Published : 02 Jan 2014 09:20 AM
Last Updated : 02 Jan 2014 09:20 AM
ரயில்வேத் துறையில் நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவரக் குறிப்பை மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக வர்த்தக அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை இம்மாதத்திற்குள் கூடி முடிவு செய்யும் என்று வர்த்தகத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இத்துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மட்டுமின்றி சில குறிப்பிட்ட பகுதிகளில் அன்னிய நிறுவனங்கள் செயல்படுத்துவற்கான எல்லைகளை தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டிஐபிபி) பரிந்துரை செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் பயணிகள் ரயில் சேவையில் மட்டும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ரயில்வேத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை. அதி விரைவு ரயில் சேவை மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு பிரத்யேக தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், சுரங்கங்கள், தொழிற்பேட்டைகளை இணைக்கும் வகையிலான தண்டவாளம் அமைத்தல், நிர்வகித்தல் ஆகியவற்றில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களை துறைமுகத்திலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக தண்டவாளம் அமைப்பது இதன் பிரதான நோக்கமாகும். சுரங்கம், தொழிற்பேட்டை ஆகியவற்றை இணைப்பதே ரயில்வேத் துறையில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதன் முக்கிய நோக்கமாகும். அரசு மற்றும் தனியார் துறை (பிபிபி) பங்கேற்போடு இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT