Last Updated : 19 Nov, 2014 01:07 PM

 

Published : 19 Nov 2014 01:07 PM
Last Updated : 19 Nov 2014 01:07 PM

அதிக யூரியா பயிருக்கு ஆபத்து

சம்பா நெற்பயிருக்கு மேலுரமாக தற்போது இடப்பட்டு வரும் யூரியாவை தேவைக்கு அதிகமாக இடுவதால் பூச்சி நோய்த் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதென வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மேலுரம் இடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்சமயம் வானிலை மேகமூட்டமாக மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் சம்பா நெற்பயிருக்குத் தேவைக்கு அதிகமாகத் தழைச்சத்து அதாவது யூரியா இடுவதால் பூச்சி, நோய்கள் அதிகமாகத் தாக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக இலைச்சுருட்டுப் புழு போன்ற பூச்சிகளும் குலைநோயும் தாக்க வாய்ப்புள்ளது. யூரியா அதிகம் இடுவதால் பயிர் வளர்ச்சி அதிகமாகி இலைச்சுருட்டுப்புழு இலைகளைச் சுருட்டி சுருட்டப்பட்ட இலைச் சுருள்களுக்குள் புழுக்கள் இருந்து கொண்டு பச்சயத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும்.

இதனால் பயிர்களில் ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றிவிடுகிறது. இப்பூச்சி தாக்குதலை வயல்களில் அந்துப் பூச்சிகள் பறப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதேபோல் குலைநோய் தாக்குதலும் ஏற்படும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிறமையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடனும் கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படும். இந்நோய் தீவிரமாகும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும் தழைச்சத்து உரமான யூரியாவை அளவுக்கு அதிகமாக இடுவதைத் தவிர்த்தாலே பூச்சி, நோய் தாக்காமல் நெற்பயிரைப் பாதுகாக்க முடியும் என வேளாண்மைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x