 AM
Last Updated : 04 Mar 2017 10:06 AM
ஆங்கிலம் பேச கற்றுத் தரும் இன்ஸ்ட்டிட்யூட்டின் பத்திரிகை விளம்பர தலைப்பு இது. ‘ஆங்கிலத்தில் பேச பயமா?’
அதே பத்திரிகையில் இன்னொரு இன்ஸ்ட்டிட்யூட்டின் விளம்பர தலைப்பு இது. ‘ஆங்கிலம் பேசும் போது கீழ்கண்ட தவறுகளை செய்கிறீர்களா?’
இரண்டு விளம்பரங்களும் ஒரே பத்திரிகையில் ஒரே அளவில் வெளியாயின. இரண்டு விளம்பரங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்கள் ஏறக்குறைய ஒன்றுதான். இருந்தும் ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டின் விளம்பரம் அதிக எண்ணிக்கையில் மக்களை ஈர்த்தது. அது எந்த விளம்பரமாக இருக்கும்?
இரண்டாவது விளம்பரம்! ஏனெனில் அதன் தலைப்பு படிப்பவர்களின் கவனத்தை கவர்கிறது. ஏதோ தவறான வார்த்தைகளாமே, அதை பேசி தொலைக்கிறோமோ என்று விளம்பரத்தை முழுவதும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.
அதற்காக முதல் விளம்பரத்தின் தலைப்பு தவறு என்று சொல்லவில்லை. இரண்டாவது விளம்பர தலைப்பு தன் வேலையை சரியாய் செய்கிறது என்கிறேன்.
பத்திரிகை விளம்பரத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பது அதன் தலைப்பு. விளம்பரத்திலுள்ள படம், விலாவரியான விளக்கம் எல்லாம் அவசியம் தான். ஆனால் பத்திரிகை படிக்கும் போது நம் கண்கள் தேடுவது தலைப்புகளை. பத்திரிகையில் வரும் எல்லா செய்திகளையும் நாம் படிப்பதில்லை. எந்த தலைப்பு கவனத்தை கவர்கிறதோ அச்செய்தியை மட்டும் முழுவதும் படிக்கிறோம். அப்படித் தான் விளம்பரங்களையும் கவனிக்கிறோம். விளம்பர தலைப்பு நம் கவனத்தை கவர்ந்தால் அந்த விளம்பரத்தை முழுவதும் பார்க்கிறோம், படிக்கிறோம். மற்ற விளம்பரங்களை பரிட்சையில் சாய்ஸில் விடுவது போல் விட்டுவிடுகிறோம்!
சரியான தலைப்பு இருந்தால் தீர்ந்தது பாதி பிரச்சினை. மீதிக்கு மட்டும் முயற்சி போதுமானது. சரியான தலைப்பு என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது?
நம் அனைவருக்கும் சுயநலமே பிரதானம். நம் தேவையும் அதை பூர்த்தி செய்வதும் தான் முக்கியம். நம் தேவைகளை, நம்மை முதலில் நன்றாக கவனித்துவிட்டு பிறகு தான் மற்றவர்களைப் பற்றி சிந்திப்போம். ராசி பலன் பார்க்கும் போது கூட நம் ராசியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் நாம் நேசிப்பவர்கள் ராசியை படிக்கிறோம். இதை தவறு என்று சொல்லவில்லை. இது தான் நாம், இதுவே நம் குணம்.
சரி, இதற்கும் விளம்பர தலைப்புக்கும் என்ன சம்பந்தம்? அதற்குத் தான் வருகிறேன். பிராண்ட் என்பது என்ன? வாடிக்கையாளர் தேவைக்கு தீர்வு. அதனாலேயே பிராண்ட் அவர் கண்ணில் பளிச்சென்று படுகிறது. விளம்பரமும் அவர் கண்ணில் பளீரென்று படவேண்டும் என்றால் அது வாடிக்கையாளரை, அவர் தேவைக்கான தீர்வை, அவர் தன்நலத்தை பிரதிபலிக்கும் வகையில் இருப்பது தானே முறை?
பிராண்ட் பற்றிய புதிய செய்தியோ அல்லது பிராண்டே புதியதாக இருந்தால் அதையே விளம்பர தலைப்பாக்குவதும் வாடிக்கையாளர் கவனத்தை ஈர்க்கும் வழி. ‘அறிமுகம், கொசு வராமல் தடுக்கும் புதிய ஜன்னல் ஸ்க்ரீன்’ என்று ‘ஃபைஃபர் மொஸ்கிட்டோ ஸ்க்ரீன்ஸ்’ (Phifer Mosquito Screens) என்ற பிராண்ட் விளம்பரத்தில் கூறும் போது ‘நாரயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியல’ என்று புலம்புவர் கண்ணில் பட்டு ‘அட, கொசு தொல்லையிலிருந்து தப்பிக்க புதுசா ஏதோ வந்திருக்கே, என்னவென்று பார்ப்போம்’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டி விளம்பரத்தை முழுவதும் படிக்க வைக்கிறது!
விளம்பர தலைப்பு எழுதும் முன் பிராண்ட் என்ன பயன் தருகிறது, எதனால் வாடிக்கை யாளர் வாங்குகிறார், என்ன கூறினால் நம் பிராண்டை வாங்குவார் என்பதை தெளிவாக அறிந்துகொண்டு பிறகு எழுதத் துவங்குவது உசிதம்.
விளம்பரங்களை உருவாக்குகையில் பலர் வாசகங்களை முதலில் எழுதிவிட்டு, படத்தை முடிவு செய்து இறுதியில் விளம்பரத்திற்கு நல்ல தலைப்பை தேடுவார்கள். இது தப்பாட்டம். நாம் ஏற்கனவே பார்த்தது போல் பத்திரிக்கை படிப்பவர்களை முதலில் கவர்வது தலைப்பு, விளம்பர வாசகங்கள் அல்ல. வாடிக்கையாளர் தன்னை, தன்னலத்தை, தனக்குத் தேவையானதை தலைப்பில் பார்த்து ‘சரி இந்த விளம்பரம் நமக்குத் தான்’ என்று தெரிந்துகொண்ட பின் தான் விளம்பரத்திற்குள் நுழைவார். நுழைந்த பின் தான் விளம்பர வாசகங்களை படிப்பார்.
அதனால் வாசகங்களை முதலில் எழுதி விட்டு எதற்கும் இருக்கட்டும் என்று பிறகு தலைப்பை எழுதுவது போங்காட்டம். விளம்பர தலைப்பு சரியில்லாத போது, அது வாடிக்கையாளரை ஈர்க்காது. அதன் பிறகு கீழே இருக்கும் விளம்பர வாசகங்களை கம்பரோ, கண்ணதாசனோ எழுதினால் கூட கட்டாயம் யாரும் படிக்கப்போவதில்லை!
தலைப்பு எப்படி எழுதுவது என்பதை பார்த்தது போல் எப்படி எழுதக்கூடாது என்பதை பார்ப்போம். தலைப்பு மெகா சீரியல் போல் இழுக்காமல், சுருக்கமாக நடிகையின் உடையைப் போல் சிக்கென்று சிக்கனமாக எழுதுவது, பலரை கவர்ந்து இழுக்கும். இன்று நம்மில் பலருக்கு பொறுமை லவலேசம் இல்லை. வேறு வேலை இருக்கிறதோ இல்லையோ மொத்த பேப்பரையும் மூன்று நிமிடம் தான் படிக்கிறோம். தலைப்பு நச்சென்று இருந்தால் தான் கண்களில் படுகிறது. மனதில் அமர்கிறது.
தலைப்பை எழுதும் போது எல்லோருக்கும் தெரியும், எளிதில் புரியும் வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது. ‘பரிணாம தாத்பர்யங் களின் திறனாய்வுப் பெட்டகம்’ என்பது போன்ற தலைப்பு எழுதினால் யாருக்காவது புரியுமா? உங்களுக்கே முதலில் புரிந்ததா? எழுதிய எனக்கே புரியவில்லையே. யாரையோ கெட்ட வார்த்தையில் வைவது போல் இருக்கும் இது போன்ற தலைப்பை படித்த பின் யாராவது விளம்பரத்தை மேலே படிப்பார்களா?
இத்தனை நேரம் தலைப்பு எழுதும் விதம், எழுதக்கூடாத விதம் பற்றிப் பார்த்தது நீங்கள் உட்கார்ந்து விளம்பரம் எழுத அல்ல. அதை எழுதுபவர்கள் கொண்டு வந்து உங்களிடம் தரும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை மட்டுமே. விளம்பரத்தை உங்கள் வாடிக்கையாளர்கள் படித்து, புரிந்து, உங்கள் பிராண்டை வாங்கவேண்டும் என்று ஆசையிருந்தால் விளம்பரங்களை நீங்களே எழுதித் தொலைக்காதீர்கள். அந்த வேலையை தேர்ந்த விளம்பர நிபுணர்களிடம் அளியுங்கள். எழுதும் ஆசையிருந்தால் கதை எழுதுங்கள். கட்டுரை எழுதுங்கள். ஸ்ரீராம ஜெயம் எழுதுங்கள். விளம்பரம் எழுதி வியாபாரத்திற்கு வில்லங்கம் விளைவிக்காதீர்கள்!
புடவைத் தலைப்பில் மயங்கி புடவையைப் பிரித்து காட்டச்சொல்லும் பெண்களைப் போல் தான் விளம்பர தலைப்புகளும். அதை வாடிக்கையாளர் கவனத்தில் படும் படி எழுதினால் விளம்பர புடவையை அவரே பிரித்து பார்த்து, புரிந்துகொண்டு பிராண்டையும் வாங்குவார். விளம்பரத்தின் தலையெழுத்தை மட்டுமல்ல உங்கள் வியாபாரத்தின் தலை யெழுத்தையும் நிர்ணயிப்பது விளம்பர தலைப்புகளே!
தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT