Published : 08 Feb 2014 12:00 AM
Last Updated : 08 Feb 2014 12:00 AM
சென்னையில் கட்டுமானத் திட்டங்கள் அதிகம் அறிமுகமாகும் பகுதி எது தெரியுமா? தென் சென்னைதான் என்கிறது இந்தியா ப்ராபர்டி.காம் ஆய்வறிக்கை. சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் ரியல் எஸ்டேட் சந்தை 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்தியச் சென்னை, தென்சென்னை, வடசென்னை, மேற்குசென்னை ஆகியவையே அவை. நான்கு மண்டலங்கள் இருந்தாலும், கட்டுமானத் திட்டங்கள் தென்சென்னையில் அதிகம் நடைபெறக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
தென்சென்னையில் தற்போது மடிப்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி, மாடம்பாக்கம், ஓ.எம்.ஆர். சாலை, ஜி.எஸ்.டி. சாலை ஆகிய பகுதிகளில் தரமான கட்டுமானத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் மட்டும் 60 சதவீதக் கட்டுமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து மேற்கு சென்னையில் சுமார் 30 சதவீதக் கட்டுமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மேற்கு சென்னை மண்டலத்தில் பூந்தமல்லி, ஐயப்பந்தாங்கல், போரூர், மணப்பாக்கம். பெரும்புதூர் ஆகியவை குறிப்பிடத்தக்க பகுதிகளாக விளங்குகின்றன. மொத்த ரியல் எஸ்டேட் சந்தையில் இந்த இரு மண்டலங்களில் மட்டும் 90 சதவீதப் பணிகள் நடைபெறுகின்றன. எஞ்சிய 10 சதவீதம் மட்டுமே மத்தியச் சென்னை, தென்சென்னை ஆகிய மண்டலங்களில் நடைபெறுகின்றன.
தென்சென்னைக்கு உட்பட்ட ஓ.எம்.ஆர். சாலைப் பகுதியே வாடிக்கையாளர்களின் விருப்பப் பகுதியாக உள்ளது. இங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், அதிகாரிகள் இங்கு வீடு வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் பெருங்குடி-தரமணி பகுதிகளில் அலுவலகக் கட்டுமானப் பணிகளும் அதிகரித்துள்ளன. இதில் 60 சதவீதம் தகவல் தொழில் நுட்ப அலுவலகக் கட்டுமானப் பணிகளும், வங்கி, நிதி சேவை, காப்பீடு நிறுவனங்களின் கட்டுமானப் பணி 15 சதவீதமும், பொறியியல் நிறுவனங்களின் கட்டுமானப் பணி 7 சதவீதமும் அடக்கம். இங்கு வர்த்தக நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளும் நிலையானதாகவே உள்ளது என்கிறது ஆய்வறிக்கை.
சென்னையில் விலை நிலவரத்தைப் பொறுத்தவரை ஏற்றம் இறக்கமின்றி காணப்படுகிறது. ரூ.20 - 50 லட்சத்துக்கு உட்பட்ட விலையில் சொத்துகளை வாங்க அதிகக் கிராக்கி உள்ளது. நகருக்குள் மலிவாகக் கிடைக்கும் அளவுக்கு நிலங்கள் கிடைப்பதில்லை. எனவே நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஏற்ற விலையில் வீடுகள் கட்டி கொடுக்கக் கட்டுமான நிறுவனங்களால் முடியவில்லை. எனவே நகரப்பகுதிகளை விட்டு ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரைச் சாலை, மேடவாக்கம், பெரம்பூர், மாதவரம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறது இந்தியா ப்ராபர்டி.காம் ஆய்வறிக்கை.
தென்சென்னைக்கு உட்பட்ட பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் ஓரளவு குறைவான விலையில் நிலங்கள் கிடைக்கின்றன. விமானம், ரயில் போக்குவரத்து வசதிகள் நிறைந்த பகுதிகளாக இருப்பதால் கட்டுமான நிறுவனங்கள் இங்குத் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகின்றன. ஆனால், ஒரேயொரு குறையாக இங்குச் சிறுகுறு நிறுவனங்கள் பெருகி இருப்பதாலும் மாசு அதிகரித்துள்ளதாலும் பொதுமக்கள் முதலீடு செய்து வீடு, நிலம் வாங்க விரும்புவதில்லை.
சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் இப்படிச் சாதகமான பாதகமான விஷயங்கள் இருந்தாலும், புதிய கட்டுமானத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவது தொடர்கிறது. தென்சென்னையில் மட்டும் 2012ஆம் ஆண்டில் 60 சதவீதமாக இருந்த புதிய திட்டங்களின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் 74 சதவீதமாக உயர்ந்தது. அதேசமயம் இரு ஆண்டுகளுக்கும் உட்பட்ட பகுதியில் சென்னை நகரில் 30-35 சதவீதம் கட்டுமானத் திட்டங்கள் குறைந்துள்ளன என்கிறது ஆய்வறிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT