Published : 16 Jul 2016 10:16 AM
Last Updated : 16 Jul 2016 10:16 AM
நரியை பார்த்திருப்பீர்கள். ஹெட்ஜ் ஹாக் (Hedgehog) என்றால் என்ன தெரியுமா?
ஏதோ மிருகங்களுக்கான லாட்ஜ் போல் இருக்கிறதா? ஹெட்ஜ்ஹாக் முள்ளம்பன்றி போல் உடம்பு முழுவதும் முள் உள்ள சின்ன மிருகம். தோன்றிய நாள் முதல் நரிக்கு ஹெட்ஜ்ஹாக்கை திண்ண ஆசை. முடியவில்லை. நரி என்னென்னவோ தந்திரம் செய்யும். ஒளிந்திருந்து ஹெட்ஜ்ஹாக் மீது தாவும். ஹெட்ஜ்ஹாக் ஓடாது. பதற்றப்படாது. ‘இந்த தரித்திரத்திற்கு எத்தனை பட்டாலும் புரியாது’ என்பது போல் தன் உடம்பை பந்து போல் சுருட்டிக்கொள்ளும்.
பாய்ந்த நரி படாரென்று லாண்ட் ஆகி நிற்கும். ஹெட்ஜ்ஹாக் உடம்பெங்கும் முள் குத்திக்கொண்டு நிற்கிறதே. வாயை வைத்தால் அலகு குத்தியது போல் ஆகுமே. உதைக்கலாம் என்றால் முள் குத்தி பாதம் ஊதுவத்தி ஸ்டாண்ட் போல் ஆகுமே. இப்படி அப்படி பார்த்து ‘என்ன எழவுடா இது’ என்று நரி வாலை சுருட்டி ‘பாழாய் போன ஹெட்ஜ்ஹாக்கை எப்படி பிடிக்கலாம்’ என்று ரூம் போட்டு யோசிக்கும்.
பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என்பார்கள். ஆனால் எந்த பனங்காட்டு நரியின் சலசலப்புக்கும் ஹெட்ஜ்ஹாக் அஞ்சியதே இல்லை!
நிற்க.
தொழில் ரகசியம் பகுதியில் எதற்கு அனிமல் பிளானட்? பிசினஸ் பக்கத்தில் எதற்கு மிருகங்கள் பற்றிய விளக்கம்?
ஹெட்ஜ்ஹாக்-நரி ஒரு கிரேக்க நீதிக் கதை. `நரிக்கு பல விஷயம் தெரியும், பலதை செய்யும். அதனால் உருப்படியாய் எதையும் செய்யாது. ஹெட்ஜ்ஹாக்குக்கு ஒன்று தான் தெரி யும். அதை மட்டுமே செய்யும். பிழைக் கும்’. வாழ்க்கையை மட்டுமல்ல, வியாபாரத்தையும் எளிமையாக்கும் போது நம் பார்வை தெளிவடையும்; பயணிக்க வேண்டிய பாதை புலப்படும்; முயற்சிகள் முழுமையடையும்; வெற்றி கைகூடும்!
`குட் டு க்ரேட்’ (Good to Great) என்ற புத்தகத்தில் இதை சுட்டிக்காட்டி வெற்றிகமான கம்பெனிகள் உத்தி அமைக்கும் வழியை விளக்குகிறார் ‘ஜிம் காலின்ஸ்’. ஆய்வுக் குழுவுடன் பல வருடங்கள், ஆயிரக்கணக்கான கம்பெனிகளை அலசி, ஆய்வறிக்கை கள், புள்ளி விவரங்கள் சேகரித்து, நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அதிசிறந்த கம்பெனிகள் உருவாவது எப்படி என்று ஆராய்ந்து புத்தகமாய் எழுதினார்.
அதிசிறந்தவை என்று அவர் தேர்ந் தெடுத்தது பதினோறு கம்பெனிகளை. இவைகளின் வெற்றிக்கு அடித்தள மிட்டது கம்பெனி தலைவரின் திறன் என்கிறார். இதை விளக்கும் கட்டுரையை சில வாரம் முன் இங்கு படித்தது நல்ல உள்ளங்களுக்கு நினைவிருக்கும். அதோடு முக்கியமானது கம்பெனி வகுத்துக்கொண்ட பாதை. ஆழமாய் சிந்தித்து, தெளிவாய் முடிவெடுத்து, எளிமையான பாதை வகுத்துக் கொள் கின்றன அதிசிறந்த கம்பெனிகள். இதை ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு என்கிறார் காலின்ஸ். மற்ற கம்பெனிகள் கண்டதை தொட்டு, ஏகத்துக்கும் குழம்பி சிக்கலான பாதை பிடித்து சின்னாபின்னமாகி சீர்குலைந்து சிதிலமைடைகின்றன. அதி சிறந்த கம்பெனிகள் எது அவசியமோ அதை மட்டுமே பார்த்து மற்றவைகளை உதாசீனம் செய்கின்றன.
ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு மூன்று வட்டம் கொண்டது. ஒவ்வொரு வட்ட மும் ஒரு கேள்வி. அதற்கு தெளிவான விடை கம்பெனி தலையெழுத்தை நிர்ணயிக்கும். அதற்காக ஒரு மீட்டிங் போட்டு டீ, பிஸ்கெட் தின்று நான்கு பேர் பேசி பெறும் விடைகள் அல்ல அவை. அதிசிறந்த கம்பெனிகள் இக்கேள்விகளுக்கான விடைகளை நான்கு வருடங்கள் வரை கூட தேடி, அலசி, ஆராய்ந்து கண்டுபிடித்தன என்கிறார் காலின்ஸ்.
1. எவ்விதத்தில் நீங்கள் உலகில் சிறந்ததாக விளங்கமுடியும்?
எல்லா கம்பெனிகளுக்கும் சிறந்ததாக ஆக ஆசை இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் சிறந்ததாக எந்த கம்பெனியாலும் இருக்கமுடியாது. எதில் சிறந்து விளங்குவது என்று கம்பெனி தீர்மானிக்கவேண்டும். தங்களுக்கு எது தெரியுமோ, எது புரியுமோ அதை மட்டுமே செய்து, தங்கள் ஈகோ சொல்வதைக் கேளாமல் தங்கள் திறமை எதுவோ அதற்கேற்ப மட்டுமே முயற்சிகளை மேற்கொள்ளும் என்று சிறந்த கம்பெனிகளைப் பற்றி கூறுவார் ‘வாரன் பபெட்’. ‘பால் கொள்முதல் செய்யும் திறமையே’ தங்கள் வலிமை என்று உணர்ந்து அதை மட்டுமே திறம்படச் செய்யும் ‘ஹட்சன்’ போல.
ஒன்றைச் சிறந்ததாக செய்ய முடியா விட்டால் எதற்கு அதை செய்வது? எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதை செய்வது தானே புத்திசாலித்தனம். தெரிந்ததை செய்தால் நல்ல கம்பெனி ஆகலாம். மற்றவர்களை விட ஒன்றை சிறந்ததாய் செய்தால் மட்டுமே அதிசிறந்த கம்பெனியாக முடியும். அதிசிறந்த கம்பெனிகள் இதை புரிந்து அதை மேலும் வளர்க்கத் தேவையான முதலீடு செய்து, கடும் முயற்சி செய்கின்றன. அதனால் மென்மேலும் சிறந்து விளங்க முடிகிறது என்கிறார் காலின்ஸ்.
2. உங்கள் பொருளாதார இன்ஜினை செலுத்துவது எது?
அதிசிறந்த கம்பெனிகள் விடாமல், அதிக லாபம் ஈட்டி வந்ததை தன் ஆய்வில் கண்டார் காலின்ஸ். இதற்குக் காரணம் அவர்கள் திறமையாய் அடை யாளம் கண்டுகொண்ட எகனாமிக் இன்ஜின் என்கிறார். கம்பெனி தன் லாபத்தை எப்படி வரையறுக்கிறது என்பதுதான் இது. அதிக வாடிக்கை யாளர் என்றால் அதிக லாபம் என்று தான் பல கம்பெனிகள் நினைக்கின்றன. அது அவசியமில்லை. உதாரணத்திற்கு ‘இன்போசிஸ்’ தன் பொருளாதார இன்ஜினாய் கருதுவது வருடாந்திர லாபத்தை அல்ல. ‘ப்ராஃபிட் பர் எம்ப்ளாயி’ அதாவது ‘ஒவ்வொரு ஊழியரால் கிடைக்கும் லாபத்தை’.
3. உணர்வு பூர்வமாய் நீங்கள் நேசிப்பது எதை?
உணர்வு பூர்வமாய் நீங்கள் எதை நேசிக்கிறீர்கள் என்பதை அறுதியிடுங் கள். இதை ஆங்கிலத்தில் பாஷன் (Passion) என்பார்கள். எதைச் செய் வதில் உங்களுக்கு பேஷன் உண்டோ அதைச் செய்யுங்கள். காலையில் கண் விழித்தது முதல் உங்களை விரட்டி ஆபீசிலிருந்து அனைவரும் சென்ற பிறகும் உங்களை உழைக்க வைப்பது எதுவோ அதை மட்டுமே செய்யுங்கள் என்கிறார் காலின்ஸ்.
இந்த மூன்று விடைகளின் இன்டர்செக்ஷன்தான் உங்கள் ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு. உங்களுக்கு அதிக ஆர்வமும், பாஷனும் இருந்து அதை மற்றவர்களை விட சிறந்ததாய் செய்யமுடிந்து அது குறைவில்லா லாபம் தரவல்லதாக இருக்கிறதோ அதை கம்பெனி கோட்பாடாக்குங்கள். அந்த கோட்பாட்டை கம்பெனியின் கண்களில் கடிவாளமாய் கட்டி அதன் வழி மட்டும் வியாபாரத்தை பார்த்து, அதன்படி முடிவுகள் எடுத்து, அதன் பாதையில் பயணம் செய்தால் வெற்றி நாடு தொட்டு, அங்கு சக்சஸ்புரத்தில் நம்பர் ஒன் இலக்க அட்ரஸ்ஸை அலேக்காக அடைவீர்கள்!
யோசித்துப் பாருங்கள். நீங்கள் சிறந்து விளங்கும் விஷயம் மீது உங்களுக்கு பேஷன் இல்லையெனில் அந்தப் பணியை கடனே என்றுதான் செய்வீர்கள். நீங்கள் பேஷன் வைத்திருக்கும் விஷயம் உங்கள் எகனாமிக் இன்ஜின் இல்லையெனில் அதில் லாபம் சம்பாதிக்க மாட்டீர்கள். ஆக, அந்த மூன்று விடைகளின் சங்கமம்தான் உங்கள் வெற்றியின் ஆதாரம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு என்பது சிறந்ததாக மாற இலக்கிடும் லட்சியமல்ல. சிறந்ததாக ஆக மாறும் முயற்சியும் அல்ல. சிறந்ததாக மாற இடும் திட்டமும் அல்ல. ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு என்பது எந்த விஷயத்தில் சிறந்ததாக இருக்க முடியும் என்ற தெளிவான புரிதலை பெறுவது. வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் சில விஷயங்கள் புரியாமல் இருப்பதால் தானே புலம்பவேண்டியிருக்கிறது. புரிந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சனை; ஓய்ந்தது ஒப்பாரி.
எது அநாவசியமோ அதை விட்டு, எது முக்கியமோ அதை மட்டும் நினைத்து, கலங்காமல் முயற்சித்து, அசராமல் அடித்து, கூலாக இருந்தால் வெற்றி உறுதி என்பதே ஹெட்ஜ்ஹாக் நமக்குக் கற்றுத் தரும் பாடம். சுள்ளென்று தன் உடல் முள் கொண்டு நமக்கு குத்திக்காட்டும் உண்மை!
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT